திருச்சி, ஜன. 10- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக 8.1.2025 அன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழக உறுப்பினர் இல. அனிதா வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தமது உரையில் ஜாதி, மத, இன பாகுபாடுகள் ஏதுமின்றி உழைக்கும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒப்பற்ற விழா பொங்கல் விழா. அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே விழா பொங்கல் விழா என்றும் ஆண்டான் அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒரே விதமாக கொண்டாடக்கூடிய திருநாள் பொங்கல் விழா என்றும் உரையாற்றினார். மேலும் பாகுபாடுகளற்ற சமத்துவ சமுதாயம் உருவாக தமது 92 வயதிலும் ஓய்வறியாது சமுதாயப்பணியாற்றி வருபவர் நமது நிறுவனத் தலைவர் ஆசிரியர் என்றும் பெரியாரியலுக்குள்ளே மருந்தியலும் வாழ்வியலும் அடக்கம். எனவே மாணவர்கள் பெரியாரியலை வாசிக்க வேண்டும். நேசிக்க வேண்டும் சுவாசிக்க வேண்டும் என்றும் உரையாற்றி அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
முனைவர் கோ. சத்தியபாலன்
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் துவக்கப்பள்ளியின் தாளாளருமான ஞா. ஆரோக்கியராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் அ.மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொங்கல் விழா நிகழ்ச்சியின் சிறப்புவிருந்தினர் தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் கோ. சத்தியபாலன் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்கள் பெயர் தாங்கிய இவ்வளாகத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதில் தாம் பெருமகிழ்ச்சி அடைவதாக தமது உரையை துவங்கினார்.
பொங்கல் தமிழர் திருநாளாக
மேலும் நாம் என்னவாக உருவாக வேண்டும் என்பதனை, நம்மைவிட காலமும் சூழ்நிலைகளும் தான் முடிவு செய்கின்றன என்றும் அப்படி காலத்தால் கலைத்துறையில் ஈர்க்கப்பட்டு இலக்கியப்பணிகளையும் மருந்தியல் துறைப்பணிகளையும் செய்துவருபவர் தாம் என்றும் உரையாற்றினார். தந்தை பெரியார் மக்களிடம் அதிகம் பேசப்பட்டதற்கான காரணம் அவர் சூழலியல் சார்ந்த தலைவர். மக்களுடனே இணைந்து அவர்களுக்கான பிரச்சனைகளையும் தீர்வுகளையும் ஆராய்ந்ததால்தான் காலம் கடந்தும் அவர் மக்கள் மனங்களில் நிற்கின்றார். அப்படிப்பட்ட தலைவரால்தான் பொங்கல் தமிழர் திருநாளாக அடையாளம் காட்டப்பட்டது. அதனை இன்றளவும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமுதாயம் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஒரு தலைவருக்காக அவர் பேச்சிற்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று தொடர்வண்டியையே நிறுத்தி வைத்த வரலாறு பெற்ற மக்கள் தலைவர் கல்யாண சுந்தரம் அவர்களின் பெயரால் இன்னும் வரலாறுகளை படைத்தவர்களின் பெயர்களில் இவ்வளாகத்தில் கட்டடங்கள் இருப்பது பாராட்டிற்குரியது என்றும், உண்மையான சமுதாயப்பணிகளை செய்யக்கூடிய இடங்களில்தான் இப்படிப்பட்ட அடையாளங்கள் இருக்கும் என்றும் உரையாற்றினார்.
குருதிக் கொடை
தமிழ்நாட்டின் கிழக்குத் திசை தந்தை பெரியார் அவர்கள்தான் என்றும் அவரின் கைத்தடிதான் இன்றும் நம்மை காக்கின்றன என்றும் உரையாற்றி பண்டைய காலங்களில் மேலை நாடுகளில் அதிகம் பரவியிருந்த மலேரியா போன்ற நோய்களை குணமாக்குவதில் மருந்தாளுநர்கள் குறிப்பாக நோபல் பரிசு பெற்ற பெண் மருந்தாளுநர்கள் குறித்த வரலாற்று செய்திகளை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக எடுத்துரைத்து தமிழர் தலைவரின் 92ஆவது பிறந்தநாளில் குருதிக் கொடை வழங்கியவர்கள், வாக்கத்தான்
அகில இந்திய பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பெரியார் உலகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நடைபயணப் (வாக்கத்தான்) பேரணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழகத்தின் துணைத் தலைவர் அ. லோகு நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. முன்னதாக மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.