திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு வந்த ராஜேந்திரன் என்ற 5 வயது சிறுவனை அன்னை மணியம்மையாரும், தந்தை பெரியாரும் அங்குள்ள குழந்தைகள் இல்லத்தில் வளர்த்து, மகளிருக்கு மட்டும்தான் இவ்வில்லம் என்பதால் பிறகு அவர், திருச்சியிலும், எங்கள் வீட்டிலும் (வளர்த்தெடுக்கப்பட்டு) படிக்க வைக்கப்பட்டு, தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியவருமான திரு. ராஜேந்திரன் (வயது 57) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையை அவ்வப்போது பெற்று வந்த நிலையில் நேற்று (9.1.2025) இரவு 11.30 மணிக்கு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தோம்.
ராஜேந்திரனுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சூரனூர் என்ற குக்கிராமத்திலிருந்து நமது திராவிட விவசாயக் குடும்பத்தின் ‘பகுத்தறிவு’ என்ற பெண்ணை எனது தலைமையில் திருமணமும் நடத்தி வைத்து, அவர்களுக்கு 17 வயதுள்ள இதயா என்ற மகளும் உள்ளார்.
எப்படி ஆறுதல் கூறுவது – எப்படி ஆறுதல் பெறுவது என்றே தெரியவில்லை. அவரது துணைவியார் பகுத்தறிவு மற்றும் குடும்பத்தினருக்கு எங்களது கண்ணீர் மல்கும் ஆறுதல், எங்கள் பிள்ளை இராஜேந்திரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
10.1.2025