புதுடில்லி, டிச.29 இந்தியாவில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 2023-2024ஆம் நிதியாண்டில் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் முதல் கணக்கெடுப்பு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது.
2ஆவது கணக்கெடுப்பு
அதனைத் தொடர்ந்து 2-ஆவது கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் விவரங்கள் அந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://www.mospi.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
குடும்ப நுகர்வு செலவின ஆய்வு என்பது குடும்பங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு மற்றும் செலவினம் குறித்த தரவுகளை சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் நுகர்வு, செலவு முறை, வாழ்க்கைத் தரம், குடும்பங்களின் நலவாழ்வு குறித்து புரிந்து கொள்ள வகை செய்கின்றன.
கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள்
* 2023-2024-ஆம் ஆண்டில் நாட்டில் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் குடும்ப நுகர்வு மாதாந்திர செலவினத் தொகை சராசரியாக முறையே ரூ.4,122, ரூ.6,996 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் குடும்பங்களால் இலவசமாகப் பெறப்பட்ட பொருட்களின் மதிப்புகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
* பல்வேறு சமூக நலத் திட்டங்களின் மூலம் இலவசமாகப் பெறப்படும் பொருட்களின் மதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பார்க்கும்போது இந்த மதிப்பீடுகள் ஊரக, நகர்ப்புறங்களில் முறையே ரூ.4,247, ரூ.7,078 ஆக உள்ளது.
* 2023-2024-ஆம் ஆண்டு மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவு 9 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 8 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
* மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவிற்கான நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி 2011-2012-ஆம் ஆண்டில் 84 விழுக்காடு ஆக இருந்தது. இது 2022-2023-ஆம் ஆண்டில் 71 விழுக்காடு ஆகவும், 2023-2024-ஆம் ஆண்டில் 70 விழுக்காடு ஆகவும் குறைந்துள்ளது.
* 2023-2024-ஆம் ஆண்டில் கிராமப்புற, நகர்ப்புற குடும்பங்களின் உணவுப் பொருட்கள் தொகுப்பில் பானங்கள், சிற்றுண்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவை முக்கிய செலவினமாக உள்ளன.
* போக்குவரத்து வசதி, உடை, படுக்கை, காலணி, இதர பொருட்கள், பொழுதுபோக்கு, நீடித்து உழைக்கும் பொருட்கள் ஆகியவை கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களின் உணவு அல்லாத செலவினங்களில் பெரும்பங்கு வகிக்கின்றன.
* வீட்டு வாடகை, வாகனம் நிறுத்துமிட வாடகை, உணவகம், தங்குமிட கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய வாடகைப்பிரிவு சுமார் 7 விழுக்காடு பங்களிப்புடன் நகர்ப்புற குடும்பங்களின் உணவு அல்லாத செலவினங்களின் மற்றொரு முக்கிய அங்கமாக உள்ளது.
* கிராமப்புற, நகர்ப்புறங்களில் நுகர்வு சமத்துவமின்மை 2022-2023-ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 2023-2024-ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.