பல சுவைமிக்க தகவல்கள் இருப்பதாக புத்தகப் பிரியர்கள் புகழாரம்
சென்னை, ஜன .6 பபாசி நடத்தும் 48-ஆவது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, தொடங்கப்பட்ட புத்தக காட்சி, ஜனவரி 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது.
புத்தக பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான புத்தக காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. புத்தக காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
900 அரங்கங்கள்
மேலும், புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான படைப்புகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில், ஒவ்வொரு நாள் மாலையில் சிந்தனை அரங்கில், தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உரைகள் இடம் பெறுகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் விற் பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர், காந்தியார் மற்றும் வ.உ. சிதம்பரனார் போன்ற தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் புத்தகங்களை வாங்கி செல்லும் வகையில் 9 நுழைவு வாயில்கள் மற்றும் நான்கு வெளிவரும் வாயில்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும், அடிப்படை தேவை யான கழிப்பறைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு எண் F -21
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட புத்தக அரங்கம் இந்த ஆண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் புத்தகப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலர் ஆர்வமுடன் வாங்கி படித்தனர். இதுகுறித்து புத்தக பிரியர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நூலை வாங்கிச் சென்றோம். அதில் பல சுவைமிக்க தகவல்கள் மற்றும் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம் உள்ளதால், இந்த ஆண்டு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பரிசளிக்க வாங்கிச் செல்வதாக கூறினார்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை புத்தகக் கண்காட்சி அரங்கை பெரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதைக் காணமுடிகிறது.
பொங்கல் விடுமுறை தொடர்ந்து வருவதால் புத்தகக் கண்காட்சியை மேலும் நீடிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.