* ஊசிமிளகாய்
நேற்றைய (2.1.2025) ‘விடுதலை‘யில் மூத்தப் பத்தரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்கள் ‘‘செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் அகத்தியர் விழாவா?’’ என்ற தலைப்பில் தந்துள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு, அந்த புது நிறுவனத்தில் காவிச் சாயத்தை பூசி, இளம் மூளைகளுக்குக் காவிச் சாயமேற்றும் பெரும் பொறுப்பை, ஆரியம் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பது புலனாகின்றது. அதில் உள்ள அம்மையார் – பார்ப்பன அம்மையார் ஒருவர் நல்ல பாம்பு என்பதில் உள்ள ‘நல்ல’ என்பதற்குப் பொருத்தமானவர்.
மிகவும் லாவகமாகத் தி.மு.க. ஆட்சியானாலும், மாற்று ஆட்சியானாலும் அதற்கொப்ப, ‘ஒப்பனை’களோடு ஆங்காங்கே அவையை அலங்கரிக்கத் தவறாதவர் இவர்!
இப்போது வெளிப்படையாக தனது சுய ரூபத்தைப் பதிய வைக்கிறார் – ஆரியத்திற்கு வீரியம் ஏற்றும் திருப்பணி உபயகர்த்தா!
அகத்தியருக்கு செம்மொழி நிறுவனம் விழா கொண்டாட இருக்கிறதாம்!
அந்த அகத்தியருக்கும், உண்மையான தமிழ் இலக்கியப் பண்பாட்டு வரலாற்றுக்கும் என்ன தொடர்பு? முந்தைய தமிழ் இலக்கியங்களில் எப்போது ஊடுரு வினார் இந்த ஆரிய அகத்தியர்? அவர்பற்றி கதைக்கப்பட்டவை கற்பனைப் புனைவுகளாகும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1948 ஆம் ஆண்டிலேயே – அதாவது 77 ஆண்டுகளுக்குமுன் எச்சரிக்கை மணி அடித்து முரசொலித்து முழங்கினார் ‘அகத்தியன் விட்ட புதுக்கரடி’ என்ற தலைப்பில்.
தெவிட்டா தேன்பாகு மறுப்புக் கவிதைகள், இதோ அந்த உளியின் ஓசை! ஒளியின் வீச்சு!
ஆரியப் பண்பாட்டுப் புதுக்கரடி பழைய கதை – புதிய கரடிப் பொம்மைகளை, சில வீடுகளில் வளரும் குழந்தைகள் படுக்கைகளில் அடுக்கி வைத்து, ஏமாற்றிக் கொஞ்சுவது போன்றே, காவிக்கான கடமை மிஞ்சலை இப்புதிய காவியம்மாள் மூளைக்கு ஊசிமூலம் மதவெறி மயக்கம் தர முந்துகிறார்.
புலவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?
வழக்கம்போல வயிற்றைத் தட்டிக் காட்டி மவுனத்தைத் தமதாக்கி அல்லது அங்கேயும் தன்மானமும், இனமானமும் இழந்து, சன்மானத்திற்காக சபையில் தேடத் தயார் என்று சொல்லப் போகிறீர்களா?
பெரியாரும், புரட்சிக்கவிஞரும் கேட்கின்ற விடை, விடை????
‘அகத்தியன் விட்ட புதுக்கரடி’
அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்
புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்!
ஆதலால் ‘‘குள்ளனை அணுவும் நம் பாதே’’
என்ற பழமொழி அன்று பிறந்தது!
பழைய திராவிடம் செழுமை மிக்கது
வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது
செந்தமிழ், இலக்கணச் சிறப்புற் றிருந்தது
வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது
செய்யும் தொழில்கள் சிறப்புற் றிருந்தன
ஓவியம் தருநரும் பாவியம் புநரும்
ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும்
திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர்
இராத தொன்றில்லை திராவிட நாட்டில்
இந்த நிலையில் வந்தான் அகத்தியன்.
சந்தனப் பொதிகையில் தமிழ்ப்பெரும் புலவரின்
மன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ்
நன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ்
இயற்றமிழ் இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ்
முயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின்
நல்லா தரவை நாடுவா னாகிச்
‘செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப்பயன்’
என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான்.
மன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர்
ஒருநாள் மன்னனின் திருமணி மன்றில்
அகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை
ஆய்ந்திட, மன்னன், அகத்தியோய் அகத்தியோய்
பிறந்த உடலும் பிணைந்த உயிரும்
இறந்தபின் இல்லா தொழிந்தன
ஏதுபின் உயிர் உடல் எய்தும் என்றான்
‘‘ஆன்மா என்றும் அழியா’’ தென்று
மற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான்.
மேலும் அகத்தியன் விளம்பு கின்றான்
வேந்த னாக வீற்றிருக் கின்றாய்
ஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம்
செல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்
மணிமுடி பூண்பரோ மக்கள் யாரும்?
பணிவொடு வாழ்வது பார்ப்பின் புரியும்
சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்
என்னலும், மன்னன், பின்னொரு நாள்இதைப்
புகல்க என்றனன் போயினன் அகத்தியன்.
அழல்வெருஉக் கோட்டத்துக் கப்பால் ஒருநாள்
பழித்துறைக் கள்வன், பாங்கர் சூழ
நகர் அலைத்து நற்பொருள் பறித்து
மிகுபுகழ் உடையேன் வேந்தன்நான் என்றான்.
ஊர்க்கா வலர்கள் ஓடி மன்னன்பால்
இன்ன துரைத்தனர்- எழுந்தனன் மன்னன்.
பழித்துறைக் கள்வன் படையும், மன்னனின்
அழிப்புறுபடையும் அழல்வெரூஉக் கோட்டப்
பாங்கினில் இருநாள் ஓங்குபோர் விளைக்கவே
பழித்துறை பிடிக்கப் பட்டான் அரசனால்!
மறவர்சூழ் அரச மன்றின் நடுவில்
பழித்துறை கட்டப்பட்ட கையுடன்
நின்றான். மன்னவன் நிகழ்த்து கின்றான்;
ஏன்என் ஆட்சியை எதிர்த்தனை! ஏஏ
கோன்என் படைவலி குறைந்ததோ? உன்றன்
தோள்வலி பெரிதோ? சொல்லுக சொல்லுக
ஆள்வலி பெரிதோ? அறைக என்னலும்
பழித்துறை மன்னனைப் பார்த்துக் கூறுவான்;
இந்நாள் உண்டு பின்னாள் இலைஎனும்:
வறுமை எமக்கு! வளமை உமக்கோ?
ஆள்வலி இல்லை ஆயினும் நாளை
தோள்வலி மறவர் தோன்றுவார்! இந்நாள்
என்னுயிர் போக்கல் எளிதாம் உனக்கே!
உன்னுயிர் போக்குவார் உண்டா கின்றார்.
சினத்தொடு பழித்துறை இவ்வாறு செப்பலும்,
மன்னன் அவனைச் சிறையினில் வைத்தான்.
‘‘செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப்பயன்
சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்’’
இக்கருத்து நாட்டில் எங்கும் பரவினால்
மக்கள் எதிர்ப்பரோ மன்னன் ஆட்சியை?
எதிர்க்க மாட்டார் தாங்கள் எய்திய
‘‘சிறுமை’’ முற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்
என்று சும்மா இருப்பர் அன்றோ
அகத்தியொய் அகத்தியோய் அனைவ ரிடத்தும்
புகுத்துக உன்றன் புதிய கொள்கையை
என்று மன்னன் இயம்பினான். அகத்தியன்
அன்றுதான் ஒருபடி அதிகாரம் ஏறினான்.
இப்பிறப்பு முற்பிறப் பிருவினை ஆன்மா
ஊழ் இவை யனைத்து உரைத்த அகத்தியன்
அரசே இன்னும் அறைவேன் கேட்பாய்;
மண்ணவர் மண்ணில் வாழ்வார் அதுபோல்
விண்ணவர் விண்ணில் மேவினார் என்றான்
அன்னவர் நம்மை அணுகுவர் என்றான்
இன்னல் ஒழிப்பார் என்று புளுகினான்.
விண்ணவர் விருப்புற வேண்டுமானால்
மண்ணிடை நான் மறை வளர்ப்பாய் என்றான்.
மறைமொழி தானே மந்திரம் என்றான்
மந்திரத்தாலே மகிழ்வர் வானவர்
என்று பலபல இயம்பிச் சென்றான்
ஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட்
டெரிந்தது! சிற்றூர் எரிந்தது! மக்கள்
தெய்யோ தெய்யோ தெய்யோ என்றே
அரசனிடத்தில் அலறினார் ஓடி!
அங்கிருந்த அகத்தியன், ‘‘அரசே
தீ ஒரு தெய்வம் செம்புனல் தெய்வம்
காற்றொரு தெய்வம் கடுவெளி தெய்வம்
நிலம் ஒருதெய்வம் நீஇதை உணர்க
தெய்எனல் அழிவு! தெய்வம் அழிப்பது.
இந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன்.
மந்திர வேள்வியால் மகிழும் அவ்விந்திரன்’’
என்று கூறி ஏகினான் அகத்தியன்.
அரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர்
அரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய்
இருத்தல் கண்டார் இரங்கினார். தீய
கருத்து நாட்டிற் பரவுதல் கண்டு
கொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்?
ஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி
பகைவனை அன்பொடு பார்த்தாள். அவனும்
அவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான்.
இருவரும் உயிர்ஒன் றிரண்டுடல் ஆனார்,
அரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன்
இதனை அறிந்தான். அறைவான் ஆங்கே:
மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும்
ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால்
மணம்எனக் கூறுதல் வாய்மை யன்று!
மனம் எனல் பார்ப்பனர் மந்திர வழியே
இயலுதல் வேண்டும் என்று கூறினான்.
அரசன் ஆம் ஆம்என் றொப்பினான்
அகத்தியன் அரசனே ஆகிவிட்டான்.
அரசனும் அகத்தியன் அடிமையானான்.
தமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன.
பழந்தமிழ் நூற்கள் பற்றி எறிந்தன.
அகத்தியம் பிறந்ததே அருந்தமிழகத்தில்.
அகத்தியன் குடத்தில் பிறந்தான் என்ற புராணக் கதையையும் வரலாறாக்கினாலும் ஆக்கி விடுவார் பார்ப்பன அம்மையார்.