மும்பை, ஜன.3 நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு (2024) மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டு 2.40 கோடியாகவும், 2022-ஆம் ஆண்டு 2.15 கோடியாகவும், 2021-ஆம் ஆண்டு 1.89 கோடியாகவும் உள்ளன.
அதேபோல் வாகன பதிவு உள்ளிட்ட பரிமாற்றங்கள் மூலம் அரசுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டான 2023-ஆம் ஆண்டு ரூ.87 ஆயிரத்து 670 கோடி வருமானம் வந்திருந்தது.
தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேசம் முதலிடத் தில் உள்ளது. அதன்பின் மகா ராஷ்டிரா, தமிழ்நாடு, கருநாடக, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஆனால் வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவு, வாகனப்பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிக பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்த இடத்தில் கேரளா, கருநாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
வாகனங்கள் பதிவு உள்ளிட் டவை மூலம் வருமானம் ஈட்டியதில் நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கருநாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அதில் கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு 18.26 லட்சமும், 2022-ஆம் ஆண்டு 17 லட்சமும், 2021-ஆம் ஆண்டு 15.15 லட்சமும் பதிவாகி இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் இருந்தது. இது முந்தைய ஆண்டினை (2023) விட 33.29 சதவீதம் ஆகும். கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022-ஆம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021-ஆம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் இருந்தது.
தமிழ்நாட்டில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. 2-ஆவது இடத்தில் பூவிருந்தவல்லி 3-ஆம் இடத்தில் கோவை வடக்கு, 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் கோவை தெற்கு உள்ளது. ஆனால் அதேநேரத்தில் வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மேற்கு முதலிடத்திலும், 2-வது இடத்தில் சென்னை தெற்கு, 3-வது இடத்தில் சென்னை மத்தியம், 4-ஆவது இடத்தில் தாம்பரம், 5-ஆவது இடத்தில் பூவிருந்தவல்லி ஆகிவையும் இருக்கின்றன.