மிர்சாபூர், டிச. 31- கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு சாமியிடம் வரம் பெற்று செல்வதுபோல், சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை ஒரு நபர் திருடிச் சென்றுள்ளான்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த வினோத நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:- உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவில் ஒன்றில் வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி இருந்தார்.
அதை பார்க்கும் மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட பக்திமான் இவர் என்றே நினைக்கத்தோன்றும். ஆனால் அவர் அதற்காக வரவில்லை. சுமார் 15 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு இருந்த அந்த நபர், கண்களை மெல்லத் திறந்து மெல்ல எழுந்து கருவறைக்குள் சென்ற அந்த நபர், அனுமன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை நைசாக எடுத்து தன்னிடம் இருந்த துணிப்பைக்குள் வைத்தார். அக்கம்பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்பதை பார்த்த அந்த நபர் மெதுவாக கோவிலில் இருந்து வெளியே சென்றார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. சற்று நேரத்தில் சன்னதிக்கு வந்த பூசாரி, சாமி சிலையில் இருந்த கிரீடம் காணாமல் பேயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி காவல்துறையிலும் புகார் செய்தார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை தேடிவருகிறார்கள். கோவிலில் சாமியிடம் வேண்டிக்கொண்டு, சாமி சிலையில் இருந்த கிரீடத்தையே திருடிச்சென்ற அந்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதுதான் உத்தரப்பிரதேச
முதலமைச்சர் வேலையா?
நிர்வாண சாமியார்கள் குளிக்கும் கும்பமேளாவிற்கு வர அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பாம்
புதுடில்லி, டிச. 31- உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகாகும்பமேளா நடக்கிறது. இந்த மகாகும்பமேளா, ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா, நேற்று (30.12.2024) டில்லியில் ஒரு வாகனப் பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. டில்லி முதலமைச்சர் அதிஷியையும் சந்தித்து அழைப்பு விடுக்கப் போவதாகக் கூறினார்.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து மகளிருக்கான திறன் மேம்பாட்டு மய்யம் திறப்பு
சென்னை, டிச. 31- ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 அமைப்பானது, மெட்ராஸ் டோட்ரி கிளப், மகளிர் அதிகாரமளிப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்வாய்ப்பு சேவைகள் குழு ஆக்சஸ் ஹெல்த்கேர் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுத் துறை உதவியுடன் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெறவும், சொந்தமாகத் தையல் தொழிலைத் தொடங்கவும், டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்ரி திறன் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கியது.
இந்தத் திறன் மேம்பாட்டு மய்யத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 அமைப்பின் மாவட்ட ஆளுநர் என்.எஸ்.சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் ஏ.கே.எஸ்.மஹிந்தர் ஜெயின், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சேலையூர், செம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே இயங்கி வரும் ரோட்டரி திறன் மேம்பாட்டு மய்யங்களில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள 200 விலையில்லா மின் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
சென்னை புத்தகக் காட்சியில்
மருத்துவர் மா.திருநாவுக்கரசுவின்
மனமே நலமா… மனநலப் படைப்புகள்
சென்னை, டிச. 31- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 43இல், மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் மா.திருநாவுக்கரசு அவர்களின், மனமே நலமா… மனநலம் படைப்புகள் – விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் வாங்கி பயன் பெறலாம்.