உலக கோல்டு கவுன்சில் தகவல்
புதுடில்லி, ஜன.1 இந்திய பெண்களிடம் சுமார் 24 ஆயிரம் டன் தங்கமும், இதில் தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கமும் இருப்பதாக உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளங்களில் ஒன்றாக தங்கம் கருதப்படுகிறது. இது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய பெண்கள் சுமார் 24 ஆயிரம் டன் தங்கம் வைத்துள்ளனர். எந்த நாடும் வைத்திருக்கும் தங்கத்தை விட இது மிக அதிகமாகும். இந்த தங்கத்தின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. உலகின் தங்கத்தில் 11 விழுக்காடு இந்தியப் பெண்களிடம் உள்ளது. உலகின் முதல் 5 நாடுகளின் தங்கத்தை விட இது அதிகம்.
அமெரிக்கா 8 ஆயிரம் டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 ரஷ்யா 1,900 டன் என தங்கம் வைத்துள்ளன. இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40 விழுக்காடு தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டு பெண்கள் மட்டும் 6,720 டன் தங்கத்தை கையிருப்பாக வைத்து உள்ளனர். இது இந்தியாவின் கையிருப்பில் 28 விழுக்காடு ஆகும்.
இந்தியாவின் வருமான வரித்துறை சட்டங்களின்படி மணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். மணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலும் ஆண்களிடம் 100 கிராம் வரையிலும் தங்கம் இருக்கலாம் என்றும் அனுமதி உள்ளது. இவ்வாறு உலக கோல்டு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.