24 கட்சிகளுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை;
7 கட்சிகளுக்கு எம்எல்ஏ-வும் கூட இல்லை!
டில்லியில் பா.ஜ.க. கூட்டிய 38 கட்சிகளின் லட்சணம் இதுதான்!
புதுடில்லி, ஜூலை 20 – எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைந்துள்ள நிலையில், கலக்கம் அடைந் திருக்கும் பாஜக, தங்களால் வெட்டி விடப்பட்ட மற்றும் விட்டால் போதும் என தங்களை விட்டு ஓட்டம் பிடித்த பழைய கூட்டணிக் கட்சிகளை கெஞ்சி கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக் கிறது. இவர்களுக்காக கடந்த 18 ஆம் தேதியன்று டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறும் என்றும் இதில் 38 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் பாஜக அறிவித்தது. வாஜ் பாய் காலத்தில் கூட 28 கட்சிகள்தான் கூட்டணியில் இருந்தன; ஆனால், மோடி ஆட்சியில் அதைக்காட்டிலும் அதிகமாக 38 கட்சிகள் இருப்ப தாக பாஜக தன்னைத்தானே தேற்றிக் கொண்டது. சிவசேனா, தேசியவாத காங் கிரஸ், அதிமுக, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் எல்லாம் பாஜக கூட்டணியில் ஏற்கெனவே இருந்தவை. ஆனால், கூட்டணியில் இருக்கும்போதே அக்கட்சிகளை உடைத்த பாஜக, தங்களால் உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் தலைவர்களை அந்தக் கட்சிகளுக்கு தலைவர்கள் ஆக்கியுள்ளது.
இந்தக் கட்சிகளை தொடங்கியவர்களில், உண் மையான தலைவர்கள் பலர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், டூப்ளிகேட் தலைவர்களை காட்டி, அவர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக பாஜக கணக்குக் காட்டியது. இதில், அதிமுக-வைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கு மட்டுமே அழைப்பு அனுப்பி, ஓ. பன்னீர்செல்வத்தை கைவிட்ட பாஜக, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியில், துண்டாடப்பட்ட 2 பிரிவுகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி யை விட்டு வெளியேறி விட்டதாக பாமக அறிவித்திருந்த நிலையில், அந்தக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ள பாஜக, தங்களோடு தொடுக்கிக் கொண்டுள்ள தேமுதிக-வை கைவிட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்தே வெற்றி பெறும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே ஒட்டப்பிடாராம் தொகுதியில் டெபாசிட்டை பறிகொடுத்தார். அவருக்கும், தாங்கள் வென்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு தயங்கி ஒதுங்கிக் கொண்ட ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா ஆகிய கட்சிகளுக்கும் பாஜக அழைப்பு அனுப்பி, முக்கியமான கட்சிகள் என்று கணக்குக் காட்டி யுள்ளது.
பஞ்சாப்பில் அகாலிதளத்தின் ஒரு கோஷ்டி, மகாராட்டிராவில் யாருக்குமே தெரியாத பிஜேபி(PJP), ஆர்எஸ்பி (RSP), ஜேஎஸ்எஸ் (JSS) மணிப்பூரின் குக்கி மக்கள் முன்னணி, மேகாலயாவின் யுடிபி, எச்பிடி, உ.பி.யைச் சேர்ந்த நிஷாத் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பீகார் அவாமி மோர்ச்சா, ஆந்திரா வில் பவண் கல்யாணின் ஜனசேனா, கேரளாவில் பாரத் தர்ம சேனா, கேரளா காமராஜ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் 38 கட்சிகள் கூட்டணி பட்டியலில் பாஜக காட்டியுள்ளது. இவையெல்லாவற்றையும் விட முக்கிய மானது என்னவென்றால், இந்த 38 கட்சிகளில் 24 கட்சிகளுக்கு மக்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லை. 9 கட்சிகளுக்கு மட்டும்தான் எம்.பி.க்கள் உள்ளனர். 27 கட்சிகளுக்கு மாநிலங்களவையிலும் ஒரு எம்.பி. கூட இல்லை. 7 கட்சிகளுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இது தான் பாஜக கூட்டியிருக்கும் 38 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு (?) ஆகும்.