இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது!
‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்தியது தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேடு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் கூறியுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டின் 21.12.2024 ஆம் தேதியிட்ட புதுடில்லி பதிப்பில் நிகிலா ஹென்றி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:–
ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் வைக்கம் சிறீமகாதேவா கோயிலுக்குச் செல்லும் பொதுச் சாலைகளை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தும் உரிமைக்காக 1924 ஆம் ஆண்டு கேராளாவின் கோட்டயத்தின் உள்ள வைக்கத்தில் தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டம், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட முதல், இயக்கமாகும். திராவிடச் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் இப்போரட்டத்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதுகின்றனர்.
பெரியாரும் – அவர்தம் இணையரும் அனுபவித்த சிறை வாசம்!
சத்தியாகிரகத்தின் முக்கிய அங்கமாக இருந்த வர்களில் முதன்மையானவர் அன்றைய சென்னை மாகாணத்தில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவிய வரும், சமூக சீர்திருத்தவாதியுமான ‘பெரியார்’ என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள்தான். இப்போராட்டத்திற்காக, பெரியாரும் அவரது இணையர் திருமதி நாகம்மையாரும் சிறைவாசம் அனுபவித்தனர். ஆதிக்க ஜாதி இந்துக்கள் மட்டுமே செல்லக்கூடிய கோவில் பாதைகளுக்குள் நுழைய, மார்ச் 1924 இல் கேரள காங்கிரஸ் கமிட்டி தடை செய்யப்பட்ட பாதைகளில் நடக்க அழைப்பு விடுத்தது. இதனால், அதன் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1936 இல்தான் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
டிசம்பர் 12 ஆம் தேதி, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான வர லாற்றுப் பிணைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் வைக்கத்தில் சந்தித்து, சமூக நீதிக்கான மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுத்திட்டமான புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தைத் தொடங்கி வைத்தனர்.
‘பெரியார்’ என்றால் ‘மரியாதைக்குரியவர்’ என்று பொருள்!
2023 இல் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “இந்த இயக்கத்தின் மூலம்தான் ஈ.வெ. ராமசாமி, பெரியாராக உருவெடுத்தார்” என்றார். ‘பெரியார்’ என்றால் ‘மரியா தைக்குரியவர்’ அல்லது ‘பெரியவர்’ என்று பொருள்.
வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான தலைவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில்தான், இந்த போராட்டத்திற்குள் பெரியார் நுழைந்தார் என்று எழுத்தாளர் பழ. அதியமான் கூறுகிறார். “பெரியார் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக விளங்கிய நிலையில், கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டபோது பெரியாரின் ஆதரவைக் கேட்டதாக, அதியமான் தான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ என்ற புத்தகத்தில், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கினைக் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார், வைக்கம் நகருக்கு பலமுறை பய ணம் செய்துள்ளதாகவும், . போராட்டத்தின் போது ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெரியார் கைது செய்யப்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டு 67 நாட்களும், போராட்டம் நடத்தியதற்காக 74 நாட்களும் சிறைவாசம் அனுபவித்தார் என்றும் அதியமான் குறிப்பிட்டுள்ளார்.பெரியாரின் பிரச்சாரம் வலுப்பெற்றபோது முதலில் கைது செய்யப்பட்டதாக அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விடாப்பிடியாகப் போராடினார்! ‘வைக்கம் வீரர்’ என புகழ் பெற்றார்!
மே 22, 1924 இல்,வைக்கத்தில் பெரியா ரின் பிரச்சாரங்கள் வீரியமடைந்ததைக் கண்டு, பெரியாருக்கு ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ஆறுக்குட்டி சிறை யில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை முடிந்து விடுதலையான உடனே மீண்டும் அவர் போராட்டத்திற்குத் திரும்பினார்.அப்போது, கைது செய்யப்பட்ட பெரியாருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக விடாப்பிடியாகப் போராடியதன் காரணமாக மக்கள் பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என்றும் ‘வைக்கம் நாயகன்’ என்றும் அழைத்தனர் என்று அதியமான தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் விதமாக, இரு மாநில முதல்வர்களும் ஒன்றிணைந்துள்ளது பொருத்தமானதாக உள்ளதாக அதியமான் கூறுகிறார்.
எல்லை நிர்ணயம், மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் வரிப் பகிர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய பொதுவான கவலைகளை தென் மாநிலங்கள் சந்தித்து வரும் வேளையில், அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா உள்ளதாகவும், முதலமைச்சர்கள் மு.க.ஸ்டா லினும், பினராயி விஜயனும் இணைந்து பெரியார் நினைவேந்தல் நடத்துவது தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தி.மு.க. தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமூக நீதி காக்க உறுதி பூண்ட விழா!
“இந்தியா கூட்டணிக் கட்சியான சி.பி.எம்., பினராயி விஜயனுடன் இணைந்து செயல்படும் தி.மு.க. முதலமைச்சர், இரு கட்சிகளும், ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் சமூக நீதியைக் காக்க உறுதி கொண்டுள்ளன என்ற செய்தியை இந்நிகழ்வின் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளது” என வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கு பெற்ற தி.மு.க. பிரமுகர் மதிமாறன் கூறுகிறார்.
ஆனால், முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலினும், பினராயி விஜயனும், தங்களின் அரசியலில் பெரும்பா லும் ஒத்த கருத்தை உடையவர்கள். இருவரும் பெரியாரைப் போல, மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று வெளிப்படையாகவே இருக்கிறார்கள். திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் தொண்டர்களில் பலர் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும், மதத்தை பின்பற்ற வேண்டாம் என யாரையும் ஊக்கப்படுத்துவதில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
“கோயில் நுழைவு உரிமை என்பது பொது இடத்தில் நுழைவதற்கான உரிமை என்பதில் பெரியார் மிகத் தெளிவாக இருந்தார். எனவே, அவர்கள் (இரண்டு கட்சிகளும் அவர்களின் முதலமைச்சர்களும்) கோயில்கள் மற்றும் வழிபாடுகள் குறித்து, தங்களை மத நம்பிக்கையற்றவர்கள் என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பொது இடங்களை அனைவரும் பயன்படுத்துவதில் சமூக நீதியை நிலைநாட்ட இருவரும் விழிப்புடன் இருக்கிறார்கள்” என எழுத்தா ளரும், கல்வியாளருமான வி. கீதா கூறுகிறார்.
பொதுநல அரசியல், சமூகநீதிக்கு எதிரானது பா.ஜ.க.!
இரு தலைவர்களும் பா.ஜ.க.வின் ஹிந்துத்துவா அரசியலை கடுமையாக விமர்சித்து வருவதாகவும், பா.ஜ.க பொதுநல அரசியலுக்கு எதிரானது என்றும், அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கும், பெரியாரின் சிந்தனைகளுக்கும் எதிரான கட்சி என்றும் மீண்டும் மீண்டும் தாங்கள் கூற விரும்புவதாக மதிமாறன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் குறிப்பிடுவதை போல மக்கள் நலத்திட்டங்கள் என அழைக்காமல் ‘ரேவ்டி’ அல்லது இலவசங்கள் என பா.ஜ.க. கொச்சைப்படுத்துவதாக கூறினார். மேலும்,”தென் மாநிலங்களில் சமூக நீதி இயக்கத்தின் அடிப்படையிலான அரசியலுக்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதாக அவர்கள் வெளிப்படுத்தும் இந்தக் கருத்துகள் உணர்த்துகின்றன,” என்று மதிமாறன் கூறினார்.
2022 ஆம் ஆண்டில், “அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பு” என்ற இயக்கத்தைத் தொடங்கி, எதிர்க்கட்சிகளை சமூகநீதிக் குடையின் கீழ் ஒன்றிணைத்தார் மு.க.ஸ்டாலின். கடந்த ஆண்டு வைக்கத்தில் நடந்த நிகழ்வு பினராயி விஜயனுடனான அவரின் உறவைச் சுட்டிக்காட்டியது. நாங்கள் உடலளவில் இரு தனி மனிதர்களாக இருந்தாலும், மனதளவில் ஒத்த கருத்துடைய ஒருவர் தான்” என கேரளாவில் மலையாளத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த சிறப்புக் கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
நன்றி: ‘முரசொலி‘, 22.12.2024