ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம்!
‘‘, ஒரே கலாச்சாரம்– பார்ப்பனிய கலாச்சாரம்’’ என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்!
ஈரோடு, டிச.21 ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி– சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம்– பார்ப்பனிய கலாச்சாரம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்; இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா? தயவு செய்து எண்ணிப்பார்க்கவேண்டும் நீங்கள். இந்த மாநாட்டினை ஒரு கொண்டாட்டத்திற்காகப் போடவில்லை. நம் முன் உள்ள பணிகள் ஏராளமாக இருக்கின்றன என்பதற்காகத்தான் நண்பர்களே, இதுபோன்ற மாநாடுகளை நடத்துகின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா!
கடந்த 26.11.2024 அன்று மாலை ஈரோட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தீண்டாமைக்கு மூலாதாரம் எது?
‘‘அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது’’ என்று மட்டும்தான் நீங்கள் எழுதியி ருக்கிறீர்களே தவிர, தீண்டாமைக்கு மூலாதாரம் எது? ஜாதி – அந்த ஜாதியை ஒழிக்காமல், தீண்டாமையை எப்படி ஒழிக்க முடியும்?
சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா?
ஆகவே, ஜாதியை ஒழிக்க உத்தரவாதம் சொல்லுங்கள்.
சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா?
நேரிடையான கேள்வி இது!
சுதந்திர நாட்டில்
‘‘பார்ப்பான் என்ற ஒருவர், பறையன் என்ற ஒருவர்,
பிராமணன் என்ற ஒருவன், சூத்திரர் என்ற ஒருவர்,
உயர்ஜாதி என்று ஒருவர், கீழ்ஜாதி என்று ஒருவர்
தொடக்கூடியவர் ஒருவர், தொடக்கூடாதவர் ஒருவர் என்ற பேதம் இருக்கலமா?
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கொடுமை இருக்கலாமா?
அறிவு இல்லாத காலத்திலேகூட இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் இருக்கலாமா? சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லக்கூடிய நாட்டில் இருக்கலாமா?’’ என்று கேட்டுத்தான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது.
அழகாகச் சொன்னாரே, நம்முடைய டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக அந்தப் பணிகளையெல்லாம் சொன்னார்.
நண்பர்களே, இன்றைக்கு நாம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றோம்.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை!
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மிக அழகாகச் சொல்லி யிருக்கிறார்.
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith and worship;
EQUALITY of status and of opportunity;
and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
நீதி, சமூகநீதி, பொருளாதாரம் மற்றும் அரசியல்.
சமூகநீதிதான் முதலில்.
சுயமரியாதை இயக்கம் பிறந்தது எதற்காக?
சமூகநீதிக்காகத்தான்!
அரசமைப்புச் சட்ட முகப்புரை எப்பொழுது?
1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு.
சுயமரியாதை இயக்கம் பிறந்தது எப்பொழுது?
1925 ஆம் ஆண்டு.
அதற்கு முன்பு நீதிக்கட்சி. இவையெல்லாம் தொடர்ச்சி யாக வருகிறது என்றால், திராவிடர் இயக்கம் இந்த நாட்டில், மனிதர்களை, மனிதர்களாக ஆக்குவதற்காக, சமத்துவம் உள்ளவர்களாக ஆக்குவதற்காக எப்படி வந்திருக்கிறது பாருங்கள்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்!
நேரமின்மை காரணத்தினால், புத்தகங்களை இங்கே அறிமுகப்படுத்தினோம்.
‘‘திராவிட இயக்க சமூகப் புரட்சி!’’
அதில் ஒரு புத்தகம், ‘‘திராவிட இயக்க சமூகப் புரட்சி” என்ற தலைப்பில், 95 ஆண்டுகளுக்கு முன்பு, 1927 ஆம் ஆண்டு சென்னையில் பார்ப்பனரல்லாத மாநாடு நடைபெற்றது.
தந்தை பெரியார்தான் அழைத்துப் போகிறார். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னவென்று தெரியுமா?
இதுபோன்ற புத்தகங்களைப் படித்தால்தான், வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
சூத்திரன் என்ற பெயர் இருக்கிறதே, அது அரசாங்கப் பதிவேடுகளிலேயே இருந்தது.
எப்படி ‘‘பறையன்” என்ற வார்த்தையைப் போட்டிருந்ததை, நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ‘‘ஆதிதிராவிடர்” என்று மாற்றினார்கள்.
