தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர் கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார். தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வகுப்புரிமைக் கொள்கைக்காக வெளியேறிய நிலையில் அங்கேயே ஒரு பார்ப்பனர் அல்லாதார் மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாட்டுக்குத் தலைவராக இருந்தவர் கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார்.
அவர் தந்தை பெரியார் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். “அய்யா! இப்போதைக்கு பார்ப்பனிய எதிர்ப்போடு நிறுத்திக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை, சமய நம்பிக்கை முதலியவற்றை எதிர்ப்பதை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடுங்கள். பார்ப்பனிய எதிர்ப்பு வெற்றி பெறும் போது, மற்ற எதிர்ப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். “குடிஅரசை” அம்முறையில் நடத்தினால் பலரும் வாங்கிப் படிப்பார்கள். நானும் என்னாலான உதவியைச் செய்கிறேன்” என்றார்.
அதற்கு தந்தை பெரியார் சொன்ன பதில் :
“அய்யா, சொல்வது புரிகிறது. நான் “குடிஅரசை” நடத்துவது என்னுடைய புகழையோ, செல்வாக்கையோ வளர்த்துக் கொள்ள அல்ல; அதை வைத்துப் பிழைப்பு நடத்தவும் அல்ல. தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் நிலைவரும். இக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வேண்டிய கருத்துக்களை நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் இழப்பைப் பொருட்படுத்தாது, “குடிஅரசை” வெளியிட்டு என் கருத்தை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது என்னுடைய கடமை” என்று பதிலளித்தார்கள்.
(ஆதாரம்: ‘குடிஅரசு’, 10.6.1929)