அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பா.ஜ.க. தலைவர்கள் வாய் கிழியப் பேசி, இரண்டு நாட்கள் கழிந்த பின்னர், இப்போது அரசமைப்புச் சட்டத்தையும், அதன் கூட்டாட்சித் தத்துவத்தையும் தகர்த்திடும் விதத்தில் அரசமைப்புத் திருத்தச் சட்ட முன்வடிவு ஒன்றினை மோடி அரசாங்கம் அறி முகப்படுத்தி இருக்கிறது.
3 பிரிவுகளில் திருத்தம் –1 புதிய பிரிவு சேர்ப்பு
மக்களவைக்கும், நாட்டிலுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்காக அரசமைப்பு (129ஆவது திருத்தச்) சட்டமுன் வடிவு மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு என இரு சட்ட முன்வடிவுகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன.
அரசமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவு மூன்று பிரிவுகளைத் திருத்தியிருக்கிறது, புதிதாக ஒரு பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தத் திருத்தங்களின் நோக்கம், மக்களவைக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பதேயாகும். இதன் மூலமாக மக்களவைக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அய்ந்தாண்டு காலம் அந்த உறுப்பினர் பொறுப்பில் இருப்பார் என்கிற அடிப்படை விதி ஒழித்துக்கட்டப்படுகிறது.
முதல் தாக்குதல்!
முதலாவதாக, மக்களவைத் தேர்தலையும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்து வதற்காக, குடியரசுத் தலைவர், மக்களவையின் அய்ந்தாண்டுக் காலம் முடிவடையும் சமயத்தில், அறிவிப்பு வெளியிடுவார். இதனைத் தொடர்ந்து இவ்வாறு மக்களவைக்கான தேர்தலுடன் மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களும் நடத்தப்படுவதற்கும் அறிவிக்கை வெளியிடுவார். இதன் மூலம் ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் சில சட்டப் பேரவைகளின் அய்ந்தாண்டு பதவிக் காலம் குறைக்கப்படும். இவ்வாறு ஒரு மாநில சட்டமன்றத்தின் முழு அய்ந்தாண்டு பதவிக் காலத்திற்கான உரிமை மீதான முதல் தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
மேலும், நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றங்களுக்கோ தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உறுப்பினர், எதிர்காலத்தில் அய்ந்தாண்டு காலத்திற்கு உறுப்பினராக இருப்பார் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்களில் ஒரு திருத்தம் என்ன கூறுகிறது என்றால், அய்ந்தாண்டுகள் முடி வதற்கு முன்பே மக்களவை கலைக்கப்படுமாயின், அடுத்த மக்களவைக்கான தேர்தல் (அந்த அய்ந்தாண்டுகளில்) எஞ்சிய காலத்திற்கு மட்டுமே நடைபெறும் என்கிறது. இதன் பொருள், மூன்று ஆண்டுகள் கழித்து மக்களவை கலைக்கப்படுகிறதென்றால், மக்களவைக்கான அடுத்த தேர்தல் என்பது இரு ஆண்டுகளுக்கு மட்டுமே நடை பெறும்.
ஜனநாயக அடிப்படைக்கு எதிரானது!
இதேபோன்ற திருத்தம், சட்ட மன்றங்களுக்கான காலம் சம்பந்தமாகவும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு மாநில சட்டமன்றம் இடைக்காலத்தில் கலைக்கப்பட்டால், மீதம் உள்ள காலத்திற்காக மட்டுமே தேர்தல் நடை பெறும். உதாரணமாக, ஒரு சட்டமன்றம் மூன்று ஆண்டுகள் கழிந்தபின் கலைக் கப்பட்டால், மீதம் உள்ள இரண்டாண்டு காலத்திற்காக மட்டுமே சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். எனவே, இவ்வாறு எஞ்சியுள்ள இடைக்காலத்திற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது ஒரு சட்டமன்ற உறுப்பினரோ தேர்ந்தெடுக்கப் பட்டால் அவர் அய்ந்தாண்டு காலத்திற்கு அந்தப் பொறுப்பில் இருக்க மாட்டார். இது அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானதாகும்.
ஒரு மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் இவ்வாறு துண்டிக்கப்படுவது கூட்டாட்சி அமைப்பு முறைக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். சட்டமன்றத்தின் அடிப்படையான ஆட்சிக்காலம் அய்ந்தாண்டுகள் என்பது சிதைக்கப்பட்டு விடுவதால், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்களின் ஒன்றியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பு முறை வலுவிழந்து, நீர்த்துப்போய்விடும். மேலும் இது ஒன்றியத்தில் ஆட்சி புரிவோர் தங்களுக்கு தலையாட்டும் விதத்தில் மாநில அர சாங்கங்களை அமைத்துக் கொள்வ தற்காக பல்வேறு தில்லு முல்லுகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுத்திடும்.
குதிரை பேரத்துக்கும்
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கும் வழி!
உதாரணமாக, மாநில அரசின் வீழ்ச்சியால், ஒரு மாநில சட்டமன்றம் அதன் பதவிக்காலம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கலைக்கப்பட்டால், மீதமுள்ள ஓராண்டு காலத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்துவது அர்த்த மற்றதாகும். அத்தகைய சூழ்நிலையானது அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தடுக்க குதிரை பேரத்திற்கு வழி திறக்கும் அல்லது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிப் பதற்கான அழைப்பாக அது அமைந்திடும்.
கூட்டாட்சி அமைப்புமுறை என்பது பன்முகத் தன்மை மற்றும் மாறுபட்ட மொழியியல் – சமூக – கலாச்சார நிலைமைகள் மற்றும் அரசியல் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதாகும். மக்களவையுடன் சேர்த்தே அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல்கள் மையப் படுத்தப்பட்டு ஒரே மாதிரியான அரசியல் அமைப்பாக மாற்றுவதற்கான முயற்சியேயாகும்.
அய்ந்தாண்டுகளில் மூன்று தேர்தல்
நடத்தும் நிலை ஏற்படும்!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்று, இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் பல தேர்தல்களால் ஏற்படும் வீண் செலவுகளைக் குறைக்கும் என்பதாகும். எவ்வாறாயினும், நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை சீரமைக்க முன்மொழியப் பட்ட மாற்றங்கள் குறுகிய காலத்தில் தேவையற்ற தேர்தல்களுக்கு வழி திறந்திடும் என்பதில் அய்யமில்லை. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்று, இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் பல தேர்தல்களால் ஏற்படும் வீண் செலவுகளைக் குறைக்கும் என்பதாகும். எவ்வாறாயினும், நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை சீரமைக்க முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறுகிய காலத்தில் தேவையற்ற தேர்தல்களுக்கு வழி திறந்திடும் என்பதில் அய்யமில்லை.
முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின்படி, அய்ந்தாண்டு பதவிக் காலத்துடன் ஒரு மாநில சட்டப் பேர வைக்குத் தேர்தல் நடத்தப்படலாம். மாநில அரசு கவிழ்ந்தால், மீதமுள்ள பதவிக் காலத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து அய்ந்தாண்டு பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டும். அதாவது அய்ந்து ஆண்டு காலத்திற்குள் மூன்று தேர்தல்கள் நடக்கும். மக்கள வைக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால், அதற்கும் அய்ந்து ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள் வரலாம். இத்தகைய அபத்தமான சூழ்நிலை, தேர்தல் செலவுகளைப் பல மடங்கு பெருக்கிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
தேர்தல் ஆணையத்துக்கு
அதிகாரம் ஆபத்தான திருத்தம்!
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் ஒன்றில் புதிதாக ஒரு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி எந்த வொரு மாநிலத்திலாவது நடைபெற வேண்டிய தேர்தலைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறு தாமதப்படுத்துவதற்கான முடிவினை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தால் அதன்கீழ் குடியரசுத் தலைவர் செயல்படுவார். இது, இப்போ துள்ள கூட்டாட்சி அமைப்புமுறையில் ஒரு மாநிலத்தின் அடிப்படை உரிமையைத் தகர்க்கப்பயன்படும் ஆபத்தான திருத்தமாகும்.
பா.ஜ.க. ஆட்சியாளர்களின் தீவிர தேசியவாத ஹிந்துத்துவா சித்தாந்தம்தான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ அமைப்பைத் தூண்டியது. இது ஓர் எதேச்சதிகார ஒன்றிய அரசுக்காக ஏங்குகின்ற ஒரு சித்தாந்தமாகும். இது கூட்டாட்சி அமைப்புமுறை, பன் முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும்.
ஹிந்துத்துவா அரசியல்
பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவே…
அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசுக்கு மையப்படுத்திட வேண்டும் என்கிற உந்துதலின் அடிப்படையிலேயே மோடி அரசாங்கம் இந்த சட்ட முன்வடிவுகளைக் கொண்டு வந்திருக்கிறது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாநிலங்களவை யிலும் அதற்கு பெரும்பான்மை இல்லை.
இரு அவைகளிலும் வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அரசமைப்புச்சட்டத்தில் திருத்தங்கள் நிறைவேற்றப்படும். மேலும் இரு அவைகளிலும் பாதிக்கும் மேலானவர்கள் இந்தத் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்திட வேண்டும். அப்படி அதற்குப் பெரும்பான்மை இல்லாத தால்தான், இந்த சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் நிலுவையில் வைத்திருந்து, அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதும், எதிர்காலத்தில் தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுமாயின் நிறைவேற்றிக் கொள்வதுமே இவர்களின் நோக்கம் என்பது தெரிகிறது.
இவ்வாறு இவர்களின் இத்தகைய ஜனநாயக விரோதமான, கூட்டாட்சி அமைப்பு முறைக்கு எதிரான தன்மையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது அவசியமாகும்.
நன்றி : தீக்கதிர் (18.12.2024)