மாணவர்கள் சங்கம் வலியுறுத்தல்
புதுடில்லி, டிச.22- அய்அய்டி, அய்அய்எம் போன்ற ஒன்றிய அரசின் உயா் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியா் நியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மாணவா்கள் சங்கம் (ஏஅய்ஓபிசிஎஸ்ஏ) வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக புதுடில்லியில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன், ஏஅய்ஓபிசிஎஸ்ஏ ஆலோசகா் அல்லா ராமகிருஷ்ணா, தேசியத் தலைவா் ஜி.கிரண் குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிகழாண்டு செப்டம்பரில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஅய்) மூலப் பெறப்பட்ட பதிலில், அய்அய்டிகள், அய்அய்எம்கள் மற்றும் பிற ஒன்றிய அரசு நிறுவனங்களில் குறைந்தது இரண்டு அய்அய்டிகள் மற்றும் மூன்று அய்அய்எம்களில், 90 விழுக்காடு ஆசிரியப் பதவிகள் பொதுப் பிரிவைச் சோ்ந்த நபா்களால் வகிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
உதாரணமாக இந்தூரில் உள்ள அய்அய்எம் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியா்களில் 97.2 விழுக்காடு பொதுப் பிரிவைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். எஸ்சி, எஸ்டி சமூகங்களில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பே மற்றும் கோரக்பூரில் அய்அய்டிகளில் ஆசிரியப் பதவிகளில் 90 விழுக்காடு பொதுப் பிரிவினரால் நிரப்பப்பட்டுள்ளது. மண்டி, காந்திநகா், கான்பூா், குவாஹாத்தி மற்றும் டில்லியில் உள்ள அய்அய்டிகளிலும் 80 முதல் 90 விழுக்காடு வரையிலும் ஒரே மாதிரியான போக்கு காணப்படுகிறது.
நாட்டில் உள்ள 13 அய்அய்எம்களில் ஆசிரியப் பிரிவினரில் 82.8 விழுக்காடு பொதுப் பிரிவினரும், 5 விழுக்காடு எஸ்சி, 1 விழுக்காடு எஸ்டி மற்றும் 9.6 விழுக்காடு ஓபிசி வகுப்பினா் உள்ளனா். பகுப்பாய்வு செய்யப்பட்ட 21 அய்அய்டிகளில் ஆசிரியா்கள் நியமனத்தில் 80 விழுக்காடு பொதுப் பிரிவினா், 6 விழுக்காடு எஸ்சி, 1.6 விழுக்காடு எஸ்டி மற்றும் 11.2 விழுக்காடு ஓபிசி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஓபிசிகளுக்கு 27 விழுக்காடு, எஸ்சிகளுக்கு 15 விழுக்காடு மற்றும் எஸ்டிகளுக்கு 7.5 விழுக்காடு என்ற கட்டாய இடஒதுக்கீடு விழுக்காட்டை விட மிகக் குறைவாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவது மட்டுமின்றி, திட்டமிட்ட விலக்குதலை நிலைநிறுத்துவதுடன், பன்முகத் தன்மையை பாதிக்கிறது. மேலும், கல்வித் துறையில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அபிலாஷைகளையும் பாதிக்கிறது.
ஆகவே, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அய்அய்டி மற்றும் அய்அய்எம்களில் ஆசிரிய நியமன செயல்முறைகளை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யவும், இட ஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் ஆசிரியா் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையுடன் கண்டிப்பாக இணங்குவதை உறுதி செய்யவும் வேண்டும். ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட காலி ஆசிரியா் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். இடஒதுக்கீடு விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க பொறுப்புக்கூறல் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
பேட்டியின்போது ஏஅய்ஓபிசிஎஸ்ஏ தேசிய ஒருங்கிணைப்பாளா் பங்கஜ் ராஜசேகா் குஷ்வாஹா, வேளாண் பல்கலை பொறுப்பாளா் அரவிந்த் ஆகியோா் உடனிருந்தனா்.