திருச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய வாக்கத்தான் நிகழ்ச்சி!
திருச்சி, டிச.29 திருச்சியில் வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்து முன்வரிசையில் நடந்தார். திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆசிரியரைப் பின்பற்றி நடந்தனர்.
வாக்கத்தான் நிகழ்ச்சி
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும்
13 ஆம் அகில இந்திய மாநாடு திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி நிறுவன வளாகத்தில் டிசம்பர் 28,29 இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவுடன் மூன்று அமர்வுகள் மற்றும் பஞ்சாப் மாநிலம் மற்றும் தமிழ்நாடு தோழர்கள் சார்பாக, ”மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சிகள், திராவிடர் கழக கலைத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ’தீ’ விளையாட்டு போன்றவை நடைபெற்றன. அடுத்தநாளான இன்று (29.12.2024) அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியாக வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (29.12.2024) காலை 7 மணிக்கு வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். முன்னதாக வெள்ளை நிற பனியன் பின்புறம் ”அறிவியல் வழி நடப்போம்” என்று தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. தமிழர் தலைவர் தொடங்கி தோழர்கள் அனைவருக்கும் பனியன் வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் முதலில் நடக்க மற்றவர்கள் மூவர் மூவராக வரிசையாக அவரைப் பின் தொடர்ந்தனர். ஒலி முழக்கங்கள் எதுவும் இல்லாமல் கைகளில் அறிவியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுகின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி தோழர்கள் நடந்தனர். நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா. நேரு, பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் சுப்பிரமணியம், பெரியார் மருத்துவ குழும இயக்குநர் குன்னூர் மருத்துவர் கவுதமன், மூதறிஞர் குழுத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், பொ.நாகராஜன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர்கள் மோகன், வெங்கடேசன், பகுத்தறிவு கலைத் துறை தலைவர் பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன், புதுச்சேரி தலைவர் சிவ. வீரமணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, ஊடகத்துறை மாநிலத் தலைவர் அழகிரிசாமி, தொழிலாளர் அணி மாநில செயலாளர் சேகர், தங்கமணி தனலட்சுமி, பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர் மாரி கருணாநிதி, மடிப்பாக்கம் பாண்டு, அரக்கோணம் லோகநாதன், கும்மிடிப்பூண்டி டார்வி, சண்முகநாதன், மாணிக்கம், வேணுகோபால், திருவொற்றியூர் கே .ஆர். ஆசைத்தம்பி, விடுதலை நகர் ஜெயராமன், குமார், ஆவடி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் (29.12.2024)