சிறீநகர், டிச.23 பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் தன்வீா் சாதிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொறுப்பற்ற முறையில் எவ்வித அடிப்படை ஆதார மும் இல்லாமல் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். டில்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ஒமா் அப்துல்லா சந்தித்துப் பேசியது மிகவும் வெளிப்படையான, ஊடகங்கள் முன்னிலையில் நடை பெற்ற சந்திப்பாகும். இதனை வைத்து தவறான செய்தியை நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். தவறான செய்தியை வெளியிட்டதற்காக பொது மன்னிப்பும் கேட்க வேண்டும். இது எங்கள் கட்சியின் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் சீா்குலைக்கும் முற்சியாகும்’ என்று கூறியுள்ளார்.