மாநிலங்களவையில் பி.வில்சன் குற்றச்சாட்டு!
புதுடில்லி,டிச.21– நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இன்றைய சூழ்நிலையில் – அரசமைப்பு சாசனத்தை கொண்டாடுவதற்கான எந்தக் காரணத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு வழங்கவில்லை என்று நாடாளு மன்றத்தில் உரையாற்றிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் குறிப்பிட்டார்.
“இந்திய அரசமைப்பின் 75 ஆண்டுகால மகத்தான பயணம்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் உரை நிகழ்த்தினார். அதன் விவரம் வருமாறு:
கடந்த 10 ஆண்டுகளில், நமது அரசியல் சாசனத்தின் அடித்தளத்தை தகர்க்கும் வகையில் இந்த அரசு தனது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும், சில நேரங்களில் அதிகாரத்தில் இல்லாதவற்றையும் கூட செய்திருக்கிறது.
நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்துவது, முதல் பிற அரசமைப்பு அமைப்புகளின் நிறுவன ஒருமைப்பாட்டை சிதைத்தல், அரசாங்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தல் போன்றவற்றின் மூலம் நமது அரசமைப்புச் சட்டத்தின் கட்டுமானமே இந்த அரசால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
முதலாவதாக, நாடாளுமன்ற இறையாண்மையை எடுத்துக்கொண்டால், இந்த மாபெரும் அவையை இந்த அரசு மதித்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
மணிப்பூர் படுகொலைகள்!
இந்த 17ஆவது மக்களவையில் 221 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மசோதாக்கள் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான விவாதம் அல்லது விவாதம் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டன. மணிப்பூரில் அரங்கேறிய மிக மோசமான இனப்படுகொலைகள் குறித்து கூட எந்த விவாதமும் இந்த அவையில் நடத்தப் படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் என்பது வெறும் காகித அளவிலான குழுக்களாக சுருங்கிவிட்டன. உதாரணமாக இந்த அவை நடவடிக்கைகளின் போது வெறும் 16 விழுக்காடு மசோதாக்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்காக நிலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. இதற்கு நேர்மாறாக, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, 71 விழுக்காடு மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. முக்கிய மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டதால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே அதன் மீது கருத்து தெரிவிக்கும் நிலை இருந்தது.
நீதிபதிகளின் பதவி உயர்வில் ஒன்றிய அரசின் தலையீடு
நீதித்துறையின் பக்கம் சென்றால், இந்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அறிவிக்கப்படாத அவசரநிலை நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் விடுத்துள்ள அச்சுறுத்தல் என்றே எடுத்துக்கொள்ள முடியும்.
சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி உயர்வு அல்லது ஓய்வுக்குப் பிந்தைய வேலைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியின் கூட்டங்களில் கலந்து கொண்டு இந்த நாட்டில் கேள்விப்படாத மொழியில் உரைகளை நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர். நீதிபதிகளின் கொலீஜியம் இடமாற்றத்தை சட்ட அமைச்சகம் செயல்படுத்தவில்லை.
உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்படும் நீதிபதிகளின் பதவி உயர்வு நியமனங் களில் அரசு தலையிடுகிறது.
ஒவ்வொரு முறையும், நேர்மையான நீதிபதிகள் இரக்கமின்றி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் – அவர்களுக்கு நோய்வாய்ப்பட்ட பெற்றோர் அல்லது மனைவி இருக்கும் சூழ்நிலைகளில் கூட இந்த நிலையே நிலவுகிறது. மேலும், தங்கள் மனசாட்சிப்படி செயல்படும் நீதிபதிகளின் பதவி உயர்வு சட்ட அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவதில்லை என்பதுடன் உச்ச நீதிமன்றம் தனது பரிந்துரைகளை பலமுறை வலியுறுத்திய போதிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தை இப்படித்தான் இந்த அரசு நிலை நிறுத்தியுள்ளது என்கிற போது இது கொண்டாடப்பட வேண்டிய விஷயமா என்கிற அய்யம் நிலவுகிறது.
இடஒதுக்கீட்டை தகர்த்தெறியும் நடவடிக்கை!
