* அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிமீதான பாலியல் வன்கொடுமை வன்மையாக கண்டிக்கத்தக்கது!
* இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறைவு தமிழ்நாட்டில்தான்!
* ‘‘புதுமைப் பெண்’’ திட்டத்தால் தமிழ்நாட்டில் பெண் கல்வி வளர்ச்சி அபரிமிதம்!
‘‘ஆண் பலமானவர், பெண் பலகீனமானவர்’’ என்ற நிலை மாற்றப்படுவதற்கான கல்வி திட்டமும், பயிற்சியும் தேவை!
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிமீதான பாலியல் வன்முறை கண்டிக்கத்தக்கது. இதை அரசியல் ஆதாயப் பிரச்சினையாகக் கருதாமல், சமூகப் பிரச்சினையாகக் கருதி ஒன்றிணைந்து – பாடுபட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது – கடும் அதிர்ச்சியை அளிக்கிறது – கடும் கண்டனத்திற்குரியது.
இந்தச் சமூகப் பிரச்சினையை அரசியல் பகடைக் காயாக மாற்றுவது தவறு! குளிர்காய நினைப்பது சமூகக் கேடு.
ஆண் ஆதிக்க சமூகத்தின் அவலம்!
ஆண் ஆதிக்க சமூகத்தின் அவலட்சணத்தின் வெளிப்பாடு இது! எந்த ‘விலை’ கொடுத்தாவது இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.
பெண்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமை கொடுக்கப்படவேண்டும் என்று கழகம் தீர்மானம் நிறைவேற்றியபோது, அதனைக் கேலியும், கிண்டலும் செய்தவர்கள் இப்பொழுதாவது உணரவேண்டும்.
பெண்கள் என்றால் உடலளவில் பலகீனமானவர்கள் என்ற சிந்தனை நிலை மாற்றப்படவேண்டும்.
93 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார் சொன்னார்!
93 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கூறினார்.
‘‘கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து, ஓர் ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கும் உண்டாகும்படியாகவும் செய்யவேண்டும்.’’
(‘குடிஅரசு’, 26.4.1931)
பெண் பலகீனமானவர் அல்லர் – ஆணுக்குச் சற்றும் இளைத்தவர் அல்லர்; என்ற நிலை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வார்த்தெடுக்கப்பட வேண்டும். தேவையான பயிற்சியும் அளிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு போலீஸ் (250 பேருக்கு ஒரு கான்ஸ்டபிள் என்பதுதான் இன்றைய நிலை) என்பது நடைமுறை சாத்தியமற்றது.
பாடத் திட்டங்களில் கற்பிக்கப்படவேண்டியவை!
பாடத் திட்டத்திலும் பெண் – தன் சகத் தோழி என்ற உணர்வு ஆணுக்கும், ஆண் சகத் தோழன் என்ற உணர்வு பெண்ணுக்கும் ஏற்படும் வகையில் அமைய வேண்டும்.
நாகரிகம் என்பது ஆடை உடை, அணிகலன்களைப் பொறுத்ததல்ல – மனிதத்தன்மையின் மாண்பைப் பொறுத்ததேயாகும்.
அண்ணா பல்கலைக் கழகம் பாதுகாப்புமிக்க வளா கம் என்று சொல்லப்படு மானால் ஏனிந்த அவலம்? பல சிசிடிவிகள் பழுது என்றெல்லாம் செய்திகள் வரு கின்றன.
ஈராண்டுகளாக துணைவேந்தர் இல்லை!
இரண்டாண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தர் கிடையாது. இதற்குக் காரணம் யார்? அரசுக்கு முட்டுக்கட்டை போடுபவர் யார்? என்பதைப்பற்றி அரசியல் கட்சிகள் விமர்சிக்க வேண்டாமா? வேந்தர் என்பவரின் ஒத்துழையாமை தானே!
மாணவி பாலியல் வன்கொடுமை என்று சொல்லு கிறபோது – இந்த நிர்வாகச் சீர்கேட்டைப் பற்றியும் விமர்சிக்கவேண்டாமா?
ஏன் விமர்சனம் எழவில்லை? இதிலும் அரசி யல்தானா? எதற்கெடுத்தாலும் அரசியல் என்று வந்து விட்டால், அவலங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லுவதற்கு இது ஒரு சந்தர்ப்பம் என்று நினைப்பது சிறுமைத்தனம்!
அப்படியே பார்த்தாலும், 2022 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை என்ன கூறுகிறது?
இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான
குற்ற வழக்குகள் குறைவு தமிழ்நாட்டில்தான்!
இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் பெண்க ளுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 என்றால், தமிழ்நாட்டில் வெறும் 24 தான்.
பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 விழுக்காடு; தமிழ்நாட்டிலோ 0.7 விழுக்காடு தான். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு கட்டுக்குள்தான் இருக்கிறது. இதுவும்கூட இருக்கக்கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு.
இந்தப் பிரச்சினையில் தி.மு.க. அரசு விரைந்து செயல்பட்டு சில மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்து, நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதைப் பாராட்டவேண்டாமா?
அமைச்சர் மறுப்புக்குப் பின், குற்றவாளி தி.மு.க.காரர் என்று ஆதாரம் காட்டியதை – வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கட்சிக் கண்ணோட்ட மின்றி கடும் நடவடிக்கையை காவல்துறை மூன்று மணிநேரத்திற்குள் எடுத்துள்ளது என்பது எதைக் காட்டுகிறது? காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்பதைத்தானே!
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த வன்கொடுமை கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், இதனை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தும் கட்சிகள் நடத்திய ஆட்சிகளின் யோக்கியதை என்ன என்ற கேள்வி எழத்தானே செய்யும்?
அ.தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது?
அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் அரங் கேற்றப்பட்ட ஆபாசம் எத்தகையது? ஆளும் அ.தி.மு.க. முக்கிய பிரமுகரின் மகனே அதற்குச் சூத்திரதாரியாக இருக்கவில்லையா?
இராமேசுவரத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமிரா வைத்தவர் யார் என்று கேட்டால், அ.தி.மு.க. முகத்தை எங்கே வைத்துக்கொள்ளும்? ஒன்று, இரண்டல்ல, அடுக்கிக்கொண்டே போக முடியும், அதுவா முக்கியம்?
காஞ்சிபுரத்தில் தேவநாதனும், சிறீவில்லிபுத்தூரில் பத்ரிநாத்தும் கோவில் கர்ப்பக்கிரகத்தில் பக்தைகளைப் பாலியல் வன்முறைக்கு
ஆளாக்கியது எந்த ஆட்சியில்?
பி.ஜே.பி. ஆட்சியின் அவலங்கள்!
பி.ஜே.பி. இதனை அரசியல்படுத்துவதுதான் ஆச்சரியம்! மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ்பூஷன் யார்? பி.ஜே.பி.யைச் சேர்ந்த எம்.பி. அல்லவா!
அந்தக் குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி போராடிய மல்யுத்த வீராங்கனை களை அடித்துத் துவைத்தது
பி.ஜே.பி. அரசுதானே!
குற்றவாளி பிரிஜ்பூஷனுக்கு அளிக்கப்பட்ட வெகு மதி என்ன தெரியுமா? மகனை எம்.பி., ஆக்கியதுதான்!
குஜராத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது, பில்கிஸ்பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்தவர்கள் யார்? மூன்று வயது குழந்தை உள்பட 14 பேரைப் படுகொலை செய்து, சிறைத்தண்டனை பெற்றவர்களை நன்னடத்தை காரணம் சொல்லி, விடுதலை செய்ததை மறக்க முடியுமா?
காஷ்மீரில் சிறுமி ஆசிபாவைக் கோவில் கருவறை யில் வைத்து சூறையாடி – படுகொலை செய்த கயவர்க ளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியவர்கள் யார்? ரவுடிகளைக் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ப்பவர்களா ஒழுக்கம்பற்றி ஒப்பாரி வைப்பது – பா.ஜ.க. பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!
பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட கொடுமை!
பி.ஜே.பி. ஆட்சி செய்யும் மணிப்பூரில் நடந்தது என்ன? பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றதைவிட கேவலம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
இந்தியாவை நினைத்து உலகமே நாணித் தலை குனிந்ததே!
தி.மு.க. ஆட்சியில் பெண் கல்வி வளர்ச்சி!
பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ‘திராவிட மாடல்‘ அரசு செய்துவரும் உதவிகளும், அதன் வழி விளைந்துள்ள சாதனைகளும் அளப்பரியன என்பதை மறுக்க முடியுமா?
‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தின்மூலம் 12 ஆம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளித்துவருவதால், 6 லட்சம் பெண்கள் பலன் பெற்றுள்ளார்களே! இதற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி 698 கோடி ரூபாய்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இத்தகைய பெண் கல்விக்கான வளர்ச்சித் திட்டம் உள்ளதா? விரலை நீட்டிச் சொல்ல முடியுமா?
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் முதல் பெண்கள் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல வகையான திட்டங்கள் இங்கே!
அரசியல் ஆதாயத்துக்காக சிலம்பம் சுற்றுவதா?
இத்தகு வளர்ச்சித் திட்டங்களால் வெகுமக்களிடத்தில் செல்வாக்கும், ஆதரவும் பெற்றுவரும் தி.மு.க. ஆட்சியை எதிர்கொள்ள முடியாத நிலையில், ஏதாவது பிரச்சினை கிடைக்காதா? அதை வைத்து அரசியல் ஆதாய சிலம்பம் சுற்றலாமா? என்று கணக்குப் போட்டால், அது இங்கு எடுபடாது!
நிர்பயா பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முழுமையாகப் பயன்படுத்தாத அரசுக்குப் பெயர்தான் ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்பது நினைவிருக்கட்டும்!
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது – கடைசிக் கடைசியாக இருக்கட்டும்!
சமூகப் பிரச்சினையாகக் கருதப்படவேண்டும்!
இதை ஓர் அரசியல் மூலதனப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் சமூகப் பிரச்சினையாகக் கருதி, ஒன்றுபட்டுப் போராடுவதுதான் – நாம் நாகரிக உலகில் வாழ்கிறோம் என்பதற்கான பொருளாகும்.
பெண்கள் பாலினப் பண்டங்கள் அல்ல; மனித குலத்தின் ஆளுமைகள் என்பது நிலைநாட்டப்பட வேண்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
27.12.2024