சென்னை, ஜன.3- மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்க ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டத்தை இம்மாதம் அமல்படுத்த இருப்பதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு 242 புதிய பிஎஸ் 6 பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. 502 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
ஒரே அட்டையில் பயணச் சீட்டு
ஏசி பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 320 ஏசி பேருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டுள்ளது.
இதை மேலும் அதிகரிக்கும் திட்டமும் உள்ளது. வரவுக்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாசத் தொகை ரூ.300 கோடி, பணிமனை மேம்பாட்டுக்காக ரூ.111 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 1,559 பேருந்துகளின் எண்ணிக்கை 1,655-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பயணச்சீட்டு கருவி வாயிலாக 99.9 சதவீத பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. மொத்தம் 1.3 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டை பயணிகள் பெறுகின்றனர். மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் என்சிஎம்சி அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம் இம்மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் 2 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்.
செயலி வாயிலாக பயணச்சீட்டு பெறும் திட்டம் இவ்வாண்டு பாதிக்குள்ளாக செயல்படுத்த இருக்கிறோம். சிக்னல்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் ஜனவரி இறுதிக்குள்ளாக செயல்படுத்தப்படும்.
மேலும் 850-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கான மின்விசிறி, 2,248 பேருந்துகளில் விபத்தை தடுக்கும் வகையில் கம்பி ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. 109 பேருக்கு வாரிசு வேலை வழங்கப்பட்டுள்ளது. திட்டமிட்டதைவிட 10 சதவீத பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம்.
சராசரியாக நாளொன்றுக்கு 32.19 லட்சம் பயணிகள் மாநகர பேருந்துகளில் பயணிக்கின்றனர். கட்டணமில்லா பயணத் திட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10.28 லட்சம் பெண்கள், சுமார் 7,483 மாற்றுத்திறனாளிகள், 547 திருநங்கைகள் பயன்பெறுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது