‘இந்தியா’ கூட்டணி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய பாஜகவினர்மீது வழக்கு இல்லை
புதுடில்லி, டிச.21 நாடாளு மன்றத்தில் அம்பேத்கரை அவ தூறாகப் பேசிய அமித்ஷாவைக் கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 19.12.2024 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் இந்தியா கூட்டணி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய பாஜக வினர் மீது வழக்கு இல்லை. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கி யதன் காரணமாகவே பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ் புத் காயமடைந்ததாக டில்லி காவல்துறையில் ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் புகார் அளித்தார்.
காங்கிரஸ் கட்சி கண்டனம்
இந்தப் புகாரை அடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறை ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. ஆனால், தள்ளு முள்ளுவில் “இந்தியா” கூட்டணி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மீது பாஜகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பான புகாரை டில்லி காவல்துறை ஏற்கவில்லை. இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கே.சி.வேணுகோபால் கேள்வி
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “பாஜகவின் அரசியல் பழிவாங்கல் காரணமாக ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் அரசியல் சூழ்ச்சியால் ராகுல் காந்தி 26 முதல் தகவல் அறிக்கையை எதிர்கொண்டு வருகிறார். ஆனால், தங்களை உடல் ரீதியாக தாக்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக “இந்தியா” கூட்டணி சார்பாக காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கைமீது டில்லி காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.