குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்த பின்னர் போராட்டம் எதற்கு?

Viduthalai
2 Min Read

கனிமொழி எம்.பி. கேள்வி

சென்னை, ஜன.5 சென்னை, தென்மேற்கு மாவட்டம், திமுக மகளிரணி – மகளிர் தொண்டரனி சார்பில் சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் அரங்கில் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய கனிமொழி, இன்றைக்கு ஆட்சிக்கு வர முடியாதவர்கள் வாய் வார்த்தையின் மூலம் அனைத்து விஷயங்களை மக்களுக்கு செய்கிறேன் என்று கூறுவார்கள். நமது நம்பிக்கைக்கு உரியது போல் பேசுவார்கள், நிதர்சனத்தில் இல்லாத விஷயங்களை நாம் நம்பக்கூடிய அளவிற்கு கட்டமைத்து பேசுவார்கள், ஒரு சிலர் சரித்திரத்தை மாற்றி பேசுவார்கள்.

அடுத்த தலைமுறைக்கு…
நாம் பொய் சொல்கிறோம் என்ற கவலையும், பயமும் இல்லாமல் கூறி வருகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. இது போன்ற தவறான செய்திகள் நம்மை வந்து அடையும் காலகட்டத்தில் இருக்கிறோம். மேடையில் பேசிக் கொண்டிருக்கும் தலைவர்களும் தாங்கள் என்ன பேசுகிறார்கள் என்ற நிதானம் இல்லாமல் பேசி வருகிறார்கள். உண்மை என்பது என்னவென்று தெரியாமல் முடிவெடுப்பது நம் அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய தவறாக நடந்துவிடும்.
திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு பிடிக்கவில்லை. அதை குறித்து அவர்களுக்கு முழுமையாக அறியாமலேயே தவறாக பேசி வருகிறார்கள். அய்ரோப்பிய அமெரிக்கா நாடுகளில் 1911ஆம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. இதற்கான போராட்டத்தில் பெண்கள் சிறைக்கு சென்றார்கள்.

பெண்கள் உரிமை
ஆனால், இந்தியாவிலேயே முதல் முதலாக 1920 இல் நமக்கு எந்த போராட்டமும் இல்லாமல் நமக்கு ஓட்டுரிமை கொடுத்தது திராவிட கட்சி தான். பெண்கள் தங்களுக்கு உண்டான உரிமையை கேட்கமுடியாமல் இருந்தார்கள்.
பெண்களுக்கு சொத்துரிமை, இலவச கல்வி இவை அனைத்தும் பெற்று தந்தார் தந்தை பெரியார். இதனை கொண்டு வருவது என்பது சாதாரணமாக செய்ய முடியாது. பெண்கள் படிக்கவேண்டும் என்பதற்காக ‘புதுமை பெண்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. என கனிமொழி பேசினார்.
இந்நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு வரை நியாயம் கிடைக்கவில்லை. நமது பிரதமர் இதுவரை என்னவென்று போய் கேட்கவில்லை, ஆனால் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு குற்றம் நடந்திருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
நம்முடைய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கை எடுத்த பிறகு நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு அந்த குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணிற்கான ஒரு நியாயம், அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியலாக்கப்படுகிறது
இந்த நிகழ்வுக்கு சமூக ஊடகங்களில் நான் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன். யார் அந்த சார் என்ற விவகாரத்தை குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இது குறித்து விசாரணையின் பிறகே தெரியும். அப்படி ஒரு நபர் இல்லை என்பது உறுதி செய்யப்படலாம். இந்த நிகழ்வு அரசியலாக்கப்படுகிறது நடவடிக்கை எடுத்தும் எதிர்க் கட்சிகள் இதை அரசியலாக்க பார்க்கிறது. தொழில்நுட்ப கோளாறால்தான் எஃப்.அய்.ஆர் வெளியானது என தேசிய தகவல் மய்யமே தெரிவித்துள்ளது. இதில் நிச்சயமாக தமிழ்நாடு அரசை குற்றம் சாட்ட முடியாது. என கனிமொழி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *