டிசம்பர் 19 அன்று புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், கோவிலா – மசூதியா என்பது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. ‘நாம், நீண்ட காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, பலர் தங்களை ஹிந்துக்களின் தலைவர்களாக காட்டிக் கொள்வதற்காக இதுபோன்ற வழக்குகளை தொடர்கின்றனர். அதை ஏற்க முடியாது’ என, கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், ‘ஆர்கனைசர்’ வார இதழின் சமீபத்திய பதிப்பில், உ.பி.,யின் சம்பல் பகுதியில், சிறீஹரிஹர மந்திர் என்ற ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, ஜமா மஸ்ஜித் என்ற மசூதி கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விரிவாக எழுதப் பட்டுள்ளது.
‘‘சோம்நாத்தில் துவங்கி சம்பல் வரையும், அதற்கு அப்பாலும் உள்ள கோவில் – மசூதி சர்ச்சையில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் நாகரிகமான முறையில் நீதி கிடைக்க வேண்டும்.
சம்பல் விவகாரத்தைத் தொடர்ந்து, தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தொடர்பான விவாதம் துவங்கியுள்ளது.
இந்த விவகாரங்களை, ஹிந்து – முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. நம் நாட்டின் வரலாறு, இதிகாசங்கள், சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
சோம்நாத் முதல் சம்பல் வரை மற்றும் அதற்கு அப்பாலும் நடக்கும் போராட்டங்கள், ஹிந்து மதத்தின் ஆதிக்கத்தை காட்டுவதற்காக நடக்கவில்லை.
வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். நம் நாட்டின் அடையாளத்தை மீட்கவும், நாகரிகமான முறையில் நீதி கிடைக்கவும், இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்த சட்டப் போராட்டங்கள், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இதை ஹிந்துக்களும், இந்திய முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
முகலாயர்கள் காலத்தில் நடந்த அட்டூழியங் களால், படையெடுப்புகளால், நம் நாட்டின் அடையாளம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன் வரை ஹிந்துக்களாக இருந்தவர்களே, தற்போதைய இந்திய முஸ்லிம்கள்.
அதனால், முகலாயர்களின் படையெடுப்பு களால் நாம் அனைவரும் நம் நாட்டின் அடை யாளத்தை இழந்துள்ளோம். நாடு பிரிவினையை சந்தித்தபோது, நம் நாடு, மதத்தின் அடிப்படையால் பிரிக்கப்பட்டது.
இது அப்போது நடந்த பெரிய தவறாகும். முகலாயர்களின் கொடூரங்களை மறைத்து, அவர்களைப் பாராட்டும் வகையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் சித்தரித்தனர். நாட்டின் வரலாறும் திருத்தப்பட்டு, திணிக்கப்பட்டது.
அதனால், கோவிலா – மசூதியா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நம் நாட்டின் அடையாளத்துடன், பாரம்பரியத்துடன் தொடர்புடையது.’’
இவ்வாறு எழுதியுள்ளது ஆர்.எஸ்.எஸ். இதழ்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு ஹிந்து மதத் துறவிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மோகன் பாகவத் தெரிவித்துள்ள கருத்து குறித்து ராமபத்ராச்சாரியா கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
‘‘இது மோகன் பாகவத்தின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இது அனைவரின் கருத்தல்ல. அவர் ஓர் அமைப்பின் தலைவராக இருக்கலாம். ஆனால் அவர் ஹிந்து மதத்தின் தலைவரல்ல; அவர் சொல்லுவதை நாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’’ என்று கூறியுள்ளார்.
ஆக, ஆர்.எஸ்.எஸ்சுக்குள்ளேயே புகைய ஆரம்பித்து விட்டது. இதனைப் பொது மக்கள் புரிந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்சை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.
மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்சின் அதி தீவிர மதவாதப் போக்கின்மீது அதிருப்தி வெடித்துக் கிளம்பியுள்ளதையும் இந்தப் பிரச்சினையோடு இணைத்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது.