* குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் முத்தமிழறிஞர் கலைஞர்
* அதை மேலும் செழுமைப்படுத்தி விழா எடுக்கிறார் நமது முதலமைச்சர்!
குமரிமுனையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவியவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். அதனை மேலும் செழுமைப்படுத்தியிருக்கிறார் – சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை நிர்மூலப்படுத்துவதுதான் என்று ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
முக்கடல் சூழும் குமரி முனையில் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ‘பேரறிவுச் சிலை’யாக (Statue of Wisdom) அமைத்து (அமெரிக்கா வின் ‘சுதந்திரதேவி’ சிலைக்குள்ள முக்கியத்துவம்போல), திராவிட ஆட்சியின் அருஞ்சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றது. அந்த ‘‘மானமிகு சுயமரியாதைக்காரரின்” ‘திராவிட’ சூத்திர, பஞ்சமர்களுக்கு சமூகநீதி வழங்கிடும் சீரிய பகுத்தறிவு அரசு.
அறிஞர் அண்ணாவின் தலைமையில் அமைந்த திராவிடர் ஆட்சியின் தொடர்ச்சியே கலைஞரின் சாதனைகள் பூத்துக் குலுங்கி காய்த்து கனிந்த நிகழ்வுகள்.
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் திருக்குறள்!
அந்த வள்ளுவரை – ஒப்பற்ற பேரறிவு படைத்த பெம்மானை உலகத்திற்கு நினைவூட்டும் சிறப்பே – அதன்மூலம் வள்ளுவத்தை வையகம் ஏற்கவேண்டிய தேவையினை காலமெல்லாம் நினைவூட்டும் காலத்தை வென்ற சாதனை செய்து, கால் நூற்றாண்டு (வெள்ளி விழா) தாண்டும் நிலையில், அதை ஒரு வாய்ப்பாகப் பற்றிக் கொண்டு, வள்ளுவத்தைப் பரப்பி, பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவ சமூகத்திற்கான பணிகளின் தொடர் சாதனைகளை விளக்கவே இப்படி ஒரு விழாவை ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.12.2024) ‘திருவள்ளுவர் சிலையை, விவேகானந்தர் பாறையுடன்’ இணைக்கும் கண்ணாடி இழை (Fiber) பாலத்தைத் திறந்து அறிவுக்கு அழகு செய்துள்ளார் – அகிலம் வியப்படைகிறது!
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, ‘திராவிடம்’ என்றால் ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் அறிவின் தத்துவம் என்பதை வள்ளுவத்தை உண்மையாகவே புரிந்தவர்கள் வாழும் முறையாக ஆக்கி மகிழவேண்டும் என்பதே இப்பண்பாட்டுத் திருவிழாவின் நோக்கம்.
மனோன்மணியம் சுந்தரனார் பார்வையில் மனுவும் – திருவள்ளவரும்!
சமத்துவத்தால் கைகோர்க்கவேண்டிய மானுடத்தை – ஜாதி, மத பேதங்களால் பிளவுபடுத்திய கொடுமையை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பியவர் நம் வள்ளுவப் பேராசான்!
வர்ணாசிரமத்தைத் திணித்து, மூளைக்குக் காவிச் சாயமேற்றும் கொடுமைக்கு எதிராக வள்ளுவர் கொட்டிய போர் முரசுதான் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள்.
புகுத்தப்பட்ட ஜாதி, மத பேதங்களின் மண்டையில் அடித்து, மனுநீதியை எதிர்த்து முழங்கியவர்தான் வள்ளுவப் பேராசான்.
மனோன்மணியம் சுந்தரனார்,
‘‘வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒரு குலத்துக் கொருநீதி”
என்று கேட்டார்! ஆரியப் பண்பாட்டுப் படை யெடுப்புக்கு எதிராக அமைந்த களத்தினைக் காட்டிய செம்மல் வள்ளுவர்.
‘‘எல்லாம் தலைவிதி”
‘‘எதுவும் நம் கையில் இல்லை!”
என்ற மூடக் கருத்துகளை நம் மக்கள் மூளைக்குள் திணித்த பழைமையை எதிர்த்துப் போராட, மக்களுக்கு அறிவு கொளுத்திட்ட பணியே அவரது அக்காலப் பணி!
அதனால்தான் ஆரியம் வள்ளுவரை இருட்டடித்தே வைத்திருந்தது.
75 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு
தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்குமுன்பு (15, 16.01.1949) தலைநகர் சென்னையில் இரு நாள்கள் திருவள்ளுவர் விழா எடுத்து, தமிழ் அறிஞர்களை, பெரும்புலவர்களை அழைத்துப் புத்தக அலமாரிக்குள் புதைத்து வைக்கப்பட்ட வள்ளுவரின் குறளின் ஒளியை யும், ஒலியையும் எளிய மக்களிடமும் கொண்டு செல்ல வழிவகுத்தார்.
மலிவு விலையில் திருக்குறளைப் பரப்பியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
திராவிட இயக்கம்தான் அவரை அறிவின் ஊற்று என்பதாக மக்களிடம் கொண்டு சென்று அதன்மூலம் சரித்திரம் படைத்தது.
அந்தப் பண்பாட்டுப் போரை – அறிவுப் போரை – அறப்போரை (இன்னும் ஆரியம் கைவிடாமல், வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி, கலகம் விளைவித்து திசை திருப்ப – திட்டமிட்ட பணியைத் தொடர்ந்து செய்கின்றது) அதற்கு அமைதி வழியில், ஆக்கப்பூர்வ விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வெகுச் சிறப்பான முதலமைச்சரின் அற்புதமான இந்த வெள்ளி விழா, வெற்றி விழா!
விவேகானந்தருக்கு அங்கே அமைக்கப்பட்ட சிலைக்குப் பின்னால் உள்ள பல்வேறு முயற்சிகளை எப்படி முன்னெடுத்து – மக்களிடம் இன்னமும் மதவெறியைப் பரப்ப, அவரை ஓர் ஆயுதமாகக் கொண்டி ருக்கிறது ஆரியம் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய உண்மை!
வர்ணத்துக்காக வாதாடிய விவேகானந்தர்
விவேகானந்தர் ஜாதிக்கு – வர்ண தர்மத்திற்காக வாதாடிய விசித்திரமானவர்.
இதற்கு ஆதாரம் மனோன்மணியம் சுந்தரனார், வீட்டிற்கு அழைத்துக் கொடுத்த விருந்தின்போது, விவேகானந்தர் நடந்துகொண்ட வர்ண உணர்ச்சி வெளிப்பாடு – அவரது உரைகளின் முழுத் தொகுப்பு, அவர் ஜாதி முறையை நியாயப்படுத்தியதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள்.
அதற்கு சரியான மாற்று மருந்தாகத்தான் வள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைத்து, செயலை விடையாகத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அந்த வினைத் திட்பத்தை மேலும் சிறப்புடன் வெளிச்சம் காட்டி, ‘பேரறிவு ஒளியின் திருவாக நமது முதலமைச்சர் விழா மூலம் ஒரு புத்தாக்கத்தைச் செய்து, புவியோருக்குப் புரிய வைத்திருக்கிறார்.
புதிய உலகத்தை நோக்கிய புத்தொளி!
தலைவிதியால் தாழ்ந்த மூடநம்பிக்கையாளர்களின் முதுகெலும்பை உடைக்கும் வள்ளுவரிடம் அறிவு ஏவுகணைகளுக்குப் பஞ்சமா?
‘‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”
என்பது போன்ற வாழ்வில் உழைப்பின்மூலம் உயர வைக்கும் – தலையெழுத்து நம்பிக்கையை தகர்த்தெறியும் அறிவு ஒளி – இப்படியெல்லாம் எழுதிக் கொண்டே போகலாம்.
இதனை இப்போது திராவிடத்தின் தத்துவம் தான் என உலக மக்களுக்கு எடுத்துக் கூறி, இவ்விழா கலங்கரை வெளிச்சமாகட்டும்!
‘திராவிடம்’ எவரையும் பிரிப்பதல்ல; எல்லோரையும் இணைப்பது” என்பதே – இணைக்கும் பாலம் – தத்துவ ரீதியாகவும்!
நமது முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசின் பண்பாட்டுப் பாதுகாப்புக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
புது உலகத்தை நோக்கிய
பயணத்திற்கான புத்தொளி இது!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
31.12.2024