கேள்வி 1: தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த பெரியாரின் கைத்தடி இன எதிரிகளை வீழ்த்தப் பயன்படும் என்று எதிர்பார்க்கலாமா?
– இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில் 1: கொள்கை எதிரிகளை வீழ்த்தி, திராவிடத்தைக் காக்கும் பேராயுதம் அந்த தொண்டுச் சின்னம்! அவருக்கும், அவரது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் என்றும் பாதுகாக்கும் படைக்கலனாகவும் இருக்கும் என்பது உறுதி!
– – – – –
கேள்வி 2: சமூகநீதிக்கு முதல் எதிரி தி.மு.க.தான் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியிருப்பது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லவா?
– எஸ்.பூபாலன், திண்டிவனம்.
பதில் 2: அதே விழுப்புரத்தில் கலைஞர் ஆட்சிதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்து 20:30 என்று இடஒதுக்கீடு தந்ததால் கலைஞருக்காக என்று ஒரு நாற்காலி போட்டவரும், பாராட்டு என்றவரும் அவர்தான்.
– – – – –
கேள்வி 3: இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக அளவில் கொடுமைகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
– அ.அப்துல் அகத், அய்தராபாத்.
பதில் 3: பரிதாபத்திற்குரிய அப்பட்டமான அரசியல்தான்.
– – – – –
கேள்வி 4: குஜராத் மாநில அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பூசாரி ஒருவர் நீண்ட நேரம் மந்திரங்கள் ஓதி, சடங்குகள் செய்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், அதனைக் கண்டிக்க ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ முன்வராதது ஏன்?
– ஓவியர் மதி, செங்குன்றம்.
பதில் 4: பகுத்தறிவுள்ளவர்களானால் கண்டித்திருப்பார்கள் அதை…?
– – – – –
கேள்வி 5: உள்நாட்டு அரசியல் சிக்கல்களால் தாங்கள் பிறந்த நாட்டை மறந்து – வெளிநாடுகளில் சட்ட விரோதமாகவாவது குடியேறிச் சென்று அல்லல்படுகின்ற மக்களின் மனநிலைக்குத் தீர்வுதான் என்ன?
– ச.இராசேந்திரன், சென்னை-99
பதில் 5: நாட்டுக்கு நாடு, இனங்கள், மதங்களுக்கு இடையே பல மாறுபாடுகள், வேறுபாடுகள் உள்ளன. புலம் பெயர்வோரது அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு – ஒரே வழிமுறை காண்பது எளிதல்ல; சிக்கலானதும் கூட.
– – – – –
கேள்வி 6: நூற்றாண்டு பிறந்த நாள் காண்கின்ற தோழர் இரா.நல்லகண்ணுவிடம் தங்களை மிகவும் கவர்ந்த – மனதில் பதிந்த சிறப்பம்சம் குறித்து?
– இரா.ஆனந்தன், திருவாரூர்.
பதில் 6: எளிமை, உழைப்பு, நேர்மை, பண்பு.
– – – – –
கேள்வி 7: மாணவியர் மீதான பாலியல் வன்கொடுமைகளில் கடுமையான தண்டனை விதிப்பதில்லை என்கிற கருத்து நிலவுகிறதே – எத்தகைய தண்டனை தீர்வாகும்?
– ஏ.லோகநாதன், பொன்னேரி
பதில் 7: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைத் திருத்தவும் வேண்டும். அதே நேரத்தில் கடுமையான தண்டனை தரவும் தயங்கக் கூடாது! – புது அணுகுமுறை உருவாக்கப்படுதல் அவசியம்.
– – – – –
கேள்வி 8: சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வினை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர். ஆனால், சாலைகளின் தரம் சரியாக இல்லையே? ஒன்றிய அரசின் மலட்டுச் சிந்தனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– ம.சந்திரபாபு, தாம்பரம்
பதில் 8: கொடுமையான கொள்ளை வசூல். பல போராட்டங்களும் – திரு.வில்சன் எம்.பி., போன்றவர்களும், பல கட்சியினரும் கண்டித்துள்ளனர். இந்த அநியாயம் தொடர்வது வன்மையான கண்டனத்திற்குரியது!
– – – – –
கேள்வி 9: “கோவில், தேவாலயம், மசூதியாக இருந்தாலும் விதியை மீறி கட்டினால் இரக்கம் காட்ட முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி?
– ச.சரவணன், சென்னை-39
பதில் 9: நீதிபதி இதனை சரியாகவே கூறியுள்ளார்! – வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது – ஆக்கிரமிப்புகளை அகற்றுவது – இடிப்பது – செயல்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முன்வருவதில்லையே.
– – – – –
கேள்வி 10: பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களை கட்டாய தேர்ச்சி அடையச் செய்யும் ‘ஆல் பாஸ்’ முறையை ஒன்றிய அரசு திடீரென்று ரத்து செய்துள்ளதே?
– இரா.கவுதமன், பெரம்பூர்
பதில் 10: ‘விடுதலை’ அறிக்கையிலும் பல பேட்டிகளிலும் இதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம் – விளக்கியுள்ளோம் – அவற்றைப் படியுங்கள்!