தமிழர் திருநாளாம் பொங்கல் நம் வாழ்வியலின் ஓர் அங்கம் – தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடைக்கு ஏற்ப நாமும் புத்துணர்ச்சியுடன் வாழ்வைத் தொடங்கும் உன்னத நாள்.
வாழ்த்து அட்டை
பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது இனிக்கும் கரும்பும், இன்பம் தரும் பொங்கல் வாழ்த்து அட்டையும்தான். சாதாரண வாழ்த்துகளா அவை? அம்மாவின் அன்பு, அப்பாவின் அறிவுரை, அண்ணனின் பாசம், மனதை கவர்ந்த காதலன் காதலியின் உளப்பூர்வ அன்பு என உறவுகளின் பாசத்தை சுமந்து வந்த அன்பின் பெட்டகம் அல்லவா?
பொங்கல் வாழ்த்து அட்டை வாங்கி அதில் கைப்பட வாழ்த்துச் செய்தி எழுதி கையெழுத்திட்டு தபால்தலை ஒட்டி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்த காலத்தை மறக்க முடியுமா?
அந்தக் காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைக்கு அமோக வரவேற்பு இருந்தது. மூடத் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் போடுவதைப் போல பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கடைத் தெருவில் வாழ்த்து அட்டைக் கடைகள் புதிதாக முளைத்திருக்கும்.
அரசியல் கட்சி தலைவர்கள்
அங்கு பெரிய பலகைகளில் சமுதாயத் தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள், இயற்கைக் காட்சிகள், பொங்கல் பானை, ஏர் கலப்பையுடன் செல்லும் உழவன் போன்ற படங்கள் பல வண்ணங்களில் அழகுடன் அச்சிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
அஞ்சல் அட்டை வடிவிலான அட்டை, இரட்டை கவருக்குள் வைத்து அனுப்பும் அட்டை என பல ரகத்தில் வாழ்த்து அட்டைகள் பளிச்சிடும். அட்டையின் முன்புறம் அருமையான காட்சிகளும் அற்புதமான வாழ்த்து செய்தியும் இடம் பெற்று இருக்கும்.
பிற்பகுதியில் முகவரி எழுதுவதற்கு தனி இடமும் பக்கத்தில் தாம் மனசுக்கு பிடித்த வாசகங்களை எழுத இடம் இருக்கும். என்ன எழுதுவது என நீண்ட நேரம் யோசித்து ஒவ்வொருவரும் கவிஞராக மாறி வாசகத்தை எழுதி முகவரி எழுதும் போதே உற்சாகம் பீறிட்டு வரும். யாருக்கு வாழ்த்து அனுப்புகிறோமோ அவர்கள் முகம் கண்முன் நிழலாடும் அவர்களை மனதில் நினைத்தபடியே தபால் தலை ஒட்டி அனுப்பி மகிழ்ந்த காலம் கனா காலமாகி விட்டதே! பொங்கல் வாழ்த்து காதலர்களுக்கு புறா விடு தூதாகவே அமையும். சிலர் வாழ்த்து அட்டையுடன் ‘சாக்லேட்’ இணைத்து அனுப்பி இருப்பர். அந்த அன்புக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
அந்த அன்பின் கருவூலத்தை சுமந்து வரும் தபால்காரரின் வருகையை வழிமீது விழி வைத்து காத்திருந்த காலங்கள் சுகமானவை. தபால்காரரின் சைக்கிள் மணி ஓசை கேட்டதும் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் ஓடோடி வந்து அவரை சூழ்ந்து கொள்வர்.
வாழ்த்து யாருக்கு வந்து இருக்கிறது என்று அவர் பெயர் சொல்லும் போது, நமது பெயரை சொல்ல மாட்டாரா என்ற ஆவல் உள்ளத்தில் முந்தி தள்ளும். தபால்காரரிடம் இருந்து வாழ்த்தைப் பெற்றவர் அதை பலரிடம் காட்டி மகிழ்ந்ததெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகள்.
எத்தனையோ பரிசு பொருட்களில் கிடைக்காத மனநிறைவு சிறிய வாழ்த்து அட்டை மூலம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேதும் இல்லை. நண்பர்களுக்கு வாழ்த்து கார்டில் சிலர் தபால் தலை ஒட்ட மறந்து இருப்பார்கள். அதற்குரிய தொகையை தபால்காரர் நம்மிடமே வசூலித்து வீட்டில் பெரியவர்களிடம் திட்டு வாங்கிய சம்பவமும் நடந்ததுண்டு.
ஒருவருக்கு அதிகமான அட்டைகள் வந்து இருந்தால் அைத அவர் மற்றவரிடம் காட்டி பெருமைபட்டுக் கொள்வார். நண்பர்களிடம் முன்னதாகவே கார்டு அனுப்பிய விவரத்தை சொல்லி பதிலுக்கு அவர் அனுப்பும் வாழ்த்தினை எதிர்பார்த்து காத்து இருந்த காலம் இனி வருமா?
2000ஆம் ஆண்டுக்குப் பிறகு அலைபேசி வருகைக்கு பின் எஸ்.எம்.எஸ். மூலமாக வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. வாழ்த்து அட்டை அனுப்பும் நடைமுறை பின்னடைவை சந்தித்தது. இ–மெயிலில் தங்களுக்கு பிடித்த படங்களை அனுப்பத் தொடங்கியது. இன்று அலைபேசியும், இணையமும் இணைந்து விட்ட சூழலில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் வாழ்த்து அட்டைகள் இடத்தை முழுமையாக ஆக்கிரமித்து விட்டன. மெசெஜ் படங்களை தேர்ந்தெடுத்து ேஹப்பி பொங்கல், பொங்கல் நல் வாழ்த்துக்கள் என பதிவிட்டு வாழ்த்து அட்டை தரும் இன்பங்களை இழந்து விட்டோம்.
சின்ன சின்ன சந்தோஷங்கள் மனிதனை உயிர்ப்புடன் வாழ வைக்கும். காணாமல் போன தந்தி, ரேடியோ வரிசையில் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கமும் காலாவதியாகி போனது. வாழ்த்து அட்டை தன் பயணத்தை மீண்டும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும். ஆனாலும், மாற்றம் என்பதே மாறாதது.