புதுடில்லி, டிச. 21 நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம், போராட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினால் அவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.
தள்ளுமுள்ளு
நாடாளுமன்ற வாயிலில் பாஜக-காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19.12.2024 அன்று நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக இரு தரப்பினரும் ஒருவா் மீது மற்றொருவா் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனா். இந்த நிகழ்வுகள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்களவையில் நேற்று (20.12.2024) இது தொடா்பாக மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லா கூறியதாவது:
நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும், நாடாளுமன்ற வளாகத்திலும் எந்த வகையான ஆா்ப்பாட்டம், போராட்டத்தில் உறுப்பினா்கள் ஈடுபடக் கூடாது. இதை மீறி யாராவது செயல்பட்டால் அவை விதிகளின்கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்ற வாயிலில் போராட்டங்களை நடத்துவது என்பது முறையாக இருக்காது. இந்த விஷயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விதிகளின்படி சரியாக நடந்து கொள்ள வேண்டும். அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் எச்சரிக்கிறேன் என்று ஓம் பிர்லா தெரிவித்தார்.