மும்பை, டிச.29 ஊசி போட்டுக் கொள்வது என்றாலே பலருக்கு அலர்ஜி; பயம். இதனால் பலர் தடுப்பூசி போடாமல் விட்டு விடுகின்றனர். சில நோய்களுக்கு ஊசி மருந்துதான் உடனடி பலன் அளிக்கக் கூடியது. ஆனால், ஊசிக்கு பயப்படும் நோயாளிகள் மருத்துவர்களிடம் மாத்திரைகளை மட்டுமே எழுதித்தருமாறு வலியுறுத்துகின்றனர்.
வலிக்காத ஊசி
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மும்பை அய்.அய்.டி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் வீரன் மெனேசஸ் தலைமையிலான குழுவினர் தீர்வு கண்டுள்ளனர். அதிர்வலைகள் மூலம் ஊசி மருந்து செலுத்தும் முறைதான் அது. உயிர் மருத்துவ கருவிகள் மற்றும் சாதனங்கள் என்ற இதழில் கடந்த செப்டம்பர் மாதம் அய்.அய்.டி குழுவினரின் ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.
அந்த அறிக்கையில் அதிர்வலைகள் ஒலியை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியவை. இதன் மூலம் செலுத்தப்படும் திரவ மருந்து, மைக்ரோ ஜெட் போல செயல்பட்டு ஒலியை விட அதிக வேகத்தில் தசையில் ஊடுருவும். இதனால், நோயாளி உணரும் முன்னரே மருந்து அவரது உடலுக்குள் சென்று விடும் என அந்த குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியங்கா ஹன்கரே என்ற ஆய்வு மாணவர் இது குறித்துக் கூறுகையில், ‘‘ இரண்டரை ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர், அதிர்வலை மூலம் ஊசி மருந்து செலுத்தும் கருவியைக் கண்டுபிடித்துள்ளோம். பால் பாயிண்ட் பேனாவை விட சற்று நீளமான இந்த கருவியில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இதில் உள்ள குப்பியில் மருந்தை நிரப்பி இயக்கினால், நைட்ரஜன் வாயு ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் அதிர்வலையை உருவாக்கி, அதன்மூலம் மருந்தை நோயாளியின் உடலுக்குள் செலுத்தும்’’ என்றார்.
பூமிக்கு அடியில் டிரில்லியன் கணக்கில் ஹைட்ரஜன் வாயு
ஆய்வில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
பூமிக்கு அடியில் டிரில்லியன் கணக்கான டன் ஹைட்ரஜன் வாயு மறைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திறம்பட பயன்படுத்தினால், இந்த இயற்கை வளத்தைப் பயன்படுத்தி 200 ஆண்டுகளுக்கு கிரகத்தை இயக்க முடியும். ஹைட்ரஜனுக்காக புதை படிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை இது முடிவுக்குக் கொண்டுவரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
6.2 டிரில்லியன் டன் ஹைட்ரஜன் பூமிக்கு அடியில் பாறைகள் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கங்களில் புதைந்துள்ளது, இது உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை விட அதிகமாக உள்ளது. இதில் வெறும் 2 விழுக்காடு அதாவது சுமார் 124 பில்லியன் டன்கள் வாயு இரண்டு நூற்றாண்டுகளுக்கு உலகின் ஹைட்ரஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய ஹைட்ரஜன் பூமியில் இயற்கையாகவே காணப்படுகிறது. இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள இடத்தை துல்லியமாக கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.
பூமி இயற்கையாக ஹைட்ரஜனை எவ்வாறு உற்பத்தி செய்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க முடிந்தால், இந்த இயற்கை ஆற்றல் மூலமானது உலகளாவிய தேவை மற்றும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். பூமியின் மேற்பரப்பில் ஏரிகள் மற்றும் மலைகள் ஆகியவை இயற்கை பேரழிவுகள் காரணமாக அழியும் நிலையில், பூமி ஏற்ெகனவே வெப்ப உச்சநிலையை அனுபவித்து வருகிறது. மனித தேவைகளுக்காக பூமியின் ஆழத்திலிருந்து கனிமங்கள் மற்றும் இயற்கை வாயுக்களை பிரித்தெடுக்க ஆரம்பித்தால், அது பூமிக்கு ஆபத்தாக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ஆவது ஆண்டாக
10 லட்சம் இந்தியர்களுக்கு விசா
அமெரிக்கா வழங்கியது
புதுடில்லி, டிச.29 சுற்றுலா, வர்த்தகம், வேலை வாய்ப்பு, கல்வி என பல காரணங்களுக்காக அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு, விசாவை வழங்கியுள்ளது. இது நிரந்தர குடியுரிமை அல்லாத விசாவாகும். இந்த வகை விசாக்கள் எச்1-பி விசாக்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாகவே அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கியது.
10 லட்சம் விசா
தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்ல விசா கோரி 3.31 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவுக்கு அதிக அளவு மாணவர்களை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.