பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவை இல்லை திருமணங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

பதிவு திருமணம்

பின்னர் 2020-ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணங்களை பதிவு செய்யலாம்.
இந்த திருத்தம் வந்தபிறகு கூட தமிழ்நாட்டில் சொற்ப அளவிலான திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் நடக்கும் திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்யலாம். ஆனால் கடவுச்சீட்டு பெறும் இணையர் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். மற்றவர்கள் பதிவு செய்வதில்லை.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ததில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பது தெரியவந்தது. குறிப்பாக அரசு திருமண பதிவுக்கு கட்டணமாக ரூ.100-ம் மற்றும் கம்ப்யூட்டர் கட் டணமாக ரூ.100-ம் என மொத்தமே ரூ.200 தான் செலுத்த வேண்டும்.

ஆனால் பொதுமக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

இணையதளத்தில் பதிவு

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு பொதுமக்களே நேரடியாக இணையத்தில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது. அதன்படி இணையர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக வரத்தேவையில்லை. அவர்கள் பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டில் இருந்து பதிவு செய்யலாம். கட்டணத்தையும் அதில் செலுத்தி விடலாம்.

திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடி சான்றிதழ் வழங்கப்படும். இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும்.பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்ெகனவே உள்ள நடைமுறைகள் இருக்கும்.
இந்த இணையவழி திருமணப் பதிவு மூலம் மூலம் மோசடி திரும ணங்கள் முற்றிலும் தடுக்கப்படும். உச்சநீதிமன்ற விதிமுறைப்படியும் முறையாக திருமணங்கள் பதிவு செய்யப்படும்.

தற்போது பத்திரப் பதிவுத் துறையில் ஸ்டார்-2 மென்பொருள் மூலம் பதிவு நடக்கிறது. எனவே அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்டார்-3 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த மென்பொருளில் தான் திருமணப் பதிவுகளை பொது மக்களே மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *