சென்னை, ஜன.1 டிஎன்பிஎஸ்சி மூலம் 2024ஆம் ஆண்டில் 10,701 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14,353 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 2024ஆம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மைத் தேர்வு
14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துக் கொள்வதற்காக டிசம்பர் 2024இல் வெளியிடப்பட வேண்டிய 2025ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம், 2 மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி பணிகளின் முதன்மைத் தேர்விற்கான தேர்வுத் திட்டம் கொள்குறிவகையாக மாற்றி யமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – தொகுதி 2 பணிகள் மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகளில் ஊதிய ஏற்ற முறை 17 முதல் 20 வரை உள்ள பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளின் முதல்நிலை தேர்விற்கான பொதுத் தமிழ் பாடத்திட்டம் மற்றும் குரூப் 4 பணிகளின் தமிழ் தகுதி தேர்விற்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடத்தும் முறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக, 1,49,971 தேர்வர்கள் விண்ணப்பித்த ஒருங்கிணைந்த தொழில் நுட்பப்பணிகள் தேர்வுகளில் (நேர்முகத் தேர்வு பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப்படிப்பு தொழிற்பயிற்சி தரம்) 103 பாடத்தாள்களுக்கான தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறையை எளிமைப்படுத்த அரசு இ-சேவை மய்யங்கள் மூலம் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்ற நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு தேர்வர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் எளிதாக பாடத் திட்டங்கள் தொடர்பான விவரங்களை தேர்வாணைய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் விதமாக, 120 பாடத்தாள்களுக்கான பாடத் திட்டங்கள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
அனைத்து ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் மற்றும் தொழில் நுட்பப் பணிகளுக்கான இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு தேர்வு தொடர்பான துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கும் பொருட்டு தேர்விற்கான அறிவிக்கையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டு, வெவ்வேறு பதவிகளுக்கான தகுதி நிபந்தனைகள் தேர்வு நடைமுறை இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, சிறப்பு பிரிவினர்களுக்கான சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு சான்றிதழ்களின் படிவங்கள், பாடத் திட்டம் மற்றும் தேர்வு எழுதும்போது தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் வழங்கப் பட்டு வருகிறது.
தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டு தகவல்கள் தேர்வர்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.