சென்னை ஜூலை 19 சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் இரண்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க, ஒன்றிய அரசுக்கு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியம், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடியது.
இதில் எடுத்த முடிவின்படி, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகிய இருவரையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, ஒன்றிய அரசுக்கு, கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
ராகுல் காந்தியின் மேல்முறையீடு
உச்ச நீதிமன்றம் 21ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, ஜூலை 19 கர்நாடகாவின் கோலாரில் கடந்த 2019-இல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பெயர் வந்தது எப்படி?’’ என்று பேசினார். இதையடுத்து, மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்து விட்டதாகக் கூறி, குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், தண்டனைக்கு தடை விதிக்க சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது
. இது தொடர்பான மேல் முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று (18.7.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 21-ஆம் தேதி இந்த வழக்குவிசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்தார்.