திருக்குறளை குறித்து பெருமைமிகு பதிவுகள் பல வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு குறளுக்கு ஒரு ஓவியம் என்று எழுதி குறளோவியம் படைத்தார் கலைஞர்.
அந்த கலைஞருக்கு குறளோவியத்தை கடலின் நடுவே சிலையாக நிற்கவைத்துப் பார்க்கும் ஆசை. அது ஒரு தனிநபரின் ஆசை என்று பார்க்கக் கூடாது. அது திராவிட நாகரீகத்தின் கம்பீரம்.
ஹிந்துத்துவ அடையாளம்
இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே காஷ்மீர் முதல் குமரி முனை வரை ஹிந்துத்துவ அடையாளங்களை நிறுவ வேண்டும் என்ற வெறியோடு அலைந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 அங்கு கால் வைக்க கூட அனுமதிக்கவில்லை. அதே போல் வங்கத்தில் துவக்க காலத்தில் இருந்தே வலுவாக பொதுவுடமைக் கட்சிகள் இருந்ததால் அவர்களால் ராமகிருஷ்ணா மடத்தைக் கூட கிழக்கின் ஹிந்துத்துவ அடையாளமாக மாற்ற முடியவில்லை. இருப்பது மேற்கு மும்பையும் குஜராத்தும் தான். ஏற்கெனவே இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் வந்ததன் நினைவாக அங்கே எழுப்பப்பட்ட கேட்வே ஆப் இந்தியா என்ற ஒரு வரலாற்று நினைவுச்சின்னத்தை அடையாளமாக கொண்டு விட்டது.
25 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் தலைவராகவும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடைசெய்தவருமான சர்தார் வல்லபாய் படேலுக்குத்தான் சிலை வைக்க முடிந்ததே தவிர ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர ஹிந்துத்துவ அமைப்பினரின் அடையாளத்தை அங்கேயும் நிறுவ முடியவில்லை.
இதனால் இருப்பது ஒன்றே ஒன்றுதான் அது குமரி முனை. எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இந்தியாவின் கடைசி முனை என்ற ஒரே அடையாளத்தை கொண்டதால் அதனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறிவைத்தது.
அங்கே விவேகானந்தர் தியானம் செய்தார் என்ற ஒன்றே அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது.
சவேரியார் என்ற கிறிஸ்தவ மதத்துறவி 16ஆம் நூற்றாண்டில் மணப்பாடு கிராமத்தில் வாழ்ந்த போது அவர் குமரிமுனைக்கு சென்று வந்த பதிவுகள் உள்ளன. அப்போதிருந்தே அந்தப் பாறை மீது கிறிஸ்தவ மீனவர்கள் சிலுவை ஒன்றை வைத்து முக்கிய நாட்களில் சென்று வழிபட்டு வந்தனர்.
ஆர்.எஸ்.எஸின் முயற்சி
இந்த நிலையில் தான் விவேகானந்தர் 1892-ஆம் டிசம்பர் 25ஆம் தேதி இந்தப் பாறையில் மூன்று நாள் தவமிருந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விவேகானந்தர் பெயரில் ஒரு ஹிந்துத்துவ அடையாளத்தைக் கொண்டு செல்ல முடிவுசெய்தது. அதன் படி முதலமைச்சர் பக்தவச்சலத்தை சந்தித்தனர். அங்கிருந்து அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர், வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விவேகானந்தர் நினைவிடம் அமைக்கப் பலத்த முயற்சிகள் மேற்கொண்டு இறுதியில் கலைஞர் அந்தப்பணியை முடித்துக்கொண்டுத்தார்.
கலைஞருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள்நோக்கம் புரிந்தது, விவேகானந்தருக்கு நிகரான ஒரு அடையாளத்தை குமரிமுனையில் நிறுவ அவர் முடிவெடுத்தார். விவேகானந்தர் என்று பொதுவாக ஊரார் கூறினாலும் அது ஆரிய அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அழுத்தமாகவே கூறி பெருமையடித்துக்கொண்டனர்.
இந்த நிலையில் தான் பூம்புகார் கண்ட கலைஞர் வள்ளுவனுக்கு சிலை அமைக்க முடிவு செய்தார்.
இங்கு ஒரு வரலாற்றை நினைவில் கொள்ளவேண்டும். மும்பை கடலில் மாவீரன் சத்திரபதி சிவாஜி சிலையை அமைக்கவேண்டும் என்று முதல் மகாராட்டிரா முதலமைச்சராக இருந்த யஷ்வந்தராவ் சவுகான் முதல் – முதலமைச்சராக இருந்து தற்போது பவர் இழந்தவராக இருக்கும் ஏக் நாத் ஷிண்டேவரை முயற்சி செய்தார்கள். ஆனால், அது முயற்சியாகவே இன்றும் இருக்கிறது. காரணம் சிவாஜி சூத்திரன் என்ற ஒரு காரணம் மட்டுமே, ஆட்சி அதிகாரத்தை ஆட்டுவிக்கும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களுக்கு வாக்கு வங்கிக்கு சிவாஜியின் முகமூடி மட்டுமே தேவை – மற்றபடி அவர்களால் சிவாஜியை மன்னராக ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான் திராவிட இனத்தின் காப்பாளரான கலைஞர் ஆரிய அடையாளத்திற்கு மேலான ஒரு அடையாளத்தை நிறுவ முடிவு செய்தார்.
திட்டமிட்டு அமைக்கப்பட்ட சிலை
மொத்தம் 3,681 கற்களைப் பயன்படுத்தி ஆதாரப் பீடம் அமைக்கப்பட்டது. முகம் 10 அடி உயரம், 40 அடி உயரத்தில் கழுத்து இடுப்பு பகுதிகள், 40 அடி உயரத்தில் இடுப்பு முதல் கால்பாதம் வரையும், கொண்டை பகுதி 5 அடியிலும் அமைக்கப்பட்டு திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தை எட்டியது. மொத்தம் ரூ.6.14 கோடி செலவில் பணியாளர்கள், சிற்பிகள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் என 150க்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றிற்கு 16 மணி நேரம் உழைப்பில் உருவானது.
சிலையின் இடுப்பு வளைவு சற்று சவாலாக இருந்தாலும் நவீன அறிவியல் துணையோடு இதனை மர மாதிரி உருவாக்கி அதன் எடை மய்யத்தை அளந்து அதன் பின்னர் கட்டப்பட்டது. கன்னியாகுமாரி, அம்பாசமுத்திரம் மற்றும் சோழிங்கநல்லூர் என மூன்று சிலைக்கூடங்களில் பணிகள் நடைபெற்றன. அம்பாசமுத்திரத்திலிருந்து 5000 டன் எடை கொண்ட கற்களும், சோழிங்கநல்லூரிலிருந்து 2000 டன் தரமான கருங்கற்களும் வந்தன. 13 அடி நீளமும் 15 டன் எடையும் கொண்ட பெரிய கற்கள் மட்டும் 3,681 டன் ஆகும். மற்றவை மூன்றிலிருந்து எட்டு டன் எடை கொண்டவை. காது, மூக்கு, கண், வாய், நெற்றி பகுதிகளுக்கான கற்கள் கையால் செதுக்கப்பட்ட ஒரே கற்களாகும். பனைமரமும், சவுக்கு மரமும், இரும்புக் கம்பிகளும், சாரங்கட்டப் பயன்பட்டன. மொத்தம் 18,000 சவுக்கு மரங்கள் கொண்டு இரண்டு சரக்குந்து கொள்ளளவு கொண்ட கயிற்றால் முழு சாரமும் கட்டப்பட்டது. இறுதியாக 2000 ஜனவரி 1ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்.
தொழில்நுட்பம்
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் உறுதித் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லாலான உத்திரங்களும், கட்டமைப்புகளும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
மண்டபத்தின் உட்புறச் சுவரில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சுனாமிக்கே சவால்
2000ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி திறக்கப்பட்ட இந்தச் சிலைக்கு முதல் சோதனை 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமியின் போது வந்தது. சிலையை முழுமையாக தாக்கி எழுந்த அலை வான்புகழ் வள்ளுவனின் புகழ்கண்டு பணிந்து தணிந்தது.
அதே போல் முதல் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும் சிலை கம்பீரமாக நின்றது குறிப்பிடத்தக்கது.