FIRA கூட்டமைப்பின் செயல் அரங்கக் காட்சிகள்
புத்தக வெளியீடு
மாநாட்டின் இரண்டாம் நாளன்று சிறப்பு அரங்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிய ஆங்கில மொழியாக்கத்தில் புத்தகம் வெளியிடப்பட்டது. மகாராஷ்டிரா அந்தஷிரத்த நிர்மூலன் சமிதி அமைப்பின் மூத்த தலைவர் ஹாரிஷ் கே. தேஷ்முக் எழுதிய Superstitions – Myths and Realities (மூடநம்பிக்கைகளும் – புரட்டும் உண்மை நிலையும்) எனும் நூலை பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட முதல்படியினை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் பகுத்தறிவாளர் எஸ்.எஸ். சிவசங்கர் பெற்றுக் கொண்டார். மராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல், குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மாற்றம் பெற்று ஏற்கெனவே வெளி வந்தது. ஆங்கில மொழியாக்க நூலை கேரள மைத்திரி புக்ஸ் பதிப்பகத்தின் லால்சலாம் வெளியிட்டுள்ளார்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 2024 டிசம்பர் 28 & 29 ஆகிய இரு நாள்களும் நடைபெற்ற FIRA மாநாட்டு நிகழ்வுகளில் பல ஆய்வரங்க அமர்வுகள் நடைபெற்றன. மாநாட்டு நடவடிக்கைகளுள் FIRA அமைப்பின் செயல் அரங்க அமர்வுகளும் இணையரங்கங்களும் சேர்ந்தே நடைபெற்றன.
மாநாட்டிற்கு முந்திய நாள் டிசம்பர் 27 அன்று FIRA அமைப்பின் செயற்குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையில் நடந்தேறியது. மாநாட்டு நடவடிக்கைகள் பற்றிய விவாதங்களும் நடைபெற்று இறுதி வடிவம் பெற்றது.
மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 28 அன்று பிற்பகலில் FIRA அமைப்பில், அங்கம் வகிக்கும் உறுப்பினர் அமைப்புகள் பஞ்சாபில் கடந்த முறை நடந்த மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்த அரங்க அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பின் பிரதிநிதிகளும் தங்களின் அமைப்பின் செயல்பாடுகளை வாசித்து அதன் அறிக்கையிைன FIRA தலைமை அமைப்பிடம் தந்தனர். பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகள் குறித்துப் பேசி, கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. மோகன் அறுிக்கையினை வழங்கினார்.
இரண்டாம் நாளான டிசம்பர் 28 அன்று நண்பகல் உணவிற்குப் பின்னர் கட்டுரைகள் வாசித்தளித்திட இணையரங்கமும், FIRA அமைப்பு அரங்கமும் தனித்தனியாக நடந்தேறின.
FIRA அமைப்பின் பொதுக் குழு
FIRA அமைப்பில் உள்ள உறுப்பினர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற பொதுக்குழு தனி அரங்கத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பினரும், அதன் பேராளர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்து FIRA அமைப்பின் வருங்காலச் செயல்பாட்டிற்கு ஆலோசனைகளையும் வழங்கினர். இறுதியில் அந்த ஆலோசனைகளைப் பற்றிய FIRA தலைமைக் குழுவின் விளக்கங்களை வழங்கி, ஏற்றுக் கொள்ள வேண்டியவை பற்றியும், நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என் பதையும் வகை பிரித்து வழங்கினர்.
தீர்மானங்கள் ஒப்புதல் – நிறைவேற்றம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் மேலும் ஏதேனும் தீர்மானங்களில் சேர்க்கப்பட வேண்டியவை, நீக்கப்பட வேண்டியவை குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்று தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன.
பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள்:
1) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. இந்த நிலையில் கீழ்க்கண்ட வகையில் மதச் சார்பற்ற அரசின் அலுவலர்கள் நடந்து கொள்வது சட்டப்படியானதாகும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அ) அரசுப் பணியாளர்கள் எந்த மதச் சின்னங்களையும் அணியக் கூடாது.
ஆ) அரசு அலுவலகங்களில் வளாகங்களில் எந்தவித மதச்சின்னங்களோ, அடையாளங்களோ, கட்டுமானங்களோ, இடம் பெறச்கூடாது.
இ) அரசுக்குச் சொந்தமான இடங்களில், நடைபாதைகளில் எந்தவித மதவழிபாட்டுக் கட்டமைப்புகளும் இருக்கக்கூடாது; ஏற்ெகனவே இருக்கும் அத்தகைய கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
2010 செப்டம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைபாதைக் கோயில்கள் அகற்றப்பட வேண்டும். அப்படி அகற்றப்படாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு நேரில்வந்து விளக்கம் தரவேண்டும்.
இதன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதையும், இம்மாநாடு நினைவூட்டுகிறது.
ஈ) அரசுப் பணியாளர்கள் எந்த மத உபந்நியாசங்களிலும் ஈடுபடக் கூடாது.
மேற்கண்ட தீர்மானங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை (SECULARISM) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இம்மாநாடு தெரிவிக்கிறது.
தீர்மானம் எண்.2 கல்விப் பாடத்திட்டங்கள் – விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பாடங்கள் அமையவேண்டும் என்றும் மூடநம்பிக்கைக்கு எந்தவகையிலும் வழிகோலக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்.3 மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய 50 விழுக்காடுள்ள பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சட்டமன்றம், நாடாளுமன்றங்களிலும் கண்டிப்பாக 50 விழுக்காடு கிடைக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்றும், சமூகநீதியில் பாலியல் நீதி என்பதும் உள்ளடக்கம் என்பதையும் இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்.4 ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு (INTER – CASTE, INTER – RELIGION) செய்யும் வகையில் ஒன்றிய அரசு தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்.5 விஞ்ஞான கண்டுபிடிப்புகளான ஊடகங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அஞ்ஞானக் கருவிகளாகச் செயல்படுவது அறிவு நாணயக் கேடு என்பதை இம்மாநாடு தெரிவிப்பதுடன், மக்களை வஞ்சிக்கும் – வளர்ச்சியைத் தடைப்படுத்தும் இந்தப் போக்கினைக் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ற பிரிவு வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
பொதுக்குழு நடவடிக்கைகளின் நிறைவாக புதிய செயற்குழுவினை தெரிந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. நீண்ட விவாதங்கள், உரையாடல்களுக்குப் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், ஒருமனதாக தெரிவும் செய்யப்பட்டனர்.
FIRA அமைப்பின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:
முனைவர் பிரந்திரநாயகர், தலைவர் (கர்நாடாகா), முனைவர் சுடேன் கோதேவராவ், பொதுச் செயலாளர் (மகாராட்டிரம்), சி. சையட், பொருளாளர் (கேரளா), இ.டி.ராவ், துணைத் தலைவர் (ஒடிசா), இரா. தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் (தமிழ்நாடு), லால்சலாம் துணைத் தலைவர் (கேரளா), ஹரிஷ் கே. தேஷ்முக் துணைத் தலைவர் (மாகராட்டிரம்), ஓய். கிருஷ்ணன், துணைத் தலைவர் (ஆந்திரா), மனோகர் பன்சட் துணைத் தலைவர் (மகாராட்டிரா), சாம்பசிவராவ், செயலாளர் (தெலங்கானா), எம்.என். புத்தா, செயலாளர் (ஆந்திரா), வி. மோகன், செயலாளர் (தமிழ்நாடு), கங்காதர் சாகு, செயலாளர் (ஓடிசா), ராம்குமார், செயலாளர் (பஞ்சாப்), ஹிரிபா பதோடு செயலாளர் (மகாராட்டிரம்), திரஷ்யா ஜான், அமைப்புச் செயலாளர் (கேரளா), விஜய் காக்கூரால், உறுப்பினர் (மகாராட்டிரம்), கிரிஞ்ஞால கிருஷ்ணன், உறுப்பினர் (கேரளா), எம்.எஸ்.என். மூர்த்தி, உறுப்பினர் (ஆந்திரா), பசந்த் ஆச்சாரியா, உறுப்பினர் (ஒடிசா), மோனிகா சிறீதர், உறுப்பினர் (தெலங்கானா), மம்தா நாயக், உறுப்பினர் (ஒடிசா), மயூர்ெஷட்டி, உறுப்பினர் (கர்நாடகா), தானேஸ்வர் சாகு, புரவலர் (ஒடிசா).
நிறைவேற்றப்பட்ட மாநாட்டு தீரமானங்களும், புதிய செயற்குழு பொறுப்பாளர்களும் நினைவரங்க நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.
இரண்டு நாள் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வுகளை சிறப்பாக நேர்த்தியாக தொகுத்து வழங்கினார் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்.
FIRA அமைப்பின் இரண்டு நாள் 13ஆம் தேசிய மாநாட்டின் சிறப்புகள்:
1. இதுவரை நடைபெற்ற FIRA தேசிய மாநாடுகளில் பங்கேற்ற பேராளர்களை (Delegates) விட அதிக அளவில் பங்கேற்றனர்.
2. உறுப்பினர் அமைப்பின் பேராளர்களில் மிகப் பலர் மாநாட்டில் நிகழ்வுகளில் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்று தங்களது பணியினைச் செய்தனர்.
3. புத்தக வெளியீடும் முத்தாய்ப்பாக நடந்தேறியது.
4. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரண்டு நாள்களில் மூன்று சிறப்புரை வழங்கி கருத்துப் பரவலுக்கு வலு சேர்த்தார். FIRA உறுப்பினர் அமைப்பின் மூத்த இளைய பேராளர்கள் தமிழர் தலைவருடன் நெருக்கமாக இருந்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
5. தமிழ்நாடு மாநில அரசின் இந்நாள் அமைச்சர், ஒன்றிய அரசின் மேனாள் அமைச்சர், நாடாளுமன்ற, பகுத்தறிவாளர் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்று உரையாற்றினர்.
6. பேராளர்கள் தங்குமிடங்கள், இரண்டு நாள் உணவு வழங்கலும் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு, பேராளர்கள் அதை மாநாட்டுபற்றிய கருத்துரை வழங்கலின் பொழுது வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
7. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள கொள்கைப் புத்தகங்கள், கருத்தியல் கட்டுரைப் புத்தகங்கள் குறிப்பாக ஆங்கிலத்தில் உள்ளவைகளை அதிக அளவில் பேராளர்கள் வாங்கிச் சென்றனர்.
ஒட்டு மொத்தத்தில் FIRA அமைப்பின் 13ஆம் தேசிய மாநாடு, பகுத்தறிவாளர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் திட்டமிட்டவாறு செம்மையாக நடத்தி முடிக்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் உள்ள பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஒத்துழைப்பு, செயல்பாடு நிறைவாக தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் மாநாட்டின் சிறப்பிற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
தொகுப்பு: வீ. குமரேசன்