முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜன. 9- நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிருவாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை’ என்று முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை

இது தொடா்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், திபாங்கா் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 130 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றியதாகவும்,
அப்போதிலிருந்து எதுவும் நடக்கவில்லை என்றும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, சட்டத்தின் கீழ் பரிந்துரைக் கப்பட்ட அணையின் பாதுகாப்புக்கு தேசியக் குழுவை ஒன்றிய அரசு இன்னும் அமைக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், அணை பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றிய போதிலும், நிா்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் வியப்படைகிறோம் என்று கூறினா்.
தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி தெரிவிக்கையில், தொடா்புடைய சட்டத்தின் கீழ், அணை பாதுகாப்பு ஆணையத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. அணையின் கட்டமைப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளது என்றார்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5(2)இன் கீழ், பிரிவு 5(1)இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட தேசியக் குழு, இச் சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 60 நாள்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும்,

அதன் பிறகு அக்குழு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் மீண்டும் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய தேசியக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தேசியக் குழுவின் அரசியலமைப்பு, அமைப்பு அல்லது செயல்பாடுகள் தொடா்பான விதிகள், விதிமுறைகள் கூட வகுக்கப்படவில்லை.

நோட்டீஸ்

இதனால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். மேலும், இச்சட்டத்தின்கீழ் தேசிய அணைப்பு பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு தொடா்பாக ஒன்றிய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் அவ்வமைப்பிடமிருந்து விவரம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக, முல்லைப்பெரியாறில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீா் அணைக்கு சேதத்தை ஏற்படுத்தினால் அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் 50 முதல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால், அணையின் பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரா் மேத்யூஸ் ஜெ.நெடும்பாறை கோரியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *