வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் தாமதம் ஏன்? கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

1 Min Read

வயநாடு, ஜன.1 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்து விட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிலச்சரிவு
“வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தீவிரமான பேரிடராக அறிவிக்கப்படும்’ என்று ஒன்றிய அரசு திங்கள்கிழமை கேரள அரசுக்கு அதிகார பூர்வமாகத் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வயநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒன்றிய அரசு அய்ந்து மாதங்கள் தாமதித்தது ஏன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது பயனளிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்துக்குள் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றிய உள்துறைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தபோதிலும் அதை தீவிர பேரிடராக அறிவிக்காமல் ஒன்றிய அரசின் உயர்நிலைக் குழு காலம் தாழ்த்தியது.
இப்பேரிடரால் பாதிக் கப்பட்ட மக்களின் கடன்களை 2005, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யுமாறும், அவர்களின் மறுவாழ்வுக்காக புதிய கடன்களை வழங்க உதவுமாறும் கேரளம் விடுத்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட மக்களின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இது ஒன்றிய அரசுக்கு முன்மாதிரியாக அமைந் துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *