புதுடில்லி,டிச.24- தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து சுங்கவரி கட்டணம் வசூலிப்பது கொடுங்கோன்மை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம் டில்லி-நொய்டா நேரடி (டி.என்.டி) சுங்கவரி கட்டண வசூல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி (என்.டி.பி.சி) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் நீதிபதி உஜ்வால் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதன் மூலம் மற்றவர்கள் நியாயமற்ற முறையில் ஆதாயமடைவதை அனுமதிக்க முடியாது. உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட வேண்டும். சுங்கக் கட்டண வசூல் என்பது நிரந்தர செயல்முறை அல்ல; அவ்வாறு தொடர்ந்து வசூலிக்கப்பட்டால், அது கொடுங்கோன்மையாக கருதப்படும். இந்தத் திட்டங்கள் பொது நலனுக்காகவே செயல்படுத்தப்படுகின்றன; தனியார் லாபத்திற்காக அல்ல.
பொது நலன்
பொது நலனை மனதில் கொண்டு தான் அரசாங்கங்கள் கொள்கைகளையும் விதிகளையும் உருவாக்க வேண்டும். அவை உண்மையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அவற்றை யாரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. பொது சொத்துக்கள் மூலம் சட்டவிரோதமாக லாபம் ஈட்ட யாரையும் அனுமதிக்கக் கூடாது. தேவையான பொது உள்கட்டமைப்பை வழங்குவதற்காக என்டிபிசிஎல் மற்றும் அய்எல் அண்ட் எஃப்எஸ் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேம்பாலத்தின் செலவை என்.டி.பி.சி.எல் நிறுவனம், கட்டணம் வடிவத்தில் வசூலித்துள்ளது.எனவே, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை மேற்கொள்ளும்போது அதிகாரிகள் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும். தெளிவான மற்றும் வெளிப்படையான கொள்கையை செயல்படுத்த வேண்டும். ஒப்பந்தங்கள் வழங்குவதிலும், போட்டியாளர்களிடமிருந்து போட்டி ஏலங்களை அழைப்பதிலும் எந்த முன்முயற்சியும் காட்டப்படவில்லை’ என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் டில்லி-நொய்டா-டைரக்ட் (டிஎன்டி) ஃப்ளை-வே சாலையை பயன்படுத்துவோர் கட்டணம் ஏதுமின்றி பயணிக்கலாம். சுமார் 9.2 கிமீ தூரம் எட்டு வழி விரைவுச் சாலையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.