அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை, ஜன. 3- மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவன் பேச்சும் – ‘பெரியார் டி.வி.’ ஒளிபரப்பும் குற்றம் இல்லை! என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று அய்ரோப்பிய ஒன்றிய பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கில் பல நாடுகளிலிருந்தும் கருத்தாளர்கள் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று உரையாற்றினர்.
பெரியார் மேற்கொண்ட இயக்கத்தின் தேவை, இந்தியச் சூழலில் அவசியமானது
அந்தக் கருத்தரங்கில், “பெரியாரும் இந்திய அரசியலும்” என்ற தலைப்பில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் “ஸநாதனத்தைப் புரிந்து கொள்ளாமல், அதை ஏன் பெரியார் எதிர்த்தார் என்று புரிந்து கொள்ள முடியாது” என்று பல்வேறு சான்றுகளை முன்வைத்து உரையாற்றினார். ஹிந்துதர்மம், மனுதர்மம், ஸநாதனம், பார்ப்பனியம் போன்றவை முன்னிறுத்தும் கோட்பாடுகளை எதிர்த்துப் பெரியார் மேற்கொண்ட இயக்கத்தின் தேவை, இந்தியச் சூழலில் அவசியமானது என்றும் அவர் பேசியிருந்தார்.
வரவேற்பை பெற்றது
அந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை நேரலையில் பெரியார் வலைக்காட்சி ஒளிபரப்பு செய்திருந்தது. தனித்தனி காணொலிகளாகவும் பின்னர் வெளியிட்டது. மனுதர்மத்தில் பெண்கள் மீதும் சூத்திரர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் எத்தகைய இழிவுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதை மனுஸ்மிருதியின் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டி அவர் ஆற்றிய உரை பெரும் வரவேற்பை பெற்றது.
இரண்டாவது எதிரியாக பெரியார் வலைக்காட்சி
வழக்கம்போல இந்த உரையைத் திரித்து, இந்துப் பெண்களுக்கு எதிராக வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பேசி விட்டதாக ஆர்.எஸ்.எஸ், பாஜக ஹிந்துத்துவக் கும்பல் பொய்யான செய்திகளைப் பரப்பியது. அதன் தொடர்ச்சியாக பேரையூரைச் சேர்ந்த டாக்டர் வேதா (எ) தாமோதரன் என்பவர் கொடுத்த தனிநபர் புகாரின் அடிப்படையில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் (இ.பி.கோ 120பி, 295ஏ, 298, 500, 509 ஆகிய பிரிவுகள் மற்றும் தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67) மதுரை பேரையூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் இரண்டாவது எதிரியாக பெரியார் வலைக்காட்சியும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.
எவ்வித உள்நோக்கமும் இல்லை
இது தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மனு தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்களை மட்டுமே தான் எடுத்துக்காட்டியதாகவும், வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் தனது மனுவில் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது தொல் .திருமாவளவன் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் எஸ். தீபிகா, மனுஸ்மிருதியில் பெண்களை எவ்வாறு சித்தரித்து இருந்தார்கள் என்பது குறித்துதான் தொல்.திருமாவளவன் பேசியதாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையையும் அவராகக் கூறவில்லை என்றும் வாதிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இணைய தள தீர்ப்பு!
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி வேல்முருகன் 2024 டிசம்பர் 21 அன்று வழக்கின் தீர்ப்பை வழங்கினார். விடுமுறைக்குப் பிறகு நேற்று (02.01.2025) இயங்கத் தொடங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் இணைய தளத்தில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தரப்பு வழக்குரைஞர் வாதத்தை ஏற்றுக் கொண்டு நீதிபதி மனுஸ்ருதியின் தமிழ் மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்லோகங்களை மட்டுமே எடுத்துக்காட்டி, தனது உரிமைக்கு உட்பட்டு மட்டுமே தொல்.திருமாவளவன் உரையாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்திய பெண்களை குறிப்பாக ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் அந்த உரையில் இல்லை என்றும் தனது தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
எவரும் ஆஜராகவில்லை!
மேலும் இது தொடர்பாக முன்பு புகார் அளித்திருந்த டாக்டர் வேதா என்ற தாமோதரன் தரப்புக்கு இவ் வழக்கு தொடர்பாக தாக்கீது அனுப்பப்பட்டிருந்தும் எவரும் ஆஜராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொடுக்கப்பட்ட புகாரில் சொல்லப்பட்ட படி வெறுப்பு பேச்சு எதுவும் அந்த உரையில் இருப்பதாகக் காண முடியவில்லை என்றும், மனுஸ்மிருதி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளையே முன்வைத்து பொது நோக்கில் பேசப்பட்ட உரைதான் என்பதாலும், அந்த உரையும், அதை ஒளிபரப்பியதும் குற்றமாக கருதப்படத்தக்கது அல்ல என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே பேரையூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிடுவதாகவும் தனது தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிற வழக்குகளும் முடித்து வைக்கப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.