பொங்கல் நாளில் நடத்துவதா? யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றுங்கள் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

2 Min Read

சென்னை, ஜன. 8- தமிழ்நாட்டில் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

யுஜிசி-நெட் தேர்வு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணி நியமனம் பெறுவதற்கு நடத்தப்படும் யுஜிசி-நெட் எனப்படும் தகுதித் தேர்வு வருகிற 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 14ஆம் தேதி பொங்கல் திருநாள். அதனால் இந்தத் தேர்வை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருநாளான பொங்கல் திருநாள் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநாள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருநாள். தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் டிச.23ஆம் தேதியன்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எழுதியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருநாள் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாள்கள் உற்சாகமாக கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாள்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு திருநாள் மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இந்தப் பொங்கல் திருநாளைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். இதே காரணத்துக்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கெனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தேதியை மாற்றுங்கள்

எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாள்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது. அப்போதுதான், அறுவடைத் திரு0விழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் திருநாள் காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *