‘‘கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்ற வேண்டும் என்பது சமூகத்தீமை – இதற்கு முடிவு கட்டவேண்டும்’’ என்று கேரள சிவகிரி மடத்தின் தலைவர் சச்சிதானந்தா கூறியுள்ளார்.
கேரளா மாநிலம் வர்கலாவில் சமூக சீர்திருத்தவாதி, நாராயண குருவின் 92ஆவது சிவகிரி யாத்திரை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிவகிரி மடத்தலைவர் சச்சிதானந்தா பேசியதாவது:
‘‘கோவில்களுக்குள் நுழைவதற்கு ஆண் பக்தர்களின் மேல் சட்ைடயை அகற்றக் கோரும் நீண்டகால நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். மாநிலத்தில் உள்ள பல கோவில்களில் இந்த நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை ஒரு சமூகத்தீமை! இந்த நடைமுறை நாராயண குருவின் பிரசங்கங்களுக்கு எதிரானது.
சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய நாராயண குரு தொடர்புடைய சில கோயில்கள் கூட இதைப் பின்பற்றுவது வருத்தமாக இருக்கிறது. சில கோவில்களில், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில நாராயணர் கோவில்களும் இதைப் பின்பற்றுவதைக் காணும்போது, நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், கோவில்களை புனிதப்படுத்துவதை விட்டுவிட்டு அதனை மனிதாபிமான நடைமுறைக்கும் அனைத்து மக்களுக்குமான ஒன்றாகவும் மாற்றிக்காட்டியவர் நாராயண குரு.’’ இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற மடாதிபதியின் கருத்தை, மேடையில் இருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஆதரித்தார்.
பரவாயில்லையே! ஒரு மடாதிபதியே கோயிலுக்குள் மேல் சட்டை அணிந்து போகக் கூடாது என்பதை எதிர்த்துப் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.
அதனை வழிமொழிந்து கேரள முதலமைச்சர் பேசி இருப்பது மேலும் வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கோயில் கர்ப்பக் கிரகத்தில் இருக்கும் பல சாமிகளுக்கும் கூட மேலாடை கிடையாது என்பதே!
ஹிந்து மதம் சார்ந்த ஒரு கோயிலுக்குள் பக்தர்கள் மேலுடை அணிந்து போகலாம்; இன்னாரு கோயிலில் அப்படிப் போகக் கூடாதாம் – ஒரே மதத்தைச் சேர்ந்த கோயில்களுக்குள் ஏனிந்த வேறுபாடும் – முரண்பாடும்!
இதில் பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தால், அதற்கு என்ன பதில் சொல்லுவார்களாம்?
நாராயண குரு – ஒரு சமூக சீர்திருத்தவாதி – அவர் அருளிய கருத்துகளுக்கு விரோதமாக – அவர் தொடர்புடைய கோயில்களிலும்கூட மேலாடை அணியக் கூடாது என்று சம்பிரதாயமாக் கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
சீர்திருத்தவாதிகளையும், மதவாதிகளாக்கி விட்டால் அதன் விளைவு இப்படித்தான் முடியும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
அதனால்தான் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாக்களில் கலந்து கொண்ட தந்தை பெரியார் அவர்கள், ‘‘என் சிலை அழகாக இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல; சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்பு வாசகங்கள்தான் முக்கியம்’’ என்று வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் சிலை பீடங்களில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் எங்கள் மனதைப் புண்படுத்துகின்றன என்று ஹிந்துத்துவாவாதிகள் கூச்சல் போடுவதன் இரகசியத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்!