ஆண்டின் தொடக்கத்தில் சட்டப் பேரவைக்கு ஆளுநரை அழைத்து, அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாயிலாக நிகழ்த்தச் சொல்லுவது என்பது சட்டப்படியான மாநில அரசின் ஒரு நடைமுறை!
ஆளுநர் வெளியேறினாலும் சட்டப் பேரவைத் தலைவர் வாயிலாக அந்த உரை படிக்கப்படுகிறது. அவ்வுரையில் தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களும், சாதனைகளும் அடுக்கடுக்காக இடம் பெற்றிருந்த காரணத்தால் அதைப் படிக்க விரும்பாத – மனம் வராத காரணத்தால் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வெளியேறுவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழமையாகக் கொண்டுள்ளார்.
உண்மையில் தமிழ்நாடு அரசின் அந்த உரை என்ன சொல்லுகிறது என்பது முக்கியமாகும்.
முந்தைய ஆண்டுகளில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த நிலையில் நமது மாநிலத்தின் பங்கு 9.21 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி அடைவதுடன் மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அரசின் தலைசிறந்த திட்டங்களுள் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ‘பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க வகைசெய்யும் மகளிர் விடியல் பயண திட்டம்’ மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.
மதிய உணவுத் திட்டம், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதன்முதலாக நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதன் மூலம் தொடங்கப்பட்டதே ஆகும். இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சூடான, சத்தான காலை உணவு நாள்தோறும் வழங்கப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ‘புதுமைப் பெண் திட்டம்’ எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் இந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அனைத்துப் பெண்களுக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வதில் வெற்றிகண்ட நமது அரசானது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் மட்டும் 3.52 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மருத்துவக் கட்டமைப்பை பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஒப்பிடக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விகிதம் 2.5:1000 என்ற உயர் அளவில் அமைந்துள்ளது.
விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான இலக்குகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தீட்டுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களைத் திரட்டிட தேசிய அளவிலான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்றியமையாதது.
எனவே, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன், இம்முறை ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாறி வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் தேசிய அளவில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்திட ஏதுவாக இதுவரை 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (CNAM) இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சுமார் நான்கு இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும் பால் கொள்முதல் விலை ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதி நிலவிடவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திடவும் அரசால் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் மொத்தப் பெண் தொழிற் பணியாளர்களில் 41 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு விழாவில் பங்கேற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் மறுசீரமைக்கப்பட்ட நினைவகம் மற்றும் நூலகத்தினை திறந்துவைத்தார்
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தீவிர ஈடுபாடும். குறிப்பாக கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கும் உரிமையைப் பெற்றுத் தந்ததில் அவரது பங்களிப்பும் இந்தியாவில் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான பாதையை வகுத்தன. தந்தை பெரியாரின் வழியில் வந்த நமது அரசானது பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தினைச் செயல்படுத்தியது.
முதலமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம், பன்னாட்டு அளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இதுவரை உலகெங்கும் இருந்து 6 இலட்சத்திற்கும் மேலான பொதுமக்களும் பார்வையிட்டுள்ளனர்.
சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் பரிவு ஆகிய கொள்கைகளைச் சிறிதளவும் பிறழாது கடைப்பிடிக்க இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந் தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் இந்த அரசை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன – எதிர்காலத்திலும் வழிநடத்தும்.
இத்தகு அறிவிப்புகளும், செயல்பாடுகளும், தரவுகளும் அடங்கிய பேழைதான் தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட ஆவணமாகும்.
இவற்றைப் படிக்க ஆர்.எஸ்.எஸ். ஆளுநருக்கு எப்படி மனம் வரும்? அதனால்தான் வெளி நடப்புத் தந்திரம்!
மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்!