தமிழர் திருவிழா 13ஆம் தேதி தொடங்குகிறது சென்னையில் 18 இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.3 சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

சங்கமம் திருவிழா நம்ம ஊரு திருவிழா

சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கிறார். சங்கமம் கலை நிகழ்ச்சிகள் வரும் 27ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 13ஆம் தேதி மாலை 6 மணியளவில் கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைப்பார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கலைஞர் கருணாநிதி நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் ஜன.14 முதல் ஜன.17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைவிழா நடைபெற உள்ளது.

உணவுத் திருவிழா

இவ்விழா சென்னை மாநகரில் நடத்தப்படுகிறது. இவ்விழா நடைபெறும் நாட்களில் அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா நடத்துவது குறித்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜன.2), சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி சந்தரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், சுற்றுலாத் துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *