‘எங்களை வழிநடத்துவது பெரியார் திடல்!’ – ஆ.இராசா எம்.பி.
‘நாத்திக வாழ்க்கையே என் நிம்மதிக்கு காரணம்!’ – ‘இனமுரசு’ நடிகர் சத்யராஜ்
ஃபெரா மாநாட்டின் இரண்டாம் நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரைகள்
தொகுப்பு: வி.சி.வில்வம்
திருச்சி, டிச.30 அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்க ளின் கூட்டமைப்பின் 13 ஆவது தேசிய மாநாடு 28, 29 ஆகிய நாள்களில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளான நேற்று (29.12.2024) மாலை புத்தூர் நான்கு சாலை அருகே மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்!
‘‘திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளில் உங்க ளுக்கு எது பிடிக்கும்’’ எனக் குன்றக்குடி அடிகளார் அவர்கள் தந்தை பெரியாரிடம் கேட்டார்கள். அய்யா எந்தக் குறளை சொல்வார் என எல்லோரும் ஆவலாய் பார்த்தார்கள். அய்யா சொன்னார், ‘‘குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்’’ என்றார். பொதுத் தொண்டு செய்பவர்களுக்குக் கொட்டும் மழையும் பொருட்டல்ல; கொளுத்தும் வெயிலும் பொருட்டல்ல! காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல் என்றெல்லாம் தொடர்ந்து அறிவிப்பு வந்தது. எல்லா தாழ்வு மண்டலங்களையும் பார்த்தவர்கள் நாம்! அந்த வகையிலே இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக முடிந்திருக்கிறது.
இந்த இயக்கத்தை ‘‘அறிவு விடுதலை இயக்கம்’’ என்றார் பெரியார். பகுத்தறிவாளர் கழகத்தின் சின்னமே கேள்விக்குறி தான்! ‘‘யார் சொல்வதையும் நம்பாதே, சிந்தி’’ என்பதுதான் எங்கள் கொள்கை. ஒரு கல்லூரியில் பெரியார் பேசுகிற போது ஒரு மாணவர், ‘‘யார் சொல்வ தையும் நம்பாதே என்றால், நீங்கள் சொல்வதை நம்ப லாமா?’’ எனக் கேட்டார். ‘‘நம்பாதே! உன் அறிவு என்ன சொல்கிறது எனப் பார், உன் அறிவுக்கு வேலை கொடு’’ என்றார் பெரியார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்கும் கட மைகள் இருக்கின்றன என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. அந்தப் பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
கைப்பேசி இருப்பது கடவுளுக்குத் தெரியுமா?
இன்று கைப்பேசி இல்லாத மனிதர்களே கிடையாது. இந்தக் கைப்பேசியைக் கண்டுபிடித்த விவரம் முப்பத்து முக்கோடி தேவர்களுக்குத் தெரியுமா? அறிவியலுக்கும், ஆன்மிகத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ‘‘எத்தனையோ அவதாரங்களைக் கடவுள் எடுத்ததாகச் சொல்கிறார்கள். ஒரு அவதாரமாவது அமெரிக்கா, ரஷ்யாவில் தோன்றி இருக்கிறதா?’’ என்று கேட்பார். இன்றைக்கு மாரியாத்தா திருவிழா எல்லாம் கைப்பேசியில் வருகிறது. இந்தச் செய்திகளைக் கட்சிக் கண்ணோட்டம் இன்றி நீங்கள் அறிய வேண்டும். கடவுள் மறுப்பு மட்டுமல்ல நாத்திகம். இது ஓர் அறிவு இயக்கம், பகுத்தறிவு இயக்கம், மனிதநேய இயக்கம். ஹிந்து மதத்தை மட்டுமே பேசுவதாகச் சிலர் சொல்வார்கள். மனித வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அனைத்தையுமே கேள்வி கேட்கிறோம். புத்தர் மூடநம்பிக்கைகளை எதிர்த்தார், கடவுளை மறுத்தார். ஆனால், ஹிந்து மதம் என்ன செய்தது? அவரையே கடவுளாக மாற்றிவிட்டது.
இங்கே நாத்திக நன்னெறி செம்மல் சத்யராஜ் அவர்கள் சிறப்பாகப் பேசினார். அவருடைய அமைதிப்படை படத்தில், எனக்கு ரேகை கெட்டியாக உள்ளது, ஆயுள் ஜாஸ்தி என ஒருவர் சொல்வார். சத்யராஜ் அவர்கள் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவார். உடனே அவர் இறந்துபோவார். பகுத்தறிவோடு சிந்திப்பதற்காக இந்தக் காட்சியை வைத்திருப்பார்கள். ‘கடவுளை மற மனிதனை நினை’ என்றார் பெரியார். மனிதனை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடவுளை மறக்கச் சொன்னார். ஒரு விமானம் விபத்தாகப் போகிறது என்றால் எல்லோரும் கடவுளைக் கும்பிடுவார்கள். அதுவும் எல்லா மதக் கடவுளையும் கூப்பிடுவார்கள். கடவுள்களின் கூட்டணி உருவாவது அப்போதுதான்.
கடவுளிடம் உதவி கேட்பதில்லை!
திருவண்ணாமலையில் மலை சரிந்து பெரும் விபத்துக்கு உள்ளானது. யாரும் கடவுளிடம் சென்று எதுவும் கேட்கவில்லை. அரசாங்கத்திடம் போய் உதவி கேட்கிறார்கள். அந்த இடத்தில் அவர்களே கடவுளை நம்பவில்லை. பகுத்தறிவு கருத்துகள் என்பது புண்படுத்துவது அல்ல; மாறாக நம்மைப் பண்படுத்துவது! தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார். கிராமத்தில் இருந்து வந்தார், விவசாயி வீட்டுப் பிள்ளை, இட ஒதுக்கீடு பெற்று அய்..பி.எஸ் ஆனார். மகிழ்ச்சி! அரசியல் கற்க லண்டன் செல்கிறேன் என்றார். சென்று வந்ததும் அரிய பல கருத்துகள் சொல்வார் என்று பார்த்தால் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்கிறார். இவர்களையெல்லாம் திருத்த இன்னும் நாம் அதிகமான கூட்டங்களை நடத்த வேண்டும்.
இன்றைக்கு இந்த ஒலிபெருக்கி இருக்கிறது. ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் சத்தம் போட்டு பேச வேண்டும். ஆயிரம் பேர் இருக்கிற கூட்டத்தில் மேடையில் ஒருவர் பேசுவார். கூட்டத்தின் நடுவே நின்று மற்றொருவர் அதையே திருப்பி சொல்வார். இப்படியே இரண்டு, மூன்று பேர் நிற்பார்கள். பின்னாளில் ஒலிபெருக்கி வந்துவிட்டது. துண்டறிக்கையில் குறிப்பு எனப் போட்டு, ‘‘இந்தக் கூட்டத்தில் ஒலிபெருக்கி உண்டு’’ என விளம்பரம் செய்வார்கள். இதுபோன்று எவ்வளவோ கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. இதற்கும் கடவுளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
‘‘நான் இருக்கிறேன்’’ என்று
‘கடவுள்’ சொல்வாரா?
இந்த ஒலிபெருக்கியில் நான் கடவுள் இல்லை என்கிறேன். சக்தி வாய்ந்த கடவுள் வந்து, நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்று சொல்வாரா? தூணிலும் இருப்பவர், துரும்பிலும் இருப்பவர் இந்த ஒலிபெருக்கியில் இருக்க மாட்டாரா? என் பக்கத்தில் சத்யராஜ் இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் சத்யராஜ் கலந்து கொள்ளவில்லை என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? பக்கத்திலேயே வைத்துக் கொண்டு இல்லை என்று எப்படி சொல்ல முடியும் எனக் கேட்பீர்கள். சத்யராஜ் அவர்களே கூட, என்னங்க நான் இங்கதானே இருக்கிறேன், நான் இல்லை என்று எப்படி சொல்வீர்கள் எனக் கேட்பார். ஆக சாதாரண மனிதரான சத்யராஜ் அவர்களே இப்படி கேட்கும் போது, உலகையே ஆளும், சர்வ சக்தி
உடைய கடவுள், ‘‘என்னை இல்லை என்று சொல்லாதீர்கள், நான் இருக்கிறேன்’’, என்று ஏன் கூறுவதில்லை?
கடவுளுக்கு எதிரான மருத்துவர்கள் பணி!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பெரியாரை பேச அழைத்தார்கள். மருத்துவர்கள் அனைவரும் வரவேற்றார்கள். ‘‘நான் ஒன்றும் பெரிதாகத் தொண்டாற்ற வில்லை. நீங்கள் எப்படிக் கடவுளுக்கு எதிராக இருக்கிறீர்களோ, அப்படியே நானும் செய்கிறேன். கடவுள் கொடுக்கும் நோய்களை எல்லாம் நீங்கள்தானே சரிசெய்கிறீர்கள்’’ என்றார் பெரியார். அதேபோல தஞ்சாவூர் திறந்த வெளி சிறைச்சாலையில் பேச அழைத்தார்கள். இங்கே உள்ள ஆயுள் கைதிகளில் யார் யாருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று கேட்டார். அனைவரும் கை உயர்த்தினர். உங்கள் கடவுள் நம்பிக்கை எந்த வகையிலும் பயன் தரவில்லையே என்று கூறினார். இதுபோன்ற கேள்விகள் சிந்திப்ப தற்கும், வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொள்ளவுமே பயன்படும்.
முன்னோடி மாநிலம் தமிழ்நாடு!
நூறாண்டுகளுக்கு முன்னால் கேரளா, வைக்கத்தில் நடைபெற்ற மனித உரிமைப் போராட்டத்தை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் சிறப்பான விழா எடுத்தார்கள். இந்த மாநாட்டிற்கு 17 மாநிலங்களில் இருந்து தோழர்கள் வந்துள்ளனர். எனினும் பகுத்தறிவாளர் கழகம் ஒரு அமைப்பாக, மக்கள் இயக்கமாக இருப்பது தமிழ்நாட்டில் தான். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் இந்த இயக்கத்தின் தேவை இருக்கிறது’’, எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
விஞ்ஞானக் கருவியில் அஞ்ஞானப் பிரச்சாரம்!
தொடக்கவுரை ஆற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், ‘‘அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. 17 மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கருத்தரங்கு, ஆய்வுரை, கலைநிகழ்ச்சிகள் என எல்லோரும் வியக்கும் வண்ணம் நடைபெற்றுள்ளது. எப்போதுமே தமிழ்நாடு வியப்பிற்கு உரியதுதான். காரணம் இங்கே தான் பெரியார் தோன்றினார். அவருடைய சிந்தனைகளும், கருத்துகளும் பெரிய அளவில் பரவி, மக்கள் இயக்கமாக இது வளர்ந்துள்ளது.
தொடர்ந்து மக்கள் மத்தியில் பகுத்தறிவு கருத்துகளைப் பேச வேண்டியுள்ளது. படித்தவர், படிக்காதவர் என்கிற வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் படிப்பு வேறு; பகுத்தறிவு வேறு என்றார் பெரியார். 1970 ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தைத் தோற்றுவித்தார் பெரியார். அதுவும் ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துத் தொடங்கினார். இது ஒரு முக்கியமான வரலாறு ஆகும். இதில் நீதிபதிகள், எண்ணற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பொறுப்பில் இருந்துள்ளனர்.
விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு, அஞ்ஞானக் கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். தொலைக்காட்சியைத் திறந்தால் எந்தக் கலரில் சட்டை அணிய வேண்டும், என்ன மோதிரம் போட வேண்டும் என்கிற மூடநம்பிக்கைகளை விதைத்து வருகிறார்கள். அறிவு நாணயம் இருந்தால் இவர்கள் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளில் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அரசியல் சட்டமே அனுமதிக்கிறது. இந்த மாநாடு சிந்தனை ஊட்டக்கூடிய, பயனுள்ள மாநாடாக அமைந்துவிட்டது”, எனக் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்!
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., உரையாற்றுகையில்,
‘‘சமுதாய இயக்கமாக தோன்றிய ஓர் அமைப்பு, அதிலிருந்து உருவான ஒரு கட்சி, அந்தக் கட்சி இன்றைக்கு ஆட்சி செய்து வருகிறது. அப்படியான கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பேசுகிறேன். இந்தக் கூட்டத்திற்கு இவ்வளவு மக்கள் திரள் வந்திருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். தமிழ் இலக்கியங்களில் ஓருயிர், ஈருயிர், மூன்றுயிர், நான்குயிர், அய்ந்துயிர், ஆருயிர் குறித்தெல்லாம் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் டார்வின் தத்துவம் வரு முன்பே தமிழில் வந்துவிட்டது. ஆனால் ஓருயிர் தொடங்கி அய்ந்துயிர் வரை எதிலும் ஜாதி சண்டை இல்லை, வர்க்கப் போராட்டம் இல்லை. ஆனால் ஆறறிவு உள்ளதாகக் கூறும் மனிதன் மட்டும் ஜாதி, மதத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். அவற்றை விட்டு வெளியே வா என்றவர்தான் பெரியார். இதைத்தான் வடக்கில் அம்பேத்கர் பேசினார்.
எங்களின் வழிகாட்டி ஆசிரியர்!
ஆண் பெண்ணை அடிமை செய்வது, பெரிய ஜாதி, சிறிய ஜாதியை ஆதிக்கம் செய்வது என எந்த அடிமைத்தனத்தையும் பகுத்தறிவு ஏற்பதில்லை. இராமர் பிறந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகக் கூறினார்கள். அப்போது இராமர் அதைத் தடுக்கவில்லை. பிறகு மசூதியை இடித்துவிட்டு இராமர் கோயில் கட்டினார்கள். அல்லாவும் அதைத் தடுக்கவில்லை. இராமரை வைத்தே பல ஆண்டுகள் அரசியல் செய்துவிட்டார்கள். இராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேட்டார் கலைஞர். அந்தத் துணிச்சல் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் உண்டு. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ‘‘எனக்கு வழிகாட்டி பெரியார் திடலும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் தான்’’, என்று கூறினார்.
நாங்கள் 20; நீங்கள் 300
தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் 20 பேர் இருக்கிறோம். எங்களைப் பார்த்து கதறுகிறார்கள். நாங்கள் 20 பேர், அவர்கள் 300 பேர். நாங்கள் என்றால் தனி மனிதர் அல்ல. பெரியாரும், அம்பேத்கரும், பகுத்தறிவு சிந்தனைகளும் எங்களுக்குப் பின்னணியில் இருக்கின்றன. சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பாலின சமத்துவம் இவைதானே இந்த இயக்கத்தின் தலையாய கொள்கை. கலைஞரைப் பார்த்து சிலர் என்ன தகுதி இருக்கிறதா என்கிற ரீதியில் கேட்டார்கள். பெரியாரும், அண்ணாவும் என் மனதில் இருக்கும் வரை, எல்லா தகுதியும் எனக்குண்டு என்றவர் கலைஞர். அதேபோல ஜாதியை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். பகுத்தறிவு சிந்தனை இருக்கிற அனைவருக்கும் ஜாதியை ஒழிக்கும் வலிமை வந்துவிடும்.
பெரியார் எனும் நெருப்பு…
பெரியார் கொள்கை என்பது நெருப்பு போன்றது. அது நாசகார செயல்களை எல்லாம் பொசுக்கிவிடும். பெரியாரைப் பார்த்து ஒரு தோழர், ‘‘அய்யா உங்களுக்கு 92 வயதாகிவிட்டன, சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமாகிவிட்டது, கலைஞர் முதல்வர் ஆகிவிட்டார், உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறிவிட்டது. எனவே சற்று ஓய்வெடுங்கள்’’, என்று கூறினாராம். பெரியார் சொன்னாராம், “காலையில் 2 இட்லி சாப்பிடுகிறேன், பிறகு ஒரு தேநீர் குடிக்கிறேன், மதியம் கொஞ்சம் புலால் உணவும், இரவு சப்பாத்தியும் சாப்பிடுகிறேன். இவற்றையெல்லாம் எனக்காக உழைத்துத் தருகிறார்களோ, அவரின் சூத்திரப் பட்டம் ஒழியும் வரை நான் ஓயமாட்டேன்,’’ என்றாராம்.
இன்றைக்கு ஆசிரியர் அவர்களும் கடுமையாக உழைத்து வருகிறார். ஓய்வு என்பதே கிடையாது. இந்தச் சமுதாய மேன்மைக்காக பெரியாரின் ஆயுளையும் கடந்து ஆசிரியர் எங்களுக்குத் தேவைப்படுகிறார். ஏனெனில் எங்களை வழிநடத்துவது பெரியார் திடல் தானே தவிர, சங்கரமடம் அல்ல’’, என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா பேசினார்.
தமிழ்நாடு, கேரளாவிற்கு நன்றி!
‘இனமுரசு’ நடிகர் சத்யராஜ் உரையாற்றுகையில்,
தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள் இணைந்து வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் நன்றி! பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட இந்த இரு முதல்வர்களும் இந்தியாவிற்கே தேவைப்படுகிறார்கள். பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம் என ஆசிரியர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். பெரியார் மயம் என்றால் எல்லோரையும் புத்திசாலி ஆக்குவது என்று பொருள். மூடநம்பிக்கை அற்ற வாழ்க்கைதான் தெளிவானது; மகிழ்ச்சியானது!
பிறக்கும் போது ஒரு குழந்தை நாத்திகராகவே பிறக்கிறது. அதன் பிறகுதான் அந்த வீட்டில் உள்ள மதம் அந்தக் குழந்தைக்குள் வருகிறது. தொடர்ந்து மூடநம்பிக்கைகளைத் திணித்து விடுகிறார்கள். பெரியார் திரைப்படத்தில் நடித்த காட்சிகள் இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கின்றன. திமுக ஆட்சி அமைக்கும் முன், பெரியாரிடம் வாழ்த்து வாங்கியது, சுயமரியாதைத் திருமணச் அமுலுக்கு வந்தது போன்றவை எல்லாம் அதில் இடம் பெற்றிருக்கும்.
உண்டியலுக்கு ஏன் பூட்டு?
ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் எளிமையான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கோயில் உண்டியலில் காசு போடுவது ஆதிக்கம். அங்குள்ள கடவுளை நம்பாமல் உண்டியலுக்குப் பூட்டு போடுவது நாத்திகம்! தலைவலி வந்தால் கடவுளே என்பது ஆதிக்கம். மாத்திரை போட்டு சரிசெய்வது நாத்திகம். கடவுள் மறுப்பு என்பதே சமூக மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான்! மற்றபடி கடவுளுக்கும் பெரியாருக்கும் எந்த வாய்க்கால், வரப்புத் தகராறும் இல்லை.
பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற வேறுபாடுகளையும், ஆண், பெண் பேதங்களையும் இவர்கள் மதம், சாஸ்திரம், வேதங்கள் கற்பித்து வைத்திருக்கின்றன. இந்தியா முழுவதும் இருந்து பகுத்தறிவாளர்கள் இங்கே வந்துள்ளனர். இவர்கள் எல்லாம் சமூகத்திற்காகத் தொடர்ந்து போராடி வருபவர்கள். அப்படி போராடிய கவுரி லங்கேசை அநியாயமாகச் சுட்டுக் கொன்றார்கள்.
கேமராவைப் பார்த்து சிரிப்பு!
எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது. சினிமாவில் சாவது போல நடித்தால், உடனே தேங்காய் உடைப்பார்கள். பிறகு கேமராவைப் பார்த்துச் சிரிக்கச் சொல்வார்கள். என் முதல் படத்திலே நான் இறப்பது போன்று காட்சி வரும். எனக்குத் தேங்காய் எல்லாம் சுற்றவில்லை. 40 ஆண்டுகளாக நன்றாகத்தான் இருக்கிறேன். அதேபோல எனக்கு ஒரு அறுவைச் சிகிக்சை நடந்தது. நல்ல நாளாகப் பார்த்துச் சொல்லுங்கள், செய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறினார்கள்.
செவ்வாய்க்கிழமை, இராகு காலம், எமகண்ட நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய சொன்னேன். மருத்துவர் பயந்துவிட்டார். உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நல்ல நேரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறினேன். அறுவைச் சிகிச்சை முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது, எந்தப் பிரச்சினையும் இல்லை,” என நடிகர் சத்யராஜ் பேசினார்.