மூன்றாவதாக, சமூக நீதி என்ற கருத்தாக்கத்திற்குச் சென்றால், உயர்கல்வி நிறுவனங்கள் உள்பட கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தகுதி என்ற போர்வையில் இட ஒதுக்கீட்டை தகர்த்தெறியும் வகையில், ஒன்றிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அமைந்துள்ளது.
நீதித்துறையில், 82 விழுக்காடு நீதிபதிகள் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே அமைப்பு என்பது உயர் நீதித்துறை மட்டுமே. ஒவ்வொரு முறையும் இந்தப் பிரச்சினையை எழுப்பும்போது, அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்றே ஒன்றிய அரசு கூறுகிறது. மாறாக ஒன்றிய அரசு என்ன செய்தது? அரசியல் சட்டத்தை திருத்தவில்லையா? ஒன்றிய அரசு ஏன் அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீடு வழங்கக்கூடாது?
மேலும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியல் சட்ட இடஒதுக்கீட்டுக்காக நேரு கொண்டு வந்த முதல் திருத்தமே இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்குவதாக இருந்தது. 10 ஆண்டுகளில் இந்த ஒன்றிய அரசு என்ன செய்தது?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அச்சம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க திருத்தம் செய்துள்ளது. இதற்கு நேர் மாறாக எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டும் என்ற அச்சத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இந்த அரசு அஞ்சுகிறது. 1931–ஆம் ஆண்டின் தரவுகள் மிகவும் பழையனவாகவும், மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய நிலையிலும் உள்ளது. நீங்கள் இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்புக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, நீதித்துறையால் கொண்டுவரப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான செயற்கையான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் வகையில், அரசியல் சட்டத்தை திருத்த எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. இது கொண்டாடத் தக்கதா?
மொழி உரிமை துடைத்தெறியப்படுகிறது
நான்காவது மொழி உரிமையை எடுத்துக் கொண்டால், ஹிந்தித் திணிப்பின் காரணமாக மொழிவாரி பன்முகத்தன்மைக்கான அரசமைப்பு உத்தரவாதம் துடைத்தெறியப்படுகிறது. சட்டப்பிரிவு 348–அய் மீறி ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியில் பெயரிடப்பட்ட மசோதாக்களை இந்த மோடி அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதுதான் அரசியல் சாசனத்தின் மீது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வைத்திருக்கும் மரியாதையா?
ஆளுநர்களின் செயல்பாடுகள்
அதுமட்டுமின்றி, ஆளுநர்கள் மாநில சுயாட்சிக்கும், கூட்டுறவு கூட்டாட்சிக்கும் சாவு மணி அடிக்கும் வகையில் அரசியல் எதிரிகளாக செயல்படுகிறார்கள்.. மாநில அரசுகளின் கொள்கைகளில் இருந்து முரண்படுவது, மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்துவது, தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. இதையும் நாம் கொண்டாட வேண்டுமா?
தென்மாநிலங்களுக்கு நியாயமற்ற நிதி ஒதுக்கீடு!
இறுதியாக, ஜி.எஸ்.டி., மற்றும் நியாயமற்ற நிதி ஒதுக்கீட்டின் மூலம் தென் மாநிலங்களை பொரு ளாதார ரீதியாக அடிமைப்படுத்துவது. இந்தியாவின் வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்கும் தென் மாநிலங்களானது பாஜகவை நிராகரிக்கும் ஒரே காரணத்திற்காகவே தண்டிக்கப்படுகின்றன. எனவே, இத்தகைய காரணங்களினாலும், நமது அரசமைப்புச் சட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இழைத்துள்ள அநீதியாலும் இன்றைய சூழ்நிலையில் நமது அரசமைப்பைக் கொண்டாடுவதற்கான எந்த காரணத்தையும் இந்த பாஜக அரசு நமக்கு வழங்க வில்லை.
2029 –ஆம் ஆண்டு ஒன்றியத்தில் திமுக கூட்டணி ஆட்சிப்பொறுப்பில் அமரும்போது நிச்சயம் அரசமைப்பு சாசனத்தை கொண்டாடுவோம்!
இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் உரையாற்றினார்.