பெங்களூரு, டிச. 21- அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று முதல மைச்சராகியிருக்க மாட்டேன், எனது கிராமத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந் திருப்பேன் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
அமித்ஷா விலக வேண்டும்
அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கருநாடக முதல மைச்சர் சித்தராமையா அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
“அம்பேத்கர் குறித்து பாஜ கவின் கருத்தை வெளிப்படையாக பேசியதற்கு உங்களை வாழ்த்துகிறேன். உங்களின் நேற்றைய பேச்சு எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. உங்கள் கட்சியின் உண்மையான மனநிலை எங்களுக்கு முன்ன தாகவே தெரியும். அரசியல் சட்டத்தின் சிற்பிக்கு நீங்கள் அளித்த மரியாதையை தற்போது நாடே பார்த்துள்ளது. அவரது அரசமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் நாடாளுமன்றத்திலேயே நின்று, வெட்கமற்ற செயலை செய்ததற்கு வாழ்த்துகள்.
அம்பேத்கர் மீது அளவற்ற மரியாதை எனக்கு உண்டு, எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன என்று கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள். நாங்கள் ஏமாளிகள் அல்ல, உங்கள் வார்த்தைகளுக்கு பொறுப்பேற்று நாட்டு மக்களை எதிர்கொள்ளுங்கள்.
அம்பேத்கர் ஃபேஷன்
எங்களுக்கு அம்பேத்கர் ஃபேஷன் அல்ல உத்வேகம். நாங்கள் சுவாசிக்கும் வரை பூமியில் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை அம்பேத்கரின் மரபு நிலைத்திருக்கும். அவரை நிராகரிக்க நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு வலிமையாக முன்னோக்கிச் செல்லும். உங்கள் அகந்தையைக் கண்டு துரோகிகள் கைதட்டி யிருக்கலாம், ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அம்பேத்கரின் சமத்துவமும் கண்ணியமும் பெற்ற தேசத்தில் உள்ள கோடிக்கணக்கானோர் உங்களை கண்டிக்கிறார்கள்.
அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று முதல மைச்சராகியிருக்க மாட்டேன், எனது கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கலாம். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகி இருக்க மாட்டார். நாங்கள் மட்டுமல்ல, அம்பேத்கரின் பங்களிப்பு இல்லாமல் நீங்களும் உள்துறை அமைச்சராக இருக்க முடியாது. உங்கள் நண்பரும் பிரதமருமான நரேந்திர மோடி, இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார். அம்பேத்கரின் பார்வைதான் அனைவரையும் உயர்த்தியது.
அம்பேத்கர் மீதான உங்கள் வெறுப்பு, வரலாறு அறிந்தவர்களுக்கு புதிதல்ல. உங்கள் கருத்தியல் பெற்றோரான ஆர்எஸ்எஸ், அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய அரசமைப்பை நிராகரித்தது ஏன்? கெட்கேவார், கோல்வால்கர், சாவர்க்கர் போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அரசியல் சாசனத்திற்கு எதிரான அறிக்கை களை வரலாற்று பதிவுகள் ஆவணப்படுத்துகின்றன. இந்த உண்மைகளை நீங்கள் மறைக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவற்றை அழிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உங்கள் கருத் துக்கள் நீண்ட கால ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் நீட்சியே.
மோடி… மோடி என்று
உங்களை போன்றே பதிலளிக் கிறேன். உங்கள் கட்சியும், அதன் சித்தாந்த குடும்பமும் மோடி… மோடி… மோடி என்று முழக்கம் போடும் ஃபேஷனை உருவாக்கி விட்டன. நீங்கள் மோடியின் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கலாம். ஏழு வாழ்நாள்களுக்கு மட்டுமல்ல, நூறு வாழ்நாள்களுக்கு. உங்கள் அதிகாரத்தின் மீது ஒட்டிக் கொண்டிருந்த பாவங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.