மதுரை,டிச.29- முதல் மனைவி இருக்கும்போது 2ஆவதாக திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனு
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரபி அகமது, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது. எனக்கும் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2010ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
நாங்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் என் மனைவி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் என் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட கீழமை நீதிமன்றம், என் முதல் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், குழந்தை பராமரிப்புக்கு மாதந் தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கும்படி கடந்த 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரர் ஒரு அரசு மருத்துவர் அவர் எந்தவிதமான குடும்ப வன்முறை யிலும் ஈடுபடவில்லை என வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு.
மனுதாரர் முதல் மனைவி இருக்கும்போது 2ஆவதாக திருமணம் செய்துள்ளார். ஒரு ஹிந்து அல்லது கிறிஸ்தவர். பார்சி, யூத மதத்தைச் சேர்ந்த கணவன், முதல் மனைவி இருக்கும் போது 2ஆவதாக திருமணம் செய்து கொண்டால் அது குற்றமாக அமைவதுடன் கொடுமையானதும் தான்.
குற்றம்
இந்த நடைமுறை முஸ்லிம்களுக்கு பொருந்துமா என்றால் ஆம் என்பது தான் பதில் – மனுதாரர் தனது முதல் மனைவியிடம் இருந்து அதிகாரப்பூர்வ மாக பிரிந்ததற்கான சான்றிதழை ஷரியத் கவுன்சில் வழங்கியதாக கூறுகிறார். ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்பு தான். நீதிமன்றம் கிடையாது. எனவே மனுதாரர் தனது மனைவி உடனான திருமண பந்தத்தை முறிக்க அதிகாரப்பூர்வமான நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெறத் தவறி விட்டார். எனவே இவர்களின் திருமண பந்தம் தொடர்கிறது
மனுதாரரின் இரண்டாவது திருமணம், முதல் மனைவிக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஒரு கொடூரமான செயலாகும். இதற்காக ரூ.5 லட்சம் இழப்பீட்டை கீழமை நீதிமன்றத்தில் விதித்தது நியாயமானது. இந்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.