புதுடில்லி, ஜன.1 2024-2025-ஆம் நிதியாண்டுக்கு நிா்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையில் 52.5 சதவீதத்தை நவம்பா் மாத இறுதியில் எட்டியதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.
அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள வித்தியாசமே நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. இது அரசுக்கு தேவையான கடன் தொகையின் குறியீடாக கருதப்படுகிறது.
நிகழ் நிதியாண்டுக்கான (2024-2025) ஒன்றிய அரசின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.16.13 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் ரூ.8.47 லட்சம் கோடியை (52.5 சதவீதம்) எட்டியதாக தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 5.6 சதவீதமாக இருந்தது. இதை நிகழ் நிதியாண்டில் 4.9 சதவீதமாக குறைக்க ஒன்றிய பட் ஜெட்டில் இலக்கு நிா் ணயிக்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஒன்றிய அரசின் வரி வருவாய் ரூ.14.43 லட்சம் கோடியை எட்டியது. இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் செலவினம் ரூ.27.47 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது பட்ஜெட் இலக்கில் 56.9 சதவீத நிதியை ஒன்றிய அரசு செலவழித்துள்ளது.
மொத்த செலவினத்தில் வருவாய் செலவினம் ரூ.22.27 லட்சம் கோடியாகவும் மூலதன செலவினம் ரூ.5.13 லட்சம் கோடியாகவும் உள்ளது.
அதேபோல் மொத்த செலவினத்தில் அரசு பெற்ற கடன்களுக்கு வட்டி யாக ரூ.6.58 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. மானியங்களுக்கு ரூ.2.79 லட்சம் கோடி வழங்கப் பட்டுள்ளது என தெரி விக்கப்பட்டது.