தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம்!

2 Min Read

சென்னை,ஜன.3- தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் ஓராண்டு கால தொழில் பயிற்சி திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம்

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் கணிசமானோர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமா படிப்பில் சேருகிறார்கள். அதேபோல், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். அரசு பாலிடெக்னிக், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் என 450க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்.

ஒரு காலத்தில் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் சேர இடம் கிடைப்பது கடினமாக இருந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஒவ்வொரு கல்லூரியிலும் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 300 இடங்கள் இருந்தாலும் அதில் 50 சதவீத இடங்களே நிரம்புகின்றன.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமா படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கவும், இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை உடையவர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டத்தை (Industrial Training Program) நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பருவநிலைத் தேர்வு

இத்திட்டத்தின்படி, 3 ஆண்டு கால படிப்பில் மாணவர்கள் கடைசி ஓராண்டு ஏதேனும் ஒரு தொழில்பயிற்சி மய்யத்தில் நேரடி பயிற்சி பெறுவார்கள். அந்த மய்யம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அனுமதி பெற்றதாக இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகள் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து அங்கு தற்போதைய முறையில் தேர்வெழுதுவார்கள். 3ஆம் ஆண்டு முழுவதும் கல்லூரிக்கு வெளியே குறிப்பிட்ட தொழில் பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் தியரியுடன் செயல்முறை திறன், தகவல் தொடர்புத்திறன், நேரடி தொழில்பயிற்சி போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

அந்த மய்யத்தில் மாணவர்களுக்கு இரண்டு பருவநிலைத் (செமஸ்டர்) தேர்வுகள் (அக்டோபர் மற்றும் ஏப்ரல்) நடத்தப்பட்டு குறிப்பிட்ட மதிப்பெண் (கிரெடிட்) வழங்கப்படும்.

மதிப்பெண் விவரங்கள் மாணவர்கள் படித்து வந்த தொழில்நுட்பக் கல்லூரியில் சமர்ப்பிக்கப்படும். 3 ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் டிப்ளமா வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். இத்திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்த மாணவர்கள் அதன் பிறகு பழைய முறைக்கு மாறிக்கொள்ள முடியாது.

இத்திட்டத்துக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டு இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப்பெற்றுள்ளது.

இந்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டம் குறித்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளின் முதல்வர்களுக்கு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் அறிவுரை வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *