சென்னை, ஜன.3 இளம் தொழில் முனை வோருக்கான ‘எஸ்கான்’ மாநாடு சென்னை வர்த்தக மய்யத்தில் நாளை (ஜன.4) தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.
மாநாடு
தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் இளம் தொழில்முனைவோர் மய்யம் சார்பில் நடத்தப் படும் ‘எஸ்கான்’ மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இளம் தொழில்முனைவோர் மய்யத்தின் தலைவர் வி.நீதி மோகன், துணைத் தலைவர் ஏ.ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அ.நடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.முருகேசன் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: “தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர் கொள்ளவும், தொழில் ரீதியான பயிற்சிகளை வழங்கவும் இளம் தொழில்முனைவோர் மய்யமானது கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை மூலம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது இந்தியாவை உலகின் நம்பர்-1 பொருளாதார நாடாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை, கோவை, சேலம் உட்பட 30 கிளைகளுடன் 3700 உறுப்பினர்களை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அமைப்பின் உறுப்பினர் களாக இருக்கும் இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சியினை கொண்டா டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘எஸ்கான்’ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளம் தொழில்முனைவோர் மய்யத்தின் 13-ஆவது ‘எஸ்கான்’ மாநாடு, சென்னை வர்த்தக மய்யத்தில் வரும் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கண்காட்சி
‘நோக்கத்தை நாடி’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் வணிக உத்திகள், தலைமைத்துவ திறன்கள் குறித்து தொழில் வல்லுநர்கள் உரை யாற்றுகின்றனர்.
இதில் 2,500-க்கு மேற் பட்ட இளம் தொழில் முனைவோரும், 500-க்கும் மேற்பட்ட விருந் தினர்களும் பங்கேற் கின்றனர். மாநாட்டையொட்டி நடத்தப்படும் ‘எஸ்மார்ட்’ வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பதிவுசெய்த தொழில் முனைவோரின் 270 அரங்குகள் இடம் பெறவுள்ளன. மாநாட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார்” இவ்வாறு அவர்கள் கூறினார்.