அதற்குப் பிறகும்கூட ‘‘சூத்திரன்” என்று இருந்தது. பானகல் அரசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்கள் இதுபற்றி சொன்னவுடன், டாக்டர் நடேசனார், சென்னை மாநகராட்சியிலேயே அதனைத் தீர்மானமாகக் கொண்டு வந்து மாற்றினார்கள். இவையெல்லாம் வரலாறாகும்.
நீதிக்கட்சி கொடியின் படம்!
பார்ப்பனரல்லாத மாநாட்டில், அன்றைய பிரதமர் என்று சொல்லக்கூடிய பிரீமியர் பானகல் அரசர் உரையை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம்.
அந்தப் புத்தகத்தில் நீதிக்கட்சி கொடியின் படத்தைப் போட்டிருக்கிறோம். அந்தக் கொடியில் உள்ள சொற்களைப் படிக்கிறேன் கேளுங்கள்.
EQUALITY, FRATERNITY, LIBERTY, PROGRESS
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், முன்னேற்றம் – இந்த வார்த்தைகளைப் பொறித்து கொடியாகப் போட்ட ஓர் இயக்கம் – திராவிட இயக்கம்.
இதற்கு சமமாக – இதுவரையில் ஜாதி ஒழிப்பிற்கு இதுபோன்று எங்காவது செய்திருக்கிறார்களா? யாராவது விரலை மடக்க முடியுமா? என்று கேட்கிறோம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்கள் அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே விரோதம்!
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம் அல்லவா!
உச்சநீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கு!
எவ்வளவு தைரியம் இருந்தால், இரண்டு பார்ப்ப னர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC and to secure to all its citizens:
அய்ந்தம்சங்கள். அதில் இரண்டு அம்சங்கள் இல்லாமல், பின்னால் போட்டார்கள்.
அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சமத்துவம் என்று சொல்லிவிட்டோமே, அதற்குப் பிறகு அங்கே ஜாதிக்கு இடமில்லை. அதுதான் சோசலிசமாகும்.
ஆகவே, எழுத்தில் சொல்லாமலேயே, தத்துவத்தில் அது அடங்கியிருக்கிறது. ஆகவே, எழுத்தில் அது வேண்டுமா? மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் அம்பேத்கர் சொன்னாரே தவிர, அதனை எடுத்துவிடவேண்டும் என்று சொல்லவில்லை.
ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள்; உச்சநீதிமன்றம் அது செல்லும் என்று நல்ல அளவிற்குத் தீர்ப்புக் கொடுத்தது.
அதுமட்டுமல்ல, இடையில், சட்டத் திருத்தத்தின்மூல மாக வந்தது; அதனால், இது செல்லாது. பின்னோக்கிக் கொடுத்ததினால், செல்லாது என்று அவர்கள் சொன்ன வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
எதற்காக இதுபோன்ற வாதத்தை அவர்கள் உச்சநீதிமன்றத்தில் சொன்னார்கள் தெரியுமா? இதற்காக மட்டுமல்ல; நம்முடைய மண்டல் அறிக்கை போன்ற அறிவிப்புகள் – இதனை பெரியார் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான், ஆபத்துகள் என்னென்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
தமிழ்நாட்டில், சட்ட ரீதியான பாதுகாப்போடு உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு!
69 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே நம்மு டைய தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.
அதுவும் முதன் முறையாக சட்ட ரீதியான பாது காப்போடு இருக்கிறது. வெறும் அரசு ஆணை மட்டுமல்ல.
திருத்தப்பட்ட சட்டம் அது. அரசமைப்புச் சட்டத் திருத்தத்தோடு வந்தது. அது, பின்னோக்கி சென்றி ருக்கிறது.
இதையெல்லாம் அவர்கள் மனதில் வைத்துத்தான், இதனை முதலில் உடைத்துவிட்டால், பிறகு, அதையும் உடைப்பதற்காக அடுத்த கட்டம் செல்லலாம் என்பது தான் அவர்களுடைய திட்டம். அதற்காகத்தான் இதனை ஆரம்பித்தார்கள். சோசலிசம் கூடாது; செக்குலரிசம் கூடாது என்று.
பிறகு என்ன தேவை?
சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை!
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம், பார்ப்பனிய கலாச்சாரம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்தால், இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா?
தயவு செய்து எண்ணிப்பார்க்கவேண்டும் நீங்கள்.
இந்த மாநாட்டினை ஒரு கொண்டாட்டத்திற்காக போடவில்லை. நம் முன் உள்ள பணிகள் ஏராளமாக இருக்கின்றன என்பதற்காகத்தான் நண்பர்களே, இதுபோன்ற மாநாடுகளை நடத்துகின்றோம்.
அன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற பிரச்சா ரங்களை எப்படி நடத்தியிருக்கின்றார் தந்தை பெரியார் அவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
செருப்புத் தோரணமும் – தொண்டர்களின் கோபமும்!
இப்போது நமக்கு எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. ஆனால், அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் தனி மனிதராக இருந்தார். மலைபோன்ற எதிர்ப்புகள். சிவகங்கையில் அய்யாவையும், அண்ணாவையும் தோழர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வழியில், பழைய பிய்ந்துபோன செருப்புகளைத் தோரணமாகக் கட்டி, ஊர்வலத்தில் வருகின்றவர்களின் தலையில் படும்படியாக கட்டி வைத்திருந்தனர். அதைப் பார்த்த தோழர்கள் ஆத்திரமடைந்தனர்; அன்றைக்கு இருந்த தொண்டர்கள் குறைவாக இருந்தாலும், உயிரைத் துச்சமென மதித்தவர்கள். ஆகவே, அவர்கள் பாய்ந்து, அந்த செருப்புத் தோரணத்தைப் பிய்த்து எறிய முற்படுகின்றனர்.
உடனே அய்யா அவர்கள், ‘‘அதை அறுக்காதீர்கள்; அப்படியே இருக்கட்டும்” என்று சொன்னார்.
மாநாட்டு மேடைக்கு வந்தவுடன், அய்யா அவர்கள் பேசத் தொடங்குகிறார்.
இதுபோன்ற வரவேற்பு எனக்கு வேறு எங்கேயும் கிடைக்கவில்லை: தந்தை பெரியார்!
‘‘எனக்கு இந்த ஊரில், மிகவும் மகிழ்ச்சியான வரவேற்பு கிடைத்தது. இதுபோன்ற வரவேற்பு எனக்கு வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. ஏனென்றால், தென்னை ஓலை தோரணம் எங்கே வேண்டுமானாலும் இருக்கும். ஆனால், பிய்ந்து போன செருப்புகளால், பழைய செருப்புகளால் தோரணம் கட்டியிருக்கிறார்கள் என்றால், எங்க ளுக்காக அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு, முயற்சி யெடுத்து பழைய பிய்ந்து போன செருப்புகளை, எத்தனை வீடுகளுக்குச் சென்று தேடியிருப்பார்கள். இதனால், எங்களுடைய வேலை எவ்வளவு சுலபமாகிவிட்டது என்பதை நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும்’’ என்றார்.
‘‘செருப்பொன்று போட்டால்,
சிலை ஒன்று முளைக்கும்!’’
எங்கள் ஊரான கடலூரில், பெரியார்மீது ஒரு செருப்பை வீசினார்கள்; இன்னொரு செருப்பிற்காக ரிக்ஷாவை திருப்பச் சொன்னார் பெரியார் என்பது உங்கள் அத்தனைப் பேருக்கும் தெரியும்.
‘‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக் கும்” என்று கவிஞர் கருணானந்தம் பாட்டு எழுதினார்.
எந்த இடத்தில் செருப்புப் போடப்பட்டதோ, அந்த இடத்தில் பெரியாருக்குச் சிலை நிறுவிய இயக்கம் இந்த இயக்கம். அதுமட்டுமல்ல, பெரியாரை வைத்துக்கொண்டே சிலை நிறுவிய இயக்கம். அதுவும், பெரியாருடைய தொண்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார் என்று அந்தக் கல்வெட்டில் பதித்த இயக்கம் இந்த இயக்கம்.
தன் வாழ்நாளிலேயே தம் கொள்கைகள் வெற்றி பெற்றதை கண்ட ஒரே தலைவர்!
அண்ணா அவர்கள் சொன்னதுபோன்று, ‘‘உங்களு டைய வெற்றியை, உங்கள் வாழ்நாளிலேயே கண்ட தலைவர் நீங்கள்தான். இதுபோன்று உலக வரலாற்றில் எந்தத் தலைவரும் கிடையாது” என்பது வரலாறானது.
அப்படிப்பட்ட இந்த இயக்கம், எதிர்நீச்சல் அடித்துக்கொண்டு, எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை இன்றைக்குப் பார்க்கிறோம்.
(தொடரும்)