இறந்த தங்கள் மகனின் உறைய வைக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட விந்தணு மூலம் பேரக் குழந்தையைப் பெறும் நிலையை எண்ணிப் பெற்றோர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள செய்தி வெளி வந்துள்ளது.
நான்கு ஆண்டுகள் போராடி நீதிமன்ற உத்தரவு மூலம் இந்த உரிமையைப் பெற்றுள்ளனர் டில்லியைச் சேர்ந்த மகனை இழந்த பெற்றோர்!
கடந்த 2020ஆம் ஆண்டு, கருத்தரிப்பு ஆய்வகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தங்கள் மகனுடைய விந்தணுக்களை டில்லி கங்கா ராம் மருத்துவமனை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஹர்பீர் கவுர் அவரது கணவர் குர்விந்தர் சிங் இருவரும் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடுத்தனர்.
அவர்களுடைய 30 வயது மகன் ப்ரீத் இந்தர் சிங், கடந்த ஜூன் 2020ஆம் ஆண்டு ஒருவகை குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“எங்கள் மகனுக்கு கீமோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பு, சிகிச்சை காரணமாக அவருடைய விந்தணுக்கள் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதால் அவற்றைச் சேகரித்து வைக்குமாறு மருத்துவமனை கூறியது.
திருமணமாகாத ப்ரீத் இந்தர் இதற்கு சம்மதித்தார். கடந்த 2020, ஜூன் 27 அன்று அவருடைய விந்தணுக்கள் சேகரித்து உறைநிலையில் வைக்கப்பட்டன. அந்த ஆண்டின் செப்டம்பர் தொடக்கத்தில் அவர் உயிரிழந்தார்’’ என அப்பெற்றோர் தெரிவித்தனர்.
பின்னர், சில மாதங்கள் கழித்து மகனின் மறைவால் துயருற்றிருந்த அவருடைய பெற்றோர், உறைய வைக்கப்பட்ட மகனின் விந்தணுக்களை கேட்டுள்ளனர். ஆனால் அதைத் தருவதற்கு மருத்துவமனை மறுத்து விட்டது. பின்னர், அவர்கள் இருவரும் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அறுபதுகளில் இருக்கும் அந்த இணையர் தங்கள் மகனின் விந்தணுக்கள் மூலம் பிறக்கும் குழந்தையைத் தாங்கள் வளர்க்க நினைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர்கள் இறப்புக்குப் பின்னர் அந்தக் குழந்தையை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் அவருடைய இரு மகள்கள் ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனர்.
கடந்த வாரம் நீதிபதி பிரதீபா சிங் வழங்கிய உத்தரவில், “விந்தணுக்களை வழங்கியவரின் சம்மதம் இருந்தால், அவர் இறந்த பின்னர் அதன்மூலம் இனப்பெருக்கம் செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், விந்தணு மாதிரிகளை பெற்றோர் பெறுவதற்கு உரிமை இருப்பதாகவும், அக்குழந்தை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசாகக் கருதப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மகனின் “மரபை” தொடர வேண்டும் என்று விரும்பியதாலேயே தாங்கள் நீதிமன்றத்தை அணுகியதாக அந்த இணையர் தெரிவிக்கின்றனர். தங்கள் மகனுடனான பிணைப்பைப் பாதுகாக்கவும், தங்களின் குடும்பப் பெயர் தொடரவும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உதவி செய்யும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தங்கள் மகனுடைய விந்தணுக்களை வாடகைத்தாய் மூலம் பயன்படுத்த விரும்புவதாகவும், அவர்களுடைய உறவுக்கார பெண் ஒருவர் வாடகைத் தாயாக இருக்க சம்மதித்து உள்ளதாகவும் கவுர் கூறினார்.
இந்த வழக்கு அரிதானது என்றாலும், முன்னுதாரணம் இல்லாதது அல்ல என்று கூறுகிறார் வழக்குரைஞர் சுருச்சி அகர்வால்.
சுருச்சி அகர்வால், புனேவை சேர்ந்த 48 வயது பெண் ஒருவரின் வழக்கை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜெர்மனியில் அவரது 27 வயது மகன் மூளைப் புற்றுநோயால் இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு விண்வெளி சாகசத்தின்போது நிகழ்ந்த விபத்தில் இறந்துபோன தங்களது 21 வயது மகனின் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி, அவருடைய பெற்றோர் பேரக்குழந்தை பெற்றுக்கொள்ள நியூயார்க் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இந்த உதாரணத்தையும் நீதிமன்றத்தில் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
நீதிபதி பிரதீபா சிங்கும் தனது உத்தரவில், ‘‘கடந்த 2002ஆம் ஆண்டு காசாவில் உயிரிழந்த 19 வயது வீரரின் பெற்றோர், தங்கள் மகனின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற சட்டரீதியாக அனுமதி பெற்றது’’ உள்பட இறப்புக்குப் பின் இனப்பெருக்கத்திற்கு அனுமதியளித்த சில நிகழ்வுகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
தந்தை பெரியார் எண்பது ஆண்டுகளுக்குமுன் தொலைநோக்கோடு சொன்னார் – இன்று செயலில் நடக்கிறதே!
ஆம் காலத்தை வென்ற தொலைநோக்காளர் தந்தை பெரியார்!!