மறக்கப்படவே முடியாத டிசம்பர் 12
கலி. பூங்குன்றன்
டிசம்பருக்கு எத்தனையோ வரலாற்றுப் பதிவுகள் உண்டு. அறிவுலக ஆசான் தம் இறுதிப் பேருரையை நிகழ்த்தியது இந்த டிசம்பரில்தான் (19.12.1973).
தந்தை பெரியார் தம் வாழ்நாளில் எத்தனையோ மாநாடுகளை நடத்தியதுண்டு. அந்த வரிசையில் 1973 டிசம்பர் 8,9 ஆகிய இரு நாள்களிலும் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை நடத்தினார்.
அதே டிசம்பர் 24இல் (1973) தனது இறுதி மூச்சைத் துறந்தார் என்று தந்தை பெரியாரைச் சுற்றி டிசம்பர் திங்கள் பயணித்திருக்கிறது.
அந்த டிசம்பரில்தான் கடந்த 12ஆம் தேதி – தந்தை பெரியார் தலைமையேற்று வைக்கத்தில் நடத்திய தீண்டாமை ஒழிப்பு வெற்றி விழா நூற்றாண்டும் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் தலைவர் – சமூக நீதிக்கான சரித்திர நாயகர் – தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆர்வம் கலந்த கடமை உணர்ச்சியும், பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் கையிணைத்து இந்த வரலாற்றுச் சிறப்பு மிகு விழாவிற்கு மகுடம் சூட்டினர்.
தமிழ்நாடு அரசு எட்டரை கோடி ரூபாய் செலவு செய்து, தந்தை பெரியார் சிலை புனரமைப்புச் செய்யப்பட்டது. நினைவகமும் புத்தம் புதிய ஒளியில் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவுக் கருவூலமான தந்தை பெரியாருக்குப் பொருத்தமாக நூலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் படகு மூலம் வைக்கத்திற்கு வந்து சேர்ந்த இடத்திற்குப் பக்கத்தில் விழாப் பேருரைகள் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட மண்டபத்தைப் பார்த்தபோது, மழைக்காக ஏதோ தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
போராட்டக் களம்
வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவாற்றும் களமாகவும் அது இருந்திருக்கிறது.
தந்தை பெரியார் களம் கண்ட அந்த வைக்கத்தைக் காணப் போகிறோம் என்ற களிப்பிலும், உற்சாகத்திலும் முதல் நாளே மக்கள் திரள ஆரம்பித்து விட்டனர்.
நினைவுச் சின்னங்களை விழா நிகழ்ச்சி நாளில் கூட்ட நெரிசலால் பொறுமையாக நின்று பார்க்க முடியாது என்ற எண்ணத்தில் முதல் நாளே வந்தவர்கள்தாம் அவர்கள்
நினைவகத்தின் வளாக நுழைவில் நடுநாயகமாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை ஒளி வீசியது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, கூட்டங்கள் நடத்தும் வண்ணம் சுற்றிலும் பார்வையாளர்கள் அமருவதற்கான இருக்கைகள் (காலரி) என்றெல்லாம் எழில் வண்ணத்தோடு – கலை உணர்ச்சியோடு உருவாக்கப்பட்டுள்ளன.
கருஞ்சட்டைகள்
குமரி முதல் சென்னை வரை என்று சொல்லும் அளவுக்குக் கருஞ்சட்டையினர் பேருந்துகள் வாயிலாகவும் மற்றும் பல்வேறு வாகனங்கள் வாயிலாகவும் வந்து குவிந்த வண்ணமிருந்தனர்.
வயது முதிர்ந்த கருஞ்சட்டைத் தோழர்களையும் காண முடிந்தது; அத்தகைய ஒரு சிலரிடம், இந்த வயதில், இந்த உடலில் வந்திருக்கிறீர்களே என்று கேட்டபோது, மிக்க உணர்ச்சிப் பெருக்கில்… ‘‘அய்யா அவர்கள், எந்தவித வசதி வாய்ப்புகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இன்னொரு மாநிலத்திற்கு வந்து போராடி, வெற்றி பெற்று இருக்கிறார்களே! அந்த ஊரின் மண்ணைப் பார்க்க வேண்டாமா?’’ என்று சொல்லும் போதே பொலபொலவென்று அவர்களின் கண்கள் ஆனந்த நீரை உதிர்த்தன – உணர்ச்சிமயமான தருணம் அது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செய்தியாளரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன செய்தி மெய்ச் சிலிர்க்கச் செய்தது. அவர் முதல் நாளே வைக்கம் வந்து சேர்ந்து விட்டார் – செய்திகளைத் திரட்டுவதற்கு. அவர் சொன்ன செய்திதான் என்ன?
வைக்கம் மகாதேவர் கோயில் மதிலைச் சுற்றிக் கடைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. அந்தச் செய்தியாளர் ஒரு கடைக்காரரிடம் வைக்கம் போராட்டம் பற்றிப் பேச்சுக் கொடுத்ததுதான் தாமதம். ஒரு டிராயரைத் திறந்து ஒரு போட்டோவை எடுத்துக்காட்டி (தந்தை பெரியாரின் படம்தான் அது) ‘‘இந்த நாயக்கர் இங்கு வந்து போராடவில்லையென்றால், நாங்கள் எல்லாம் இப்படி இந்த இடத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யவும் உரிமை கிடைத்திருக்குமா?’’ என்று நன்றி உணர்ச்சியோடு நா தழுதழுக்கச் சொன்னதை – அந்தச் செய்தியாளர் சொன்ன பொழுது உணர்ச்சிப் பிழம்பானோம்!
வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்குவதற்கு மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து தொலைநோக்கோடு நேர்த்தியான செயல்பாடுகள்!
என்னே தமிழ்நாட்டு அலுவலர்களின் கடமையுணர்வும் – செயலாற்றலும்! தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு அவர்களின் ஆளுமை பளிச்சிட்டது.
5000க்கும் அதிகமாக நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அதற்கு மேலும் மக்கள் திரண்டதால், இருக்கையில் அமர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக நின்றவர்களும் இருந்தனர்.
இரு மாநில முதலமைச்சர்கள்
இரு மாநில முதலமைச்சர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும் மற்றும் இரு மாநிலங்களின் அமைச்சர்களும் தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி திறப்பு விழா நிகழ்வுக்குச் சென்றனர்.
தந்தை பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்படி கேரள முதலமைச்சரையும் இணைத்து, ரிப்பனைக் கத்தரித்து வரலாற்றில் நின்று பேசும் நினைவகத்தைத் திறந்து வைத்தனர்.
நூலகத்தைத் திறக்குமாறு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரை முருகனிடம் கத்தரிக்கோலைக் கொடுத்தார் பெருந்தன்மையின் சின்னமான தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல நூலகத் திறப்புக் கல்வெட்டினை திறந்து வைக்குமாறு தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் கேட்டுக் கொண்டபடி திறப்பு விழா நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற்றன.
இந்த நிகழ்வுகள் நடைபெறும் அதே நேரத்தில் விழா நடைபெறும் இடத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கண்டு மகிழும்படி காணொலி காட்சி திரையிடப்பட்டிருந்தது சிறப்பு!
காலை 10.30 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் வெற்றிவிழா தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரையாற்றினார். (இவர் தமிழ்நாடு அரசின் 50ஆவது தலைமைச் செயலாளர் ஆவார்).
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தனது 11 நிமிட உரையில் தமிழ், ஆங்கிலம் கலந்து (மலையாளத்திலும்) எழுச்சியுரையாற்றினார்.
முத்தாய்ப்பாக இந்திய அரசமைப்புச் சட்டம் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி (Caste) ஒழிக்கப்படுகிறது என்று மாற்றம் செய்யப்பட வேண்டும். தந்தை பெரியாரின் வைக்கம் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்கும் உறுதிமொழியாகட்டும் இது! அதற்காக சமூகநீதியாளர்கள் முன் கைநீட்ட வேண்டும் என்றார்.
சமூகப் புரட்சி
விழாவுக்குத் தலைமை வகித்த கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி பற்றியும், பொதுவுடைமைக் கொள்கையில் அவருக்கிருந்த ஈடுபாடு குறித்தும் விரிவாகப் பேசினார். 1931ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவுக்கு அவர் பயணிக்கும் முன்னதாகவே மார்க்ஸ் – ஏங்கல்ஸ் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து அவர் நடத்திய ‘குடிஅரசு’ இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டது குறித்தும் பெருமிதமாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு முதல் அமைச்சரின் உணர்ச்சியுரை
தந்தை பெரியார் கண்ட வைக்கம் போராட்டம்தான் சுயமரியாதை இயக்கத்திற்கு வித்து என்றும், இலட்சிய வரலாற்றின் வெற்றிக்களம் வைக்கம் என்றும், தந்தை பெரியார் வழியில் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று சூளுரைத்தார்.
(வைக்கம் வெற்றி விழா நிறைவுற்று சென்ைன திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் 14.12.2024 நாளிட்ட முரசொலியில் ‘‘இலட்சிய வைராக்கியத்தின் வெற்றிக்களம் வைக்கம்’’ என்று சீரியதோர் கட்டுரையைத் தீட்டினார். ‘‘தனக்கு எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத ஓர் ஊரில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் உரிமைக்காகக் களம் கண்ட தந்தை பெரியாரின் போராட்ட உணர்வுதான் சுயமரியாதை இயக்கத்தின் விதையானது. அது திராவிடர் கழகமாக உருவெடுத்தது. பெரியாரிடம் பயின்ற அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் மக்கள் தந்த ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளைச் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிலை நாட்டினர்’’ என்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை தீட்டியிருந்தது இங்கு எடுத்துக்காட்டத்தகுந்தது.
கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் நன்றியுரையாற்றினார். நாட்டுப் பண்ணுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் வைக்கம் வெற்றி நூற்றாண்டு விழா நேர்த்தியாக நிறைவுற்றது என்றாலும் நம் நெஞ்சத்தைவிட்டு அகலாத அழியாத ஒரு பெரும் விழா அது என்றால் மிகையாகாது.
12ஆம் தேதியோடு அந்த விழா நிறைவடைந்து விட்டது என்ற எண்ணாமல், அதன் எழுச்சியை அதன் நோக்கத்தை நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தமிழ்நாடு தழுவிய அளவில் 100 பொதுக் கூட்டங்களை நடத்திட கழகத் தலைவர் பணித்துள்ளார். அடுத்த கணமே பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!
வைக்கம் விருது
“வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்” நூற்றாண்டு நிறைவு விழாவில் கடந்த 12ஆம் தேதியன்று – ஜாதி ஒழிப்பு, சமூகநீதி சமத்துவம், பகுத்தறிவு சிந்தனையோடு செயலாற்றுவோருக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” அளிப்பது என்ற தமிழ்நாடு அரசின் திட்டப்படி முதல் விருது – கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரிய முற்போக்கு எழுத்தாளர் தேவநூர மகாதேவா அவர்களுக்கு விருது வழங்கியும் ரூ.5 லட்சம் காசோலை வழங்கியும் பாராட்டிச் சிறப்புச் செய்தார் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மாறி மாறி மாரிகள்!
வைக்கம் விழாவில் பங்கேற்ற கழகத் தலைவர்
11 நிமிடங்களில் கருத்து மாரி பொழிந்தார்.
விழா முடிந்த நிலையில் கேரள மாநில
கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு
வி.என்.வாசவன் கழகத் தலைவரைக் கட்டி அணைத்து அன்பு மாரி பொழிந்தார்.