செய்தித் துளிகள்

viduthalai
4 Min Read

புதிய ரயில் அட்டவணை

ஜனவரி 1, 2025 முதல் புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய ரயில் அட்டவணையில் ரயில் வழித்தட வரைபடம், ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர், பயண நேரம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

புதிய தொழிற்பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு 2.1.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சி என்பது வரும் ஜன.9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மய்யத்தில் நடைபெற உள்ளது. குறைந்த பட்ச கல்வித் தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

16ஆம் தேதி ஊட்டி மலை ரயில் இயக்கம்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊட்டி சிறப்பு மலை ரயில் ஜனவரி 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம்.

கேரள வாகனத்திற்கு அபராதம்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப் பகுதியில் ரப்பர் கழிவுகளை கொட்டிய கேரள வாகனத்திற்கு வனத் துறையினர் அபராதம் விதித்தனர்.

விதி மீறுவோர்மீது நடவடிக்கை

விதி மீறி சட்ட விரோதமாக கட்டப்படும் கட்ட டங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரிதாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை 31.12.2024 அன்று வெளியிட்டுள்ளது.

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

இந்த ஆண்டு மார்ச் வரை சிறுசேமிப்பு வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த நான்கு காலாண்டுகளாக வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளது.

அரசு பள்ளிகள் தத்தெடுப்பு? விளக்கம்

மாநிலம் முழுவதும் 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று அன்பில் மகேஸ் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் சிஎஸ்ஆர் மூலம் பங்களிப்பார்கள் உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டது. அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் நோக்கமில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டு:
ரூ.6,691 கோடி வரவில்லை

பொது மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.12% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இன்னும் ரூ.6,691 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு மே.19ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக RBI அறிவித்தது. தொடர்ந்து, வங்கிக்கு திரும்பிய நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,956 கோடி

தமிழ்நாட்டில் 2024 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.10,956 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் மாநிலத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.9,888 கோடியாக இருந்த நிலையில், 2024ல் 11% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம் புதுச்சேரியில் ஜிஎஸ்டி வருவாய் 2% சரிந்து ரூ.288 கோடியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.1.77 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வசூலித்துள்ளது.

இலங்கையிலிருந்து 20 மீனவர்கள் சென்னை திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 இந்திய மீனவர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுக்கு மத்தியில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்களும் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் கொழும்புவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

அங்கு பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளுக்கு பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு தனித்தனி வாகனங்களில் அனுப்பி வைத்தனர். தற்போது வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 504 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *