எச்சரிக்கை தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.2 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக் குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய்

‘ஸ்க்ரப் டைபஸ்’ என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது.

விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறிய முடியும். ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும். அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் குருதி நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, இதுகுறித்து பொதுமக